எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Friday, May 13, 2016


இந்தநாள் கொடியநாள்
              எங்களின் துயரநாள்

இந்தநாள் கொடியநாள் எங்களின் துயரநாள்
சிங்களம் எங்களின் சொந்தமண் தன்னிலே
எங்களைப் படுகொலை செய்தநாள்!
             - தீயில்நாம் வெந்தநாள்!
வீதிகள் தோறும்நாம் நின்றநாள்!
       - நீதியைத்தேடியே மேலைநாடெங்கிலும்
வீதிகள் தோறும்நாம் நின்றநாள்!
விலையிலா உயிர்களை
கொலைவெறிச் சிங்களம்
                   - கொன்றநாள்!
முள்ளிவாய்க் காலெனும் மூடிய குகையினுள்
      முறையிலா யுத்தம்நி கழ்ந்தநாள்!
தள்ளிநின் றுலகமே தமிழனின் தலைவிதி
     தன்னையே நிர்ணயம் செய்தநாள்!
கொள்ளிவாய்ப்பேயுன் கோடரிக்காம்புகள்
        கூடியே ரத்தம்கு டித்தநாள்!
முள்ளிவாய்க் காலெனும் மூடிய குகையினுள்
      முறையிலா யுத்தம்நி கழ்ந்தநாள்!

இந்தநாள் மீண்டும் வந்ததே இன்று –
இன்றுடன் ஏழு ஆண்டுகள் கண்டு!
இன்னமும் இங்கு கூடியே நின்று
பெட்டைப் புலம்பலின் பேதமை கொண்டு
நெட்டை மரங்களின் நீர்மையில் நின்று
வாளா விருப்பது முறையோ? முறையோ?
என்னுயிர்த் தோழா! எழுந்துநீ வாடா -
எதிரியின் சதிகளின் வலைகளை வென்று!
பெற்றவள் கதறி அழுகிறாள் அங்கே!
பேடிகள் போலநாம் வாழ்கிறோம் இங்கே!
ஆடியோ கருமை ; ஆவணி அமளி
ஐப்பசி, கார்த்திகை அதனிலும் கூட
சத்திய நாதனின் சாவினைக் கண்டோம்!
ஆண்டுகள் முழுதும் அத்தனை பொழுதும்
மாண்டவர் நினைவிலே மாரடிக் கின்றோம்.
எத்தனை காலம்தான் இப்படி வாழ்வோம்?
செத்தவர்க் காகநாம் என்னதான் செய்தோம்?
வெறுமனே கூடி தீபங்கள் ஏற்றி
ஏற்றிய தீபம் அணையுமுன் கலைவோம்!
வேற்றின மாந்தர் வீடுகள் தனிலும்
ஏறுதுதானே இத்தகை தீபம்?
அதுவெறும் தீபம். -  நாமிவண் ஏற்றும்
தீபமோ எங்கள் உணர்வினைச் சாற்றும்
உயிரில் தீமூட்டும் உறுதியைக் காட்டும்.
வேரடி மண்ணின் விறலினைக் கூட்டும்.
விடியலை நோக்கி விரலினை நீட்டும்.
ஏற்றுவோம் இங்கே இம்முறை மட்டும்!
மறுமுறை ஏறும் நம்தமிழ் மண்ணில்!!!
                                                    ஆக்கம்
                                               ---சிவம் அமுதசிவம்

Saturday, October 5, 2013

 ****-__ விகனின் விகடம்-__****

பொதுவாகவே தமிழ்நாட்டின் சஞ்சிகைகள், தினசரிச் செய்தி நிறுவனங்களெல்லாம், -
தமக்குள் தாமே இரண்டாகப் பிரிந்து, ஒன்று அரசுக்கு ஆதரவாகவும், மற்றையது எதிர்கட்சிக்கு ஆதரவாகவும் எழுதும் போக்குடையவை.  
( விகடன் - ஜூனியர் விகடன்)
அவர்களின் குறிக்கோள்: இரு பக்கத்திலும் தாமே முன்னணிவகிக்கவேண்டும்....
தாம்மட்டுமே சம்பாதிக்கவேண்டும்  என்பதே!
அந்தவகையில், விகடன் சஞ்சிகையானது , அண்மையில் புலிப்பெண்போராளிகளைக் கொச்சைப்படுத்தி ஒரு கட்டுரை வெளியிட்டு, அதன்மூலமே நன்றாகச் சம்பாதித்தமை யாவரும் அறிந்த விடயம்.
அதன் தொடர்ச்சியாக, இப்போது பிரபல எழுத்தாளரான யமுனா ராஜேந்திரனை விலைக்கு வாங்கித் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது!
நடுநிலையாக எழுதியிருக்கிறாராம்...
இவர்களே அதற்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
இப்படித்தீர்ப்பு வழங்குமளவுக்கு, விகடனுக்கோ அன்றி இந்த யமுனாவுக்கோ, -
புலிகளின்மீது இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணிபற்றி எதுவுமே தெரியாது.
இவர் புலிகளில் சொல்லும் குற்றச்சாட்டு இதுதான்!:

##சகோதரப் படுகொலைகள், ராஜீவ் காந்தியின் கொலை, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்களை திடீரென வெளியேற்றியது ஆகிய மூன்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மிக முக்கியமான தவறு.##

சகோதரப்படுகொலை என்று, சகட்டுமேனிக்கு,  கருணாநிதி பாணியில் குற்றஞ்சாட்டும் இவர்,-
உண்மையிலேயே ´நடுநிலையாளராக இருந்தால், -
 அதன் பின்னணிபற்றியும் ஆராய்ந்திருக்கவேண்டும்.

