எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Wednesday, April 28, 2010

குரங்குக்குத்தெரிந்த மனிதஉரிமை

இது சிரிக்கவேண்டிய விடயமல்ல; மாறாக, சிந்திக்கவேண்டியவிடயம்.
இக்காட்சியைக் கூர்ந்து அவதானித்தால் , பலவிடயங்களைப்புரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே, அது நன்கு பழகியகுரங்கு. அதிலும், புத்திக்கூர்மையுள்ள வகைகளிலொன்றாகக்கண்டறியப்பட்ட சிம்பன்சி எனப்படும் வகையைச்சார்ந்தது.
இவருக்காகவே பிரத்தியேகமாக அஃதங்கே கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும் இவரை அது , கண்டுகொள்ளவேயில்லை.
”நீ யாராயிருந்தால் எனக்கென்ன ?” என்பதுபோல் வாடியமுகத்துடனேயே காணப்படுகிறது.
இவரோ, அது தன்னை நிமிர்ந்துபார்த்துவிட்டால் அடையாளங்கண்டுகொள்ளும் என்பதுபோல, நீண்டநேரமாக அதற்கு, கைலாகுகொடுத்தும், அதன் முகத்துக்கு நேரேநின்று சிரிப்புக்காட்டியும் அதன் கவனத்தை ஈர்க்கப்பெரும்பாடுபடுகிறார்...
இத்தனையாயிரம் தமிழர்களைக்கொன்றொழித்த மகாபராக்கிரம சூரன் -ராக்‌ஷசபட்சே சகோதரர்களில் ஒருவன் வந்திருக்கிறேன்.....அப்படி இதற்கு என்னைத்தெரியாமலிருக்குமா என்பது போல.
ஒருவேளை அதனிடமிருந்து ஒரு ‘சல்யூட்’ ஐ எதிர்பார்த்திருப்பாரோ என்னமோ.

சாதாரணமாக, குரங்குகள்தாம் தேவையில்லாமல் அடுத்தவர்களைச் சீண்டிக்கொண்டேயிருக்கும். இதனாற்றான், குரங்குச்சேட்டை என்றசொல்லே வந்தது. இதை, ‘ தமிழ்மறவர்’ இணையதளத்தில் ‘நகைச்சுவைக்கணொலி’ இலும் நேயர்கள் காணலாம்.

ஆனால், இங்கோ நிலைமை தலைகீழாகவே காணப்படுகிறது.

பலதடவைகள் இவர் அதன் கைகளைப்பிடித்துக்குலுக்கியும், கையிலேயே கீச்சுமூச்சுக்காட்டியும் செய்த தொந்தரவுகளைச்சகித்துக்கொண்டு, தனக்கு அவரைக்காணவே பிடிக்கவில்லையென்பதை மறைமுகமாக அது உணர்த்தியும்,

புரிந்துகொள்ளாமல், மென்மேலும் தொடர்ந்து இவர் சீண்டிக்கொண்டேயிருந்தமையினாலேயே அது, பொறுமையிழக்கவேண்டியநிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது.

இவ்வளவுபேரில் இவரைமட்டும் அதற்குப்பிடிக்காமற்போனமைக்குக் காரணம் என்னவாயிருக்கும்?

மனித உரிமைகளையே மதிக்கத்தெரியாத இவன் , மிருக உரிமையை எங்கே மதிக்கப்போகிறான் என்று நினைத்ததோ என்னமோ?

Tuesday, April 20, 2010

டீச்சர்! அவந்தாங் கிள்ளினான் டீச்சர்!