*** ஆதிக்கவெறிபிடித்த இந்தியத் தலைமைகள், மிகவும் திட்டமிட்டமுறையில், பல கோடிகளைச் செலவுசெய்து, தமிழீழத்தில் பல போராளிக்குழுக்களை உருவாக்கியமை....
அந்தக் குழுக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கி வளர்த்துவிட்டமை....***

என்று இவைகளையெல்லாம் புறந்தள்ளி, வெறுமனே பார்ப்பனரின் குரலாகவே ஒலித்திருக்கிறார் இந்த யமுனா ராஜேந்திரன்!

2. ராசீவ் கொலை என்று பார்த்தால், -
சூ சாமி சந்திராசாமி என்று, இதில் சம்பந்தப்படிருக்கும் பல ஆசாமிகள் இன்னமும் விசாரிக்கப்படாத நிலையிலும்,-
இறுதித்தீர்ப்பே இன்னும் வராத நிலையிலும், இவ்வாறு புலிகளின்மீதே பழியைப்போடுபவருக்குப் பெயர்தான் நடுநிலையாளரோ?
3. யாழ். மண்ணைவிட்டு முசுலிம்களை வெளியேற்றியமை என்பது தவறுதான் எனக்கொண்டாலும், -
அந்தக்காலகட்டத்தில் தவிர்க்க முடியாததொன்றாகவே அஃதிருந்தது!
யாழ்ப்பாணத்தில் வசித்த முசுலிம்கள், போராட்டத்திற்கு எவ்விதமான பங்களிப்பையும் செய்யாமலிருந்தது மட்டுமல்லாமல், -
அரச படைகளுக்காக உளவு பார்க்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
யாழ். இலுள்ள முக்கியமான பள்ளிவாசல்களில் ஒன்றிலிருந்து, பெருமளவான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே, -
யாழ் மக்களுக்கும் முசுலிம்களுக்குமிடையிலான முறுகல்நிலை அதிகரித்தது.
பெரும் மோதல் உருவாகி, அதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அன்று அப்படியானதொரு முடிவைப் புலிகள் எடுத்தனர்!
அதாவது, ஒரு நாடு எவ்வாறு அவசரகால நடவடிக்கை எடுக்குமோ, -
அதேபோன்றதொரு நடவடிக்கைதான் அது!
இன்னும் சொல்லப்போனால், -
´இந்திய குடிமக்களைத் திருப்திப்படுத்த`என்று நியாயம் கற்பித்து , எவ்வாறு கசாப் இற்கு மரணதண்டனை வழங்கப்பட்டதோ, -
அதுபோல...
ஒருதலையாகவே சிந்தித்தவரெல்லாம் நடுநிலையாளர் என்று, போக்கிரி வியாபாரிகள் பட்டம் கொடுக்கிறார்கள்!
இதைவிடவும் வேடிக்கை என்ன இருக்கிறது?


Tuesday, November 6, 2012

விகடனின் ´விற்பனைக்கான கற்பனை.`


விகடனின் ´விற்பனைக்கான கற்பனை.`


முந்நாள் விடுதலைப்புலிப் போராளி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு பெண்,
தனது வயிற்றுப் பசி தீர்க்க,பாலியல் தொழில் செய்து  உயிர் வாழ்வதாக,
´விகடன்` குழுமப் பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரை பல வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
ஏற்கெனவே,பல அறிஞர்கள் இந்த விகடனின் முகத்திரையைக்
கிழி கிழியென்று கிழித்தேவிட்டார்கள்!
எனினும், எனது மனதிற் தோன்றும் கருத்துக்களையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

இதை வெறுமனே ஒரே கோணத்தில் பார்க்காமல் வெவ்வேறு வகைகளில்  நோக்கவேண்டியுள்ளது.

உண்மையில், அப்படியொரு பெண் இருந்து, அவரே இப்பேட்டியை அளித்திருந்தால்,
1.இவர் சொல்வது பொய்..
2.இயக்கத்துக்கும் உண்மையில்லாமல், தமது குடும்பத்துக்கும் உண்மையில்லாமல்
 அவ்வளவு காலமும் ஒரு போராளியாக நடித்திருக்கிறார்.

அல்லது,
3.  இந்த விகடன் குழுமமே, தனது வியாபாரத்தில் ஏற்பட்ட தற்காலிகமான தொய்வைச் சரிசெய்வதற்காக
இப்படியொரு கற்பனைக்கதையை உருவாக்கியிருக்கிறது.

இம்மூன்று தேர்வுகளிலுமுள்ள முதலிரண்டு நேர்மறையான கருத்துகளைப்பற்றி முதலில் ஆராய்வோம்.

இந்தப்பேட்டி அளித்ததன் மூலம் இப்பெண் யாருக்கு என்ன நன்மை செய்ய முயன்றிருக்கிறார் என்று ஆராய்ந்தால், -
யாருக்கும் எதுவுமில்லை என்பதுதான் முடிவாக இருக்கும்.

தமது வயிற்றுப்பசி தீர்ப்பதற்காக பாலியல் தொழிலாளியானதாகக்கூறும் இவர்
 வெறுமனே,பத்திரிகைக்காரரின் பசி தீர்க்கவே பயன்பட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகள் என்றாலே ஒழுக்கம் மிகுந்தவர்கள் என்பது உலகறிந்த உண்மை.