தமிழக அரசியல்வாதிகளா ? இவர்கள் ஒரு தனிரகம் !
இவர்களைவிட இராட்சஷபட்ஷே திறம் என்று சொல்லலாம் போலிருக்கிறது.
இவர்களை அவர்கள் ‘கோமாளிகள்’ என்றார்கள் ; இவர்களும் அதை உண்மையென்று நிரூபிக்கும்வகையிலேயே நடந்துகொள்கிறார்கள்.
அரசியல்வாதிகள் போலவா பேசுகிறார்கள்?
பாலர்பள்ளிக்குழந்தைகள், “ டீச்சர்! இவன் என்னக்கிள்ளினான் டீச்சர்! - இல்ல டீச்சர்! அவந்தா மொதல்ல என்னக்கிள்ளினான் டீச்சர்! “ என்று ஆளுக்காள் குற்றஞ்சாட்டிக்கொள்வதைப்போல,
கருணாநிதிதான் காரணம் என ஒரு சாரார் கைகாட்ட -
ஜெயலலிதாதான் காரணம் என்று மற்றொருசாரார் முழங்க .....

இரண்டையுமே தவிர்த்து, மத்திய அரசே காரணம் என்றும் ஒரு புதுக்காரணம் முளைக்கிறது.

இவைகளையெல்லாம்தாண்டி, ஆங்காங்கே கொசுறுக்காரணங்களும் பிசுபிசுக்கின்றன சுப்பிரமணியன்சாமி போன்ற அசல்கோமாளிகளிடமிருந்து.

இவர்கள் காரணத்தைக்கண்டறிவதற்கிடையில், அந்த வயதானதாய்க்கு , மேலும் வயதாகிவிடும்.
இந்த குதம்பல் அரசியல்வாதிகள்,எதையுமே தமது அரசியல்நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளப்பயன்படுத்திவிடுகிறார்கள்.

மரணவீடுகளில்கூட, தமக்கு அங்கே என்ன தேறும் என்றகணக்கையே போடுகிறார்கள்.

ஆனாலும்,இங்கு, ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது என்னவோ தமிழன்தான்!!

ஆண்டாண்டுகாலமாகவே அடிமைத்தனம் பழக்கப்பட்டுவிட்டதால், சுதந்திரம் என்ற சொல்லின் பொருளே தமிழனுக்கு, ‘ மானாட உமனாட’ (man ஆட woman ஆட) இரசிப்பதுதான் என்றாகிவிட்டது.

பார்வதியம்மையார் வந்த விடயமே தமக்குதெரியாதாம்;
எவ்வளவு எகத்தாளமான பேச்சு!

கருணாநிதி காட்டில் மழைபெய்கிறது! யார் என்னசெய்யமுடியும்?

எங்கோ உள்ள சச்சின் டெண்டுல்கர் - இவர் சம்பந்தப்பட்ட அரசியல்,தமிழ்க்கவிதை என்று எந்தத்துறையிலுமே இல்லாதவர்;
அவர் இரட்டைச்சதம் அடித்தால் அடுத்தகணமே இவருக்குத்தெரிந்துவிடுகிறது;
அதற்கொரு பாராட்டுக்கவிதையும் பறக்கிறது.

ரம்பா திருமணஞ்செய்தால் அதுவும் தெரிகிறது.

இதுமட்டும்,தெரியவில்லையாம்.

ஒருவேளை , அணிந்திருக்கும் கறுப்புக்கண்ணாடியின் தவறாக இருக்குமோ?

வாசல்வரை வந்த வயதான தாயை விரட்டியடித்துவிட்டு, மீண்டும் தனது இலச்சினை பொறித்து வரவழைக்கப்போகிறாராம் கருணாநிதி!

எதற்குத்தெரியுமா?

வழக்கமானபாணியில் வாய்கிழியப்பேசுவதற்கு.

“ பிரபாகரன் எனது நண்பர் என்று
சொன்னேன் அன்று ;
அதை நிரூபித்துக்காட்டியிருக்கிறேன் இன்று.
அதனால்தான் அவரது தாய்க்கு , தமிழக அரசே முன்னின்று
வழங்கியிருக்கிறது சிகிச்சை ஒன்று.”

அப்படி இப்படி ஏதாவது புலம்பித்தள்ளி ,மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கு.

என்னதான் இவர்கள் ஆட்டங்காட்டினாலும், அடிப்படை உண்மையை மக்கள் உணராமலுமில்லை.

ஆனாலும், திராவிடக்கட்சிகளின் தில்லுமுல்லுஅரசியலில்சிக்கி, சீரழிந்துகொண்டிருப்பதால் , மக்களால் தற்காலிகமாக எதுவும்செய்யமுடியவில்லை என்பதே உண்மை!

ஜனநாயகம் எனும் போர்வையில் , இந்தத்திராவிடக்கட்சிகள் செய்யும் கொடுங்கோல் ஆட்சி, வெகுவிரைவில் முடிவுக்குவரத்தான் போகிறது -

ஈரானின் ஷா, நேபாளத்தின் பிரேந்திரா/கயனேந்திரா, பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ் போன்ற கொடுங்கோலர்களின் ஆட்சி மக்களாலேயே தூக்கியெறியப் பட்டதுபோல

Sunday, April 18, 2010

மே 18 - இந்தநாள் கொடியநாள்


கவனம் தமிழா! கவனம்!

வைகாசித்திங்கள்( ஆங்.) 18ம் நாள்.

முள்ளிவாய்க்கால் படுகொலை என்று அறியப்பட்டதினம் இது!

அறிந்தும் அறியாததுபோல் - தெரிந்தும் தெரியாததுபோல்
உலகமே கண்ணைமூடிக் கொண்டிருக்க,
இந்தியக்கோட்டான்களும் சிங்களக்குரங்குகளும் சேர்ந்து
ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்களை உயிரோடு புதைத்ததினம் இது!!

தமிழுறவுகளைத்தொலைத்தமையை எண்ணி,
முழுத்தமிழினமுமே கலங்கிநிற்கும் நாள் இது!

மனிதத்தைத்தொலைத்தமைக்காக முழு உலகமுமே
வெட்கித்தலைகுனியவேண்டிய நாள் இது!

தமிழனாகப்பிறந்த ஒவ்வொருவனும்
தலையிலடித்துக்கதறியழ வேண்டிய நாள் இது!!

அழுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் ,அன்னைதமிழ் துயர்போக்கும்
அடுத்தகட்ட நகர்வுக்காக வீறுகொண்டெழவேண்டியநாள் இது !!!


இந்தநாளைக்கூட ‘ இனிய நாள்’ என்று சொல்ல, சில சுயநலப்பேய்கள் - எமக்கு அறிவுரை சொல்லும் போர்வையில், எமது விருந்தினர் அறையினுள்ளேயே , எமது தொலைக்காட்சிப்பெட்டியினூடே நுழையக்கூடும் !!!

எமதுறவுகள் பட்ட அவலங்களில் குளிர்காயமுனையும்
இக்கருங்காலிகள் குறித்து, கவனமாக இருப்போம் !

எமது கையையே எடுத்து, எமது கண்ணைக்குத்தவரும்
எத்தர்களிடம் எச்சரிக்கையாயிருப்போம் !!

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களினதும்,
அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தில்
மாண்டுபோன மக்களினதும்
மரணங்களை அர்த்தமுள்ளதாக்குவோம்!!!!!

தாயக விடுதலையை நோக்கி முன்னேறுவோம் !!! - ஏனெனில்..........

நாம் தமிழர் !!!!!!!!!!

வாழ்க தமிழ் !!!!!