எதிரிகளும் ஏற்றுக்கொண்ட உண்மை.

இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு , ஜேர்மனியின் நீதிமன்றத்தில் நிகழ்ந்த
சம்பவமொன்றைக்  குறிப்பிடலாம்.

1985 ம் ஆண்டு பிற்பகுதியில், விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், -
விடுதலைப்புலிகளின் ஜேர்மன் கிளைப் பொறுப்பாளராகச் செயற்பட்டவர்
 கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒவ்வொரு மாநிலப் பொறுப்பாளர்களும் தனித்தனியே விசாரிக்கப்பட்டனர்.

அதில் ஒரு பொறுப்பாளரைப் பார்த்த நீதிபதி, அவர் புகைப் பழக்கம் உள்ளவர்
என்பதைக் கண்டுகொண்டு, பின்வருமாறு கேட்டார்:

"உனக்கு மதுப் பழக்கம் உண்டா?"
" இல்லை " 
" உனக்குச் சிகரட் பிடிக்கும் பழக்கம் உண்டா? "
" சிலவேளைகளில்.. "  சங்கடத்துடன் நெளிந்தபடி இழுத்தார் அந்தப் பொறுப்பாளர்.
ஆனால், அவர் சங்கிலித்தொடர் ( Chain smoker)  புகைப்பிடிப்பாளர் என்பது, அவரது தடித்த உதடுகளின் கருமையிலேயே தெரிந்தது.
நிதிபதியும் விடாமல், " உனது மேலிடத்துக்கு அறிவிக்கட்டுமா? " என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.
நீதிமன்றமே சிரிப்பலைகளால் அதிர்ந்தது.

அவ்வளவுக்கு, ஜெர்மானியர்களே, விடுதலைப்புலிகளின் ஒழுக்கத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்
என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம்.

மேலும், இவ்வளவு ஒழுக்கம் மிகுந்த ஒரு இயக்கத்தில் நீண்டகாலம் பயிற்சி பெற்ற ஒருவர்,
எவ்வளவு உடல் வலிமை மிகுந்தவராக இருக்கவேண்டும்?
ஒரு சராசரி ஆணை விடவே, பெண்புலிகள் வலிமை மிக்கவர்கள் அல்லவா?.
அப்படியிருக்க எதற்காக இவர் பாலியல் தொழில் செய்யவேண்டும்?
ஒருவேளை, 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு, உடல் வலிமை குன்றியிருந்தாலும்கூட, -

´உடல்வலிமை குறைந்தவர்களெல்லாம் பாலியல் தொழிலில் ஈடுபடலாம்`என்று சொல்லலாமா?

இன்னும், இவரைவிடவும் உடல் வலிமை குறைந்த பெண்கள்  ஈழத்தில் இல்லையா?

அத்தனை பெண்களுமே பாலியல் தொழிலையா செய்கிறார்கள்?
எனவே, இவர் கூறும் அடிப்படைக்காரணமே இங்கு தகர்ந்துபோகிறது.

இனி, அந்த மூன்றாவது தேர்வான, ´விகடனின் கற்பனை`என்பதைக் கருத்திற்கொண்டு,
நோக்கினால், -

பொதுவாகவே விகடன் குழுமம் மட்டுமல்லாது, பெரும்பாலான தமிழகப் பத்திரிகைகளுமே
கொள்கைப்பிடிப்பில்லாமல் இயங்குபவைதாம்.
அதிலும் இந்த விகடன் குழுமத்தின் நகர்வு கொஞ்சம் வித்தியாசமானது.
தமிழ்நாட்டில் புலி ஆதரவு பலமாக இருந்த காலத்திலேயே,
´ஆனந்த விகடன்`இல் புலிகளுக்கு எதிராகவும், ´ஜூனியர் விகடன்`இல் புலிகளுக்கு ஆதரவாகவும் எழுதி
இருசாராரிடமும் சம்பாதித்த வரலாறும் இதற்கு உள்ளது.

இதைக் கருத்திற்கொண்டுதான், ஈழப்பிரச்சினையை மையக்கருவாகக்கொண்டு வெளியான ´ஆணிவேர்`என்ற திரைப்படத்தில்
 ஒரு காட்சி வரும்..

கதாநாயகன் குண்டடிபட்ட குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது,
அங்கு வந்த தமிழக நிருபரான கதாநாயகி ஒலிவாங்கியை நீட்டுகிறாள்..
இதனால் வெகுண்டுபோன அவன், " எங்கள் இரத்தத்தையும் சதையையும் காசாக்க வந்துவிட்டீர்களா?.. போடீ.." என்று சீறுகிறான்.
அதாவது, கொள்கைப்பிடிப்போ மனிதநேயமோ அன்றி இன உணர்வோ .... ஏதுமின்றி, முழுக்க முழுக்க பணத்தையே
 குறிக்கோளாகக்கொண்டு இயங்கும் கீழ்த்தரமான உலகம்.

´வட்டுக்கோட்டை` - ´நவாலி` - ´புக்காரா`  இப்படி ஒருசில சொற்பதங்களை வைத்து,  இந்தப்பேட்டியை அளித்தவர் ஒரு உண்மையான ஈழப்போராளிதான் என்று காண்பிக்கமுனைந்திருக்கிறது இப்பத்திரிகை.

இவையெல்லாம் இன்று ´சனல் 4` தொலைக்காட்சியினால், உலகம் முழுவதுமே அறிந்த சொற்கள்.

இன்னும், இக்கட்டுரையாளர் தம்மையறியாமலே பல முரண்பாடுகளை இதில் வைத்திருக்கிறார்.

இதில் முக்கியமானதாக, ´ ஈழவிடுதலை கிடைத்ததோ இல்லையோ, பெண்விடுதலை கிடைத்துவிட்டது ` என்று கூறும் இவர்,
அதற்கு மறுதலையாக, தாம் பெண் என்பதால் கணவர் இறந்தபின் வாழ வழியின்றி பாலியல் தொழிலாளியாக மாறியதாகச் சொல்கிறார்.

எத்தனையோ மனைவியை இழந்த  ஆண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

அத்தனை ஆண்களுமே பாலியல் தொழிலா செய்கிறார்கள்?

வன்னிக்குப் போய்வந்த எனது நண்பரொருவர் தாம் பட்ட அனுபவத்தை இப்படி விபரித்தார்:

ஒரு காலை முழுமையாக இழந்த ஒருவர், சிறிய குடிசையொன்றில், நான்கு பிள்ளைகளுடன் வசிக்கிறார்.
மூத்தவளுக்கு வயது 15 இருக்கலாம். அப்படியே 12... 10... 8 என்ற வரிசையில் கடைக்குட்டிதான் ஆண் பிள்ளை.
அக்குடிசையுடனேயே ஒரு சிறு பத்தியொன்றை இறக்கி, அதில்  ´மிதிவண்டி திருத்தும் நிலையம்`ஒன்றை நடத்திவருகிறாராம்.
அந்த 5 சீவன்களுக்கும் அவ்வப்போது ஒருநேரக் கஞ்சிக்கேனும் வழியேற்படுத்துவது அந்தத்தொழில்தானாம்.
இவ்வளவு சிக்கலுக்கு மத்தியிலும், அத்தனை பிள்ளைகளும் பாடசாலைக்கும் போகிறார்களாம்.

தமக்கென்றால்,சொல்லொணாத கவலையும், அதேவேளை ஆச்சரியமாகவும் இருந்ததாம்.
அவரிடம் பேச்சுக்கொடுத்ததில், அப்பிள்ளைகளை அவர் மட்டுமே வளர்த்து வருவதாகச் சொன்னாராம்.

ஒருவேளை, அவரது மனைவி போரில் இறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, தாம் அவரைப்பார்த்து,
" ஏன்? உங்க மனைவி மோசம் போய்விட்டாவா?" என்று கேட்டாராம்.
சிறிதுநேரம் பதிலே சொல்லாமல் அமைதிகாத்த அவர், திடீரென முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க,
" அவ மோசம் போகேல்லை.. வேசம் போட்டா" என்றாராம்.
தாம் ஏதும் புரியாமல், ´திரு திரு`வென முழிக்க, அவரே தொடர்ந்து சொன்னாராம் - தமக்கு ஒரு கால் போனதிலிருந்து
தமது மனைவி வேறொருவனுடன் ஓடிவிட்டாள் என்று.

இதுபோல, அங்கே வன்னியில், அந்த மக்கள் நினைத்தே பார்த்திராத -  யாரும் கற்பனையே செய்ய முடியாத நிலைமைகள் இன்னும் ஏராளம் உண்டு.
இப்போது நான் கேட்கிறேன்: இந்த நிலையில் அந்த ´விகடனின் கற்பனைப் போராளி` இருந்தால்,ஒருவேளை பாலியல் தொழிலுடன் , போதை மருந்துக் கடத்தலும் செய்வாரோ?
மேலும், யாழ்ப்பாணத்தைக் கேவலப்படுத்தும் ஒரு முயற்சியாக, ´யாழ்ப்பாணம் வந்த கணத்திலிருந்துதான் நான் பாலியல் தொழிலாளியானேன்`என்கிறாராம்.....யாழ்ப்பாணம் என்றாலே ஏதோ சிவப்பு விளக்குப்பகுதி என்பதுபோல.
உலகிலேயே தனித்தன்மையான வாழ்க்கைமுறையினைக்கொண்ட யாழ் குடாவில், திட்டமிட்டே கலாசாரச் சீரழிவினை ஏற்படுத்தும் சிங்களக் கைக்கூலிகளை ஏன் இவர் குறிப்பிடவில்லை?
பிச்சை போடவே பயந்தவர்கள், கூடப்படுக்கமட்டும் பயப்படவில்லையாம். இது நம்பக்கூடியதாகவா இருக்கிறது?
´ எங்களை வைத்து வியாபாரம் செய்வதை நிறுத்துங்கள்` என்று இந்தியத்தலைவர்களைப் பார்த்து அப்பெண் கேட்கிறாளாம்.
அதாவது, அந்த வியாபாரத்தைத் தமக்கு மட்டுமே தனியுடைமை ஆக்குமாறு கேட்கிறது விகடன்.

´எமது போராட்டம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது` .......