Tuesday, April 13, 2010

தமிழ் மறவர் > அனைத்து இடுகைகள்

*.Battle at kruger-2
*.நிர்வாணம் - கவிதை
*.மானாடஆட..கவிதை
*.வத்திமன்னன்-சுகிசிவம்
*.ஜார்கண்ட் படுகொலை
*. மகி(இ)ந்தக்கல்லில் நார்?.........*.ஸ்ரீதரன் நா.உ. இன் கன்னிப்பேச்சு!
*. ஓ! மனிதா!..... ( ஒரு தமிழகத்தமிழனின் உணர்வலைகள்!)
*.பிரபாகரன் ஆண்டு !!!!
*.ஏக்க தமாய் கோகணா!
*.மகி சிவம் ஆனார் சுகிசிவம்
*.’ இர்ர் ‘ ஐ விட்டார் ஏ.ஆர்.ரஹ்மான் !!!!
*.’ காதுல பூ ‘ - கா.சிவத்தம்பி
*.நீதியின்பால் இக்பால்

Friday, March 26, 2010

2007 Jharghand

2007 ம் ஆண்டு , காந்தி?தேசத்தில் நிகழ்ந்த ஒரு குரூரம்!!



இதுதான் இந்தியா ! இதற்குக் காந்திதேசம் என்று அடைமொழிவேறு! இந்தக்காட்சியை இதில் பார்த்துக்கொண்டிக்கும்போதே எமது நெஞ்சுகனக்கிறது; துக்கம் தொண்டையை அடைக்கிறது. ஆனால், எவ்வளவுநிதானமாக-பட்டப்பகலில்-நட்டநடுத் தெருவில் இந்த அட்டூழியம்நடக்கிறது! ஒருஅப்பாவியைப் பலர்சேர்ந்து,விதவிதமாகத் தாக்குகிறார்கள்; அதை எத்தனைபேர் சுற்றிநின்று வேடிக்கைபார்க்கிறார்கள் ! இந்த வேடிக்கைபார்க்கும் கும்பலில் காவலர்களும்உள்ளடக்கம் என்பதுதான் இதன்முக்கியஅம்சமே! தாக்குதலுக்குள்ளானவர்கள் எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாதநிலையிலும் - வெறும் மண்புழுக்களாக நெளிந்துகொண்டிருந்த நிலையிலும், கொஞ்சங்கூட ஈவிரக்கமின்றித் தாக்குதல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
இத்தனைக்கும் அவ்விளைஞர்கள்செய்த தவறுதான்என்ன?
சனநாயகவழியில் தமது உரிமைகளுக்காகப் போராடியதுதான் அவர்கள்செய்த மாபெரும்தவறு.
இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், இன்னொருகும்பல், அங்கே மனுக்கொடுக்கவந்த ஆதிவாசிஇளம்பெண்களைத் துரத்திதுரத்தி வேட்டையாடுகிறது. இதுதான்தருணம் என்று அவர்களை நிர்வாணமாக்கிப்பார்க்கிறது.
நட்டநடுத்தெருவில் அந்தஅப்பாவி இளம்பெண் , தனது மானத்தையும் உயிரையும்காக்க, நிர்வாணமாக ஓடிக்கொண்டிருக்கிறாள். இன்னொருபெண்ணை ஒரு காடையன், நிர்வாணமாக்கி, அவளின் பிறப்புறுப்பில் தனது காலணிக்காலால் உதைகிறான்.
எவ்வளவு வக்கிரபுத்தி?
இதை அங்கு கடமையிலிருந்த பெண்காவலர்கூட ’பொண்ணுக்குப்பொண்ணு‘ என்றவகையிலாவது தடுக்கமுன்வரவில்லை. கூட்டத்தோடு கூட்டமாகநின்று வேடிக்கைதான் பார்க்கிறார். அவர்மட்டுமா ? முழுஇந்தியாவுமே இவ்வகையான அக்கிரமங்களை வேடிக்கைதான்பார்க்கிறது - பார்த்துக்கொண்டேயிருக்கிறது.
எல்லைதாண்டிய பயங்கரவாதமாம் ! அதை அடியோடு ஒழிக்கப்போகிறார்களாம்! பீற்றிக்கொள்கிறார்கள். இவர்களின் எல்லைக்குள்நின்றுகொண்டே பயங்கரவாதம் எல்லைதாண்டிப்போகிறதே!