இதைச் சொல்லுமளவுக்கு இவர் என்ன உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவரா?
ஆயுதப்போராட்டம் வேண்டுமானால் மழுங்கடிக்கப்பட்டிருக்கலாம். அதுகூட, ´ மௌனிக்கப்பட்டுள்ளது` என்றுதான் புலித்தலைமை அறிவித்தது.
ஆனால், அரசியல் போர் தொடர்கிறது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாத ஒருவர் சொன்னதாக, இக்கட்டுரையாளர் எமக்குச் சொல்வது என்பது,  அப்பட்டமான ´காதுல பூ` இல்லாமல் வேறென்ன?
இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விடயம்:

இந்தியத்தலைவர்களை - தமிழீழத்தலைவர்களை என்று சகட்டு மேனிக்குச் சாடும் இவர்,  மறந்தும் இப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த சோனியா காங்கிரசைச் சாடவில்லை.
சிறிலங்காவைக்கூட ´அமைச்சர்கள்`என்று பட்டும் படாமலும் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, சிங்கள அரசு என்றோ, மகிந்த அரசு என்றோ குறிப்பிடவில்லை.
புலிகளுக்கு எதிரானதா, அன்றி ஆதரவானதா என்று மக்கள் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே,
விற்பனையில் சாதனை படைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரை.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்லி, சோ சாமி, சு சாமி போன்றவர்களையும் திருப்திப்படுத்தி,
´இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன்` என்று, தமிழுணர்வாளர்களையும் குளிர்வித்து,
´ஈழவிடுதலை கிடைத்ததோ இல்லையோ, பெண்விடுதலை கிடைத்துவிட்டது`என்று, பெண்ணியவாதிகளையும் கட்டிப்போட்டு,

ஒரு மாயாஜாலங்காட்ட முனைந்திருக்கிறது இந்தக் கேடுகெட்ட விகடன்.

இதையெல்லாம் பார்த்தால், 1970 களில் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான, அமரர் சொக்கன் அவர்கள் சொன்னதுதான் ஞாபகத்துக்குவருகிறது.

´தமிழகச் சஞ்சிகைகளின் இறக்குமதி அவசியமா? அவசியமில்லையா? ` என்ற தலைப்பில் ,யாழ்.பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில்,பலரது கருத்தும்  ´அவசியம்`என்ற வகையிலேயே அமைந்திருந்தது.
அதிலும் ஒருவர், " நாம் தமிழகமக்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. அதனால், இறக்குமதி அவசியமே" என்றார்.
இதனால், வெகுண்டுபோன கவிஞர் சொக்கன் அவர்கள், ´கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், தேவி வார இதழ்  ஆகிய 4 சஞ்சிகைகளையும் கைகளில் உயர்த்திப்பிடித்தபடியே சொன்னார் :  இந்த 4 சஞ்சிகைகளுக்குமே குறைந்தபட்சமாக 4 முதலாளிகள்தான் இருப்பார்கள்.
இந்த 4 முதலாளிகளுக்காக 35 இலட்சம் தமிழ் மக்களை வெறுப்பார்களேயானால், அந்த 4 கோடி மக்களின் ஆதரவு நமக்குத்தேவையில்லை.

இன்று தமிழன் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவும் இதுதான்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள்,தொலைக்காட்சிகள், திரைப்படங்களுக்கெல்லாம்  அவ்வப்போது தகுந்த பாடம் புகட்டி,
தமிழின விடுதலையைத் தடம் புரளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
செய்வோமா?

     --- சிவம் அமுதசிவம்.

Thursday, September 6, 2012

தமிழருவி மணியன் அவர்களுக்கு ஒரு பகிரங்கவேண்டுகோள்!



ஐயா!தங்கள் பெயரின் முன்னே இருக்கும் அடைமொழிக்கு முற்றிலும் தாங்கள் தகுதியானவரே!
பேசும்போதுகூட,அந்த உச்சரிப்பு,கேட்கக்கேட்கத் திகட்டாது.

தங்கள் பேச்சுகளை இணையத்தில் தேடியெடுத்து,அடிக்கடி நான் கேட்பதுண்டு.அவ்வளவுக்கு நான் தங்களின் பரம இரசிகன்.

ஆனாலும்,அண்மையில் ´சிங்களர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டது`பற்றித் தாங்கள் வெளியிட்ட கருத்து என்மனதைக் கொஞ்சம் புண்படுத்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அமைதி வழியிலேயே முப்பது ஆண்டுகள் போராடி,
ஒரு தலைமுறையே நாசமாய்ப் போனதுதான் நம் வரலாறு என்பது தாங்கள் அறியாததல்ல.
அமைதி வழியில் போராடியவர்களுக்கெல்லாம் கிடைத்த பரிசுகள்,துப்பாக்கிக்குண்டுகளும்,தூஷண வார்த்தைகளுமே!

நிராயுதபாணிகளாக நின்றவர்களிடம் வீரத்தைக் காட்டினார்கள் அந்த வீணர்கள்.
துரத்தித்துரத்தி வெட்டினார்கள்.
ஓடினோம்! ஓடினோம்!! ஓடிக்கொண்டேயிருந்தோம்.
அப்போதுகூட அவர்கள் துரத்துவதை நிறுத்தவில்லை. கூக்குரலிட்டோம்.யாருமே கண்டுகொள்ளவில்லை. கூப்பிடுதூரத்திலுள்ள தமிழகமே ஏனென்று கேட்கவில்லை. அழுதோம்! அழுதோம்!! அழுதுகொண்டேயிருந்தோம்.
இந்த அழுகையை நிறுத்த - கண்ணீரைத்துடைக்க ´புலியென`புறப்பட்டான் ஓரிளைஞன்.
அவன் தான் எங்கள் மேதகு தலைவன் பிரபாகரன்.
அடுத்தகணமே எமது இரகசியப் பேச்சுகளைக்கூட உலகம் உற்றுக்கேட்டது.
தங்களைப் போலவே,காந்தியாரின் கொள்கைகளில் பற்றுவைத்து,அமைதி வழியிலேயே போராட்டங்களை முன்னெடுத்து அழிந்துபோன,ஈழத்தின் தந்தைசெல்வாவின் காலத்திலிருந்து,
முள்ளிவாய்க்காலில் மௌனித்துப்போன புலிகளின் ஆயுதப்போராட்டம்வரை,
இந்தச்சிங்களர்கள் தமது அரசைத் தேர்ந்தெடுப்பதற்குரிய அடிப்படைத் தகைமையாக எதைக் கொள்கிறார்கள்?
´எவர் அதிகமாக இனவாதத்தைக் கக்குகிறார்`என்பதைத்தானே?இவர்களைப்பொறுத்தவரை,அன்பு,கருணை,இரக்கம் என்பனவெல்லாம் நூதனசாலையில் வைக்கவேண்டியபொருட்கள்.