Wednesday, March 24, 2010

வத்திமன்னன் - சுகிசிவம்


ஐயா சுகிசிவம் அவர்களே! தாங்கள் ஒரு அறிவுக்களஞ்சியமேதான்; ஒப்புக்கொள்கிறோம்.
ஆனாலும் தங்களிடம் பொதிந்துள்ளஅறிவு, கொஞ்சம் அளவுகடந்துதுவிட்டதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
தங்கள்பாணியிலேயே இதற்கு விடையளிக்க விரும்புகிறேன்.
‘அளவுக்குமிஞ்சினால் அமிர்தமும்நஞ்சு’ என்பது ஆன்றோர்வாக்கு.
நிரம்பி ‘வழியும்’ அறிவுகொண்ட தங்களுக்கு இந்தச்சின்னவகுப்புப்பாடம் தெரியாமலிருக்க நியாயமில்லை.
ஆனால், தாங்கள்இதிற்கையாண்ட சொற்பதங்களை அவதானித்தால், ’வெளிநாடுகளில் வாழ்பவர்களெல்லாம் சொகுசாகவாழ்கிறார்கள்’ எனும் பொறாமைதான் அதிற்பளிச்சிடுகிறது.
உண்மையிலேயே,அந்தமக்களுக்குஉதவுவதுதான் தங்கள்நோக்கமாக இருந்திருந்தால்:
‘எமதுமக்களுக்கு நாம்உதவாமல், வேறுயார் உதவுவார்கள்? அனைவரும்சேர்ந்து கைகொடுப்போம் வாருங்கள்!’ என்பதுபோலத்தான் அஃதமைந்திருக்கவேண்டும்.
இதைவிடுத்து, ‘ உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடிப்போனவர்கள்’ என்பதை, ஏதோ ஆரம்பப்பள்ளிஆசிரியர்போல அழுத்திச்சொல்லியிருக்கவேண்டிய அவசியமில்லை.
இந்த உயிரின்மீது யாருக்குத்தான் ஆசையில்லை. உங்களுக்கில்லையா? இல்லையேல் நீங்கள் தமிழர்இல்லையா? வாய்ப்புக்கிடைத்தால் எவரும் உயிரைக்காப்பாற்றிக்கொள்ளத்தான் செய்வார்கள் என்பது,மேதாவிகளுக்கு மட்டுமே புரியுமென்பதுமில்லை.
முள்ளிவாய்க்காலில் நமதுசொந்தங்கள் பதைக்கப்பதைக்க உயிரோடுபுதைக்கப்பட்டபோது, தாங்கள்எங்கு சந்திரமண்டலத்திலா இருந்தீர்கள்?
மேற்கத்தையநாடுகளில்வாழ்பவர்களைவிட, மிகஅருகில்-தாய்த்தமிழகத்திற்றானே இருந்தீர்கள்?
உங்கள் தொப்புள்கொடிஉறவுகளுக்குஉதவ, கால்நடையாகவேஅங்கு ஓடியிருக்கவேண்டாமோ?
சரி;அதுதானில்லை...அந்தஅவலங்களை நிகழ்த்தியவர்களுக்கெதிராக ஒருகுரலாவது கொடுத்திருக்கலாமே!
தமிழனின் வாழ்விடங்களையெல்லாம் அன்னியன் அழித்தொழிக்கும்வரை கண்களை இறுகமூடிக்கொண்டிருந்துவிட்டு -
தப்பித்தவறி, குண்டுவிழாத தமிழனின்வீடுகளில் எல்லாம்,அழித்தவனே குடியேறிநிலையெடுக்கும்வரை காத்திருந்துவிட்டு --
ஆக்கிரமித்தஎதிரியை இனி அசைக்கமுடியா தென்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டு -
தமிழனின் வீடுகளையே பறித்துத் தமிழனிடமே தரமுயற்சிக்கிறீர்கள்...
அதாவது, ‘ வழித்தேங்காயைத் தெருப்பிள்ளையாருக்கு’ அடித்துவிட்டு, அதே தேங்காயைச் சட்னிக்கும் பயன்படுத்தப்போகிறீர்கள்!- ’ஊராவீட்டுநெய்யே எம்பொண்டாட்டிகையே‘என்று...
உருக்குலைந்துபோன வீடுகளுக்காகத் தமிழனும் தமிழனுமே புடுங்குப்படட்டும் என்று மிகஅழகாக வத்திவைக்கிறீர்கள்.....
ஆஹா ! அறிவாளி மட்டுமல்ல.. நீங்கள் சகலகலாவல்லவன்! உங்களுக்கு‘சொல்வேந்தர்’ என்றொரு பட்டம் உள்ளதாமே!
இன்றிலிருந்து ‘ வத்திமன்னன்’ என்றபட்டத்தையும் ஈழத்தமிழர்சார்பாக உங்களுக்கு அளிக்கிறேன்.