இதற்குமேலும் இவர்களுக்கெல்லாம் அமைதிவழியில் எதையாவது புரியவைக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா?
மகாத்மா காந்தியே வன்முறையை முற்றாக எதிர்க்கவில்லையே!பெண்கள் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள,விரல் நகங்களையே ஆயுதங்களாக்கி வன்முறையில் ஈடுபடலாம் என்றுதானே சொல்கிறார்?

நமது நிலைமை இதைவிட மோசமானதில்லையா?

மேலும்,காந்தியின் காலம் என்றோ காலாவதியாகிவிட்டது.
காந்தி என்றபெயர்,அவருக்கே இல்லையென்றாகிவிட்டது.

ஆயுதப்போராட்டம் என்பதைவிட,
நினைத்துப்பார்க்கமுடியாத கொடுமைகளுக்கு வித்திட்ட சர்வாதிகாரிகளுள் ஒருவரான ´முசோலினியின்`முக்கிய தளபதியொருவரின் தவப்புதல்வியிடம் அடைக்கலமாகிவிட்டது.

ஸ்ரீலங்காவைத்தான் விட்டுத்தள்ளுவோம்... இந்தியத்திருநாட்டிலேயே ´மகாத்மாகாந்தி`என்பது மாயை என்றாகிவிட்டது.
திலீபனைச் சாகவிட்டோம்;
செந்தூரனைக் கண்டுகொள்ளவேயில்லை.
இன்னும் ஆண்டுக்கணக்காக அமைதிவழியில் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களின்மீதே ஆயுதவன்முறைதான் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

அமைதிவழியில் போராடும் நமது மக்கள் செத்து விழுந்தால், எத்தனை பிணங்களையும் தின்னக் காத்திருக்கின்றன பேய்கள்.

வெள்ளையர்கள் காந்தியாரின் அமைதிவழிக்கு மதிப்புக் கொடுத்தார்கள்;
ஆனால் அந்த அமைதிவழியைத் தங்களுடனேயே எடுத்தும் சென்றுவிட்டார்கள்.

இதனாற்றான்,இலண்டன் மாநகரில் உண்ணாவிரதமிருந்த இளைஞன் பரமேஸ்வரனை அமெரிக்காவரை அழைத்துப்போய் பேச்சுவார்த்தை நடத்தி,அவனது உயிரைக் காப்பாற்ற அவர்களால் முடிந்தது.

இன்னும்,முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறிக்கொண்டிருந்த அந்த வேளையில்,தமிழகமே திரண்டுநின்று,ஒரேகுரலில்
" ஏ! ஸ்ரீலங்காவே!போரை நிறுத்து!அப்பாவி மக்களின்மீது குண்டுகளைப் போடாதே!" என்று பெருங்குரலெடுத்துக் கத்தியது.

,அவர்களுக்கு அது துளியும் கேட்கவில்லை. டில்லிக்கும் கேட்கவில்லை.ஏன்?தமிழக ஆட்சியாளர்களுக்கே கேட்கவில்லை.
இன்னும்,எங்களைக் ´கோமாளிகள்`என்று கேலிசெய்தார்கள்.

ஆனால்,இது மட்டும் உடனடியாகவே அனைவரது காதுகளிலும் விழுந்து,அடுத்த கணமே நம்முடன் போர்ப்பிரகடனமும் செய்துவிட்டார்கள்.
 இப்போது,நான் தங்களிடம் கேட்கும் கேள்வி: இந்தக் கல்லில் நார் உரிக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா?

அதாவது,அமைதிவழிப் போராட்டம் இவர்கள் விடயத்தில் பலன்தருமா?

இவர்களிடம் நாம் நீதியை எதிர்பார்ப்பது,´கசாப்புக் கடைக்காரனிடம் ஆடு கருணையை எதிர்பார்ப்பதுபோலில்லையா?

எனவே,காந்தியாரின் பெயரால் இயக்கம் கண்டிருக்கும் தாங்களாவது,எனது இந்த மனக்குமுறலைப் புரிந்துகொண்டு, நியாயம் வழங்குவீர்கள் எனும் எதிர்பார்ப்புடன் இம்மடலை நிறைவுசெய்கிறேன்.

வெல்க தமிழ்!!!



Friday, May 4, 2012

 முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகக்

கொலையுண்ட எமது உறவுகளுக்கான

 சிறப்புப் பதிவு.


முள்ளிவாய்க்கால்தானா முடிவாகிப்போகும் போடா! 