அந்தநேரத்தில்,அங்கு வீடுமட்டுமா இல்லாமலிருந்தது?
காடையர்கள்வீசிய கொத்தணிக்குண்டுகள், இரசாயனக்குண்டுகளால் சுத்தமான காற்றே இல்லாமற்றானிருந்தது.
உண்ணஉணவில்லை; குடிக்கநீரில்லை; நிற்கவே இடமில்லை.
உடுக்கஉடையில்லை; ஏன்? உயிரேஇல்லை.
இல்லை இல்லை இல்லை இல்லை!
எங்கும் இல்லைமயமாகவே இருந்ததே!
அப்போது தாங்கள் என்னசெய்துகொண்டிருந்தீர்கள்?
ஒருவேளை இராமாயணசீதை அசோகவனத்திற்பட்ட அல்லலைநினைத்து அழுதுகொண்டிருந்தீர்களோ?
அழுதுகளைத்துவந்த கும்பகர்ணத்தூக்கத்திலிருந்து, இப்போதுதான் விழித்துக்கொண்டீர்களோ?
இவ்வளவுக்கும் திறவாதவாயை, தற்போது திறக்கவேண்டிய அவசியந்தான் என்ன?
கம்பன்கழகப்பட்டிமன்றம் எனும்போர்வையில் கொழும்புக்குச்சுற்றுலாச்சென்று, வீடுவீடாக விருந்துண்டுமகிழ்ந்தமைக்கு நன்றிக்கடன்செலுத்தவா?
மேற்கத்தையநாடுகளில்வாழும்தமிழர்களின் பெற்றோர்,உடன்பிறந்தோர்,சுற்றத்தார் ஆகிய இரத்தசொந்தங்களே ஈழத்தில்வாழ்கின்றனர்.
அக்கறையில்லாமலா அவர்களெல்லாம் ஆயிரக்கணக்கில்- இலட்சக்கணக்கில், கொட்டும்பனியையும் பொருட்படுத்தாது தெருவிலிறங்கிப் போராடினார்கள்?
அந்தப்போராட்டந்தானே இன்று, பலவழிகளில் அடக்கிவாசிக்கும்படி சிங்களத்தை மேற்குலகநாடுகள் வற்புறுத்தக்காரணமாய் அமைந்தது?
அதுமட்டுமா? ‘வணங்காமண்’ கப்பல்நிறைய அவசரஉதவிப்பொருட்களை அனுப்பிவைத்தார்களே!
அதைக்கூட, அவர்களுக்குக்கிடைக்கவிடாமல், உங்கள் ‘பெரியண்ணன் மகிந்தா’ தடுத்துவைத்ததை அறியாமலா இருந்தீர்கள்?
அக்கப்பல் சென்னைக்கும் வந்ததே! உள்ளூர்ச்செய்திகூடவா கிடைக்கவில்லை?
‘பிறர் கொடுப்பதைத்தடுப்பது பெரும்பாவம்’ என்பதற்கமைய, இப்பெரும்பாவத்தைப்புரிந்த அயோக்கியர்களுக்கெதிராகக்குரல்கொடுப்பது சான்றோர்களின்கடமை என்பது, தாங்கள்படித்த ஒருபுத்தகத்திற்கூடவா இல்லாமற்போயிற்று?
அவர்களின் சொந்தஉறவுகளின் மனநிலை,அவர்களைவிடவும், ஒருநாள்போய்விருந்துண்ட உங்களுக்கு அதிகமாகப்புரியும் என்றுநினைக்கிறீர்களா?
ஈழமக்களைப்பொறுத்தவரை, கஷ்டங்கள்-துன்பங்கள் என்பது _ இன்றுநேற்றல்ல! காலங்காலமாகவே பழகிப்போனசங்கதி. ஒருவீடு மட்டுமல்ல!;கிராமம்கிராமமாகவே வீடுகளைச்சிங்களரிடம் பறிகொடுத்தவர்கள்அவர்கள்! வெளிநாட்டிலுள்ளவர்களின்வீடுகளை வாங்கித்தரும்படி, உங்களைத் தூதனுப்பியிருக்கிறார்கள் என்கிறீர்கள். இது நம்பக்கூடியதாகவா உள்ளது?
நிச்சயமாக நீங்கள் விருந்துண்டஇடம், ஒரு தமிழினத்துரோகியின் வீடாகத்தான் இருக்கவேண்டும்.
ஏனெனில் நாமறிந்தவரை, இத்துரோகிகள்தாம் ஈழத்தில் மட்டுமல்லாது அனைத்துலகமட்டத்திலும்,இக்கட்டான இந்தநேரத்தைப்பயன்படுத்தி, மக்களின்தன்மானஉணர்வுகளை மழுங்கடிக்கும் முயற்சியிலீடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நீங்களும் ’யானைபார்த்த குருடனாக’ , துரோகிகளைமட்டும் தடவிப்பார்த்துவிட்டு துரோகத்துக்கொரு கருவியானமை துரதிஷ்டமானதே!
உங்கள் கருத்துப்படிபார்த்தால், தமிழகத்திலேயே வீடற்றவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருவருக்கேனும் உங்கள்வீட்டுக்கொல்லைப்புறத்திலாவது இடங்கொடுத்திருக்கலாமே!
கோவணத்துக்கும் வழியற்ற அந்தமக்களுக்கு, தோளிலணிந்திருக்கும் துண்டையேனும் கொடுத்துவிட்டுப் போயிருக்கலாமே!
‘ஊருக்குபதேசம் உனக்கல்லடி’ என்றகதையாகத்தான் உள்ளதுஉங்கள்பேச்சு!

வெளிநாடுகளில் வாழ்வதுபற்றி இவ்வளவு ஏளனமாகப்பேசுகிறீர்களே!
சொந்தமக்கள் வெள்ளையனிடம் வதைபட்டுக்கொண்டிருந்த அந்தநேரத்தில்
உங்கள்காந்தியாரும் பட்டப்படிப்பும் பகட்டுவாழ்க்கையும் என்று இங்கிலாந்தில்இருந்தவர்தானே!
அதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்தவரையிலும் சொந்தமக்கள்பட்ட துன்பங்களைக் கண்டுகொள்ளாமலிருந்துவிட்டு, எங்கோ அந்நியதேசமான தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்காகக்குரல்கொடுத்தவர்தானே!
அதன்பிறகுதானே இந்தியாவைப்பற்றி நினைத்தார்?

”சீனாக்காரன் ஏதோ புடுங்கவருகிறான்;அதனால் இந்தியாவுக்குக் குலைநடுங்குகிறது ;
இந்தியாவின்நிலைமையை நாம்யோசிக்கவேண்டும்”என்றுஎமக்கு
அறிவுறுத்தவரும் நீங்கள் -
முதலில்,உங்கள்தொப்புள்கொடி?உறவுகளான எமதுநிலைமையை ஏன்யோசிக்கவில்லை?