பாடல் இடம்பெற்றுள்ள குறுவட்டு : தாய்பிறந்த மண்

அடடா! தமிழா! தமிழா! தமிழா!
அடடா! தமிழா! தமிழா! தமிழா!

முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எத்தனை முறைதான் கடல் கொண்டது;
எத்தனை முறைதான்  இடர் தந்தது ;
அத்தனை முறையும் தமிழ் வென்றது
அடடா! வா தமிழா!
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எழுஎழு விரைவினில் தரணியில் தமிழதன்
இழிநிலை துடைத்திடுவோம் வா!
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
புயலொடு பொருதிடு பகைவரின் படையதில்
முடிவுரை எழுதிடு வாடா!

                                             - நம் - 
உறவுகள் அங்கே ஆயிரம்
மாண்டனர் அன்றோ ஆயினும் - நீ
மீண்டும் எழுந்தொரு தீயில் இறங்கிடு
நம்பிக்கை ஒன்றே ஆயுதம்
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எங்கள் மண்ணின் மடி தொட்டவன் - எமை
அங்கு நின்றபடி சுட்டவன் - ஒரு
ஆறடி மண்ணும் சொந்தமின்றி இனி
அழிந்துபோகத் தக்கவன்.
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 
                                             ஆக்கம் : சிவம் அமுதசிவம் 

Friday, November 18, 2011

முதலாவது மாவீரர்நாள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட ,
1976 ம் ஆண்டிலிருந்து, தாயக விடுதலைக்காய் தமதின்னுயிரை ஈகம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளின் அளப்பரிய தியாகங்களையெல்லாம் , அவ்வப்போது உரியமுறையில் கௌரவித்து வந்த விடுதலைப்புலிகள், காலப்போக்கில் அதற்கென்றே ஒரு நாளைப் பிரகடனப் படுத்தினர். 
அதாவது, 1989 ம் ஆண்டு கார்த்திகைத்திங்கள் 27 ம் நாள் முதன்முதலாகத் தமிழீழத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் மாவீரர்களுக்கான 
அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த ’கார்த்திகை 27’ என்பது, அவ்வமைப்பின் முதற்களபலியான 
மாவீரன் செ.சத்தியநாதன் எனும் இயற்பெயரைக்கொண்ட 
லெப்.கேணல் சங்கர் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட தினம் எனும் குறியீட்டுடனேயே தேர்ந்தெடுக்கப்பட்டது. 
எனினும் மேலதிக ஒரு காரணமாக : தலைவர் பிரபாகரன் பிறந்தநாளான 
கார்த்திகை 26 ம் இணைக்கப்பட்டது.
1982 இல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு , படுகாயங்களுடன் குருதி சொட்டச்சொட்டத் தப்பியோடிவந்து, சிகிச்சைக்காகத் தமிழகம் கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி,
தலைவரின் மடியிலேயே உயிர்துறந்த 
அந்த உன்னதப்போராளியை மறக்கமுடியாமற்றான் 
13 ஆண்டுகள் கழித்து , அவ்வமைப்பு இக்கௌரவத்தை அவருக்கு வழங்கியது.
உலகறிய ’மாவீரர்நாள்’ பிரகடனப்படுத்தப்பட்டது 1989 இல் என்றாலும்,
அவ்வெண்ணக்கருவானது, அவர் பலியான 
ஓராண்டு நிறைவு தினமாகிய
1983 கார்த்திகை 27 
இலேயே விடுதலைப்புலிகளிடம் தோன்றியிருந்தது. 
மிகக்குறைவான உறுப்பினர்களையே கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் , யாழ்ப்பாண நகரத் தெருக்களின் சுவர்களையெல்லாம் அலங்கரித்த, அஞ்சலிக்கவிதைகளிற் சிலவற்றை 
இதிற்காணலாம்.


1. மீளாத் துயிலில் ஆழ்ந்தநம் தோழா!
           மீண்டு மிவண்வா! சத்தியநாதா!
     நாளா னாலும் நாமுனை மறவோம்.
            நாட்கள் சென்றால் நாமுனைத் தொடர்வோம்!
    தூளாய்ப் போகும் துட்டரின் சட்டம்!
            தூக்கி யெறிந்திடுவோம் எம திஷ்டம்!
    காளான் போலும் கட்சிக ளில்லை
           காண்போம் முடிவில் தனித் தமிழீழம்!

2.   விடைகொண்ட வீரா! வீறுடை வேங்கை
                 விண்ணிலே வாழும் சத்தியநாதா!
      குடைகின்ற தையா குமுறிடும் நெஞ்சம்!
                 கூடிடும் நாளோ ஓராண்டு காலம்!
      மடையினை வென்ற வெள்ளமா யோடும்
                மனதில்நாம் கொண்ட இலட்சியம் யாவும்
     தடையினை வென்று தாயகம் காப்போம்!
               தரணியிற் காண்போம் தனித் தமிழீழம்!

3.   விடிகின்ற வேளை வெளிவரும் அந்த
              வெள்ளியைப் போலும் விடுதலைப் போரின்
      அடித்தள மானாய் அன்பின்நம் தோழா!
              ஆவியை ஈந்தாய் சத்தியநாதா!
     கொடியவர்எதிரி இராணுவம் வசம்நீ
              கொடுத்திட வில்லை ஆயுதம் தன்னை
    கடிதினில் வந்தாய் - நம்வசம் தந்தாய்
            காலனோ டேனோ காதலிற் சென்றாய்?
                                                                 கவிதை ஆக்கம்: சிவம் அமுதசிவம்

அப்படிப் பார்த்தால், முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட ’ மாவீரர்நாள் ‘
1983 கார்த்த்கை 27 எனவும் கொள்ளலாம்.