உங்கள் இந்தியஎசமானர்களுக்கு இருப்பதோ எதிர்காலப்பிரச்சினை; உங்கள் தொப்புள்கொடிகளுக்கோ,’வாழ்வா சாவா ‘ என்ற நிகழ்காலப்பிரச்சினை.

’முக்கியத்துவம் ‘ என்றதலைப்பில் ‘ இந்தநாள் இனியநாள்’ வந்தால் எதைச்சொல்வீர்கள்? ஒருவேளை சூரியகுடும்பத்துடன்(sun) சேர்ந்ததோஷம் - இரண்டையும் தவிர்த்து உங்கள் மனைவி,பிள்ளைகளைத்தான் சொல்வீர்களோ?
கேடுகெட்டசிங்களன்,கொத்துக்கொத்தாகக் குழந்தைகளையேகொன்றொழித்தானே!
பக்தர்களுடன் சேர்த்தே வழிபாட்டுத்தலங்களையும் -
மாணவர்களுடன் சேர்த்தே பாடசாலைகளையும் நிர்மூலமாக்கினானே!
இவைகளில் ஒன்றுகூட உங்களுக்குப் பெரிதாகப்படவில்லையா?
ஐ.நா,செயலர் பான் கி மூன் அவர்களே “ இதுவரை உலகில் எங்குமே இதுபோன்றபேரழிவைக் கண்டதில்லை” என்று சொல்லுமளவுக்கு நடந்தேறிய இந்தஇனப்படுகொலை, உங்களை இம்மியளவும் பாதிக்கவில்லையா?
இவையனைத்தையும்விட, ‘ தமிழனின் உடைந்தவீடுகள்’தாம் உங்கள் கண்களை உறுத்துகிறதா?
சரி; இவைகளைத்தான் விட்டாலும் - உங்களுக்குச்சோறுபோடும் ‘ இந்தநாள் இனியநாள்’ இல் நாளுக்கொருதலைப்பில் ஏதாவதுசொல்ல உதவும் புத்தகங்களையே, நூலகத்துடன் சேர்த்து எரித்தானே!
புத்தகங்கள் என்பது உங்கள் தாய்க்குச்சமமல்லவா?
அதையாவது கண்டிக்கவேண்டும் என்று உங்களுக்குத்தோன்றவில்லையா?
சரி, அதையுந்தான் விட்டுத்தள்ளுங்கள் ; அவ்வப்போது விஞ்ஞானரீதியான கருத்துக்களைஉதிர்த்து, நாத்திகவாதிபோலடையாளங்காட்டிக்கொண்டாலும் -
ஆகமவிதிகள், பிதிர்க்கடன்கள் அவசியமானவைஎன்று குத்துக்கரணமடித்து, பணம் சம்பாதிக்க உங்களுக்கு உதவும் இந்துஆலயங்களையெல்லாம் இடித்துத்தள்ளினார்களே!
அதிலாவது உங்கள் மனம் பதைக்கவில்லையா?


மீண்டும் உங்கள்பாணியிலேயே பதிலளிக்கிறேன்:
தாயகத்தைப்பிரிந்திருப்பது தவறாகாது; மாறாக, தாயகத்தை மறந்திருப்பதுதான் மாபெரும்தவறு.

உங்கள் பெயருக்கேற்றவாறு தாராளமாக நீங்கள் சுகித்திருங்கள்.
ஆனால், தயவுசெய்து எமது விடுதலைப்போராட்டத்தை_ எமது இனஉணர்வை மட்டும் கொச்சைப்படுத்தாதீர்கள்.

அங்கே ஆடுகள்நனைகின்றன என்பது உண்மைதான்; அதற்காக நீங்களும் ஓநாய்களுக்குத் துணைநிற்காதீர்கள்!

இதுவே எமதுவிடுதலைக்கு நீங்கள் செய்யக்கூடிய மாபெரும் உதவி!

_ சிவம் அமுதசிவம்