Wednesday, April 20, 2011

’ பாகம் - 2 ‘ யானை பார்த்ததுபோல்......

மேற்குநாடுகளில் வாழும், புலி எதிர்ப்பாளர்களில் விசித்திரமான ஓரிரு பிரிவினரைப்பற்றி பாகம் - 1 இல் பார்த்தோம்.
இந்த வகையினரில் புத்திசாலித்தனமாகப் பொருளீட்டும் மற்றொருபிரிவினர்பற்றியும் இங்கு சிறிதளவு பார்ப்போம்.
இவர்கள் மக்களிடம் பணம் வசூலிக்கப்போகும்போது, தனிப்பட்டவர்களாகப்போகாமல், ஒரு நிறுவனமாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு போவார்கள்.
அதுவும், ஏற்கெனவே பிரபலமான தொண்டர்நிறுவனங்களின் பெயர்களின் சாயலிலேயே தமது நிறுவனத்தின் பெயரையும் அமைத்துவிடுவார்கள்.
உதாரணமாக, ‘ செஞ்சிலுவைச்சங்கம் ‘ என்பதிலுள்ள ‘ சிலுவை ‘ என்பதைத் தமது நிறுவனத்தின் பெயரில் சொருகிக்கொள்வார்கள்.
அல்லது, ‘ உதவும் கரங்கள் ’ ( Helping Hands ) என்பதை ‘ கரங்கள் ‘ என்றோ ’ கரம் ‘ என்றோ பயன்படுத்துவார்கள்.
இதன்மூலம், மக்களின் சந்தேகப்பார்வையிலிருந்து தப்பிக்கொள்வார்கள். இன்னும், அவ்வப்போது ஏதாவது ஒரு சாக்கில் , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்சந்தித்து, மறக்காமல் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து, அதைப்பிரபலப்படுத்தி, தாம் மேல்மட்டங்களுடனெல்லாம் தொடர்புள்ளவர்கள் என்பதுபோல மாயை காட்டுவார்கள்.
யாராவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், இவர்களைச்சந்திக்க மறுத்தால்,
அவர்களைக் கீழ்த்தரமாகத்திட்டித் தமது வலைப்பூக்களில் செய்தி வெளியிடுவார்கள்.
இப்படிச்சேர்த்த பணத்திலேயே இலங்கைக்குச் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமது உறவினர்கள் தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒருபகுதியைக்கொடுத்துவிட்டு , இவர்களுக்குத்தான் புதிய வாழ்க்கைதொடங்க உதவுகிறோம் என்று ஏமாற்றுவார்கள்.
முழுமையான வரவு - செலவுக்கணக்குகளைக்கூடக்காட்டமாட்டார்கள்.
“ சிறியதொகை தந்தவர்களின் பெயரை வெளியிட்டால் அவர்கள் மனவருத்தப்படுவார்கள் “ என்ற சாக்குச்சொல்லி
அரைகுறைக்கணக்குவழக்கையே வெளியிடுவார்கள்.
தட்டிக்கேட்க யாரால்முடியும்? புலியின் கதைதான் முடிந்துவிட்டதே! ... என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவர்கள் இவர்கள்!

இப்படியாகப் புலியைப்பார்த்த ‘யானைபார்த்த குருடர் ’ களில் -
முதலாவது வகையின் முதன்மூன்று பிரிவினர்தான் இவர்கள்.

இன்னும், இவர்களிடையேயும் , -
முகத்துக்கஞ்சி ...........யாடுவோர் என்ற ரகமும் இருக்கத்தான் செய்கிறது.அதாவது, புலி தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் - நிகழ்ச்சிகளை மனதார இவர்கள் தவிர்க்கவிரும்பினாலும் , அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
தற்செயலாகத் தமிழீழம் கிடைத்துவிட்டால், அங்குள்ள தமது நிலபுலங்கள் வீடுகளைப் பார்க்கமுடியாமற்போய்விடுமே என்பதற்காக -
புலி ஆதரவாளர்கள் பார்க்கும்படியாக இடைக்கிடை அங்கு முகம் காட்டுவார்கள்.
அதிலும் இவர்கள் புத்திசாலித்தனமாக, புலி ஆதரவாளர்களால் நடாத்தப்பெறும் ‘மே தின ஊர்வலம் ’ போன்ற, இரண்டிற்கும் இடைப்பட்டவற்றிற்கே சமுகமளிப்பார்கள்.
இதன்மூலம், தமது துரோக வட்டத்தில் கேள்வி எழுந்தால், -

“ இவங்கடைக்கு ஆரும் போவாங்களே? நான் மேதின ஊர்வலம் எண்டபடியாத்தான் போனனான் “ என்று சொல்லித்தப்பிக்கொள்வார்கள்.

நானறிந்த இவ்வகையான ஒருவர், தனது பிள்ளைகளை, புலிவாடையே படக்கூடாது என்ற கரிசனையுடன் மிகவும் கவனமாகவே வளர்த்துவந்தார்.
ஆனால், அவரின் மூத்த மகன், கடந்த மாவீரர்தினத்திற்கு வந்திருந்தான்.
எதிர்பாரமல் என்னைச் சந்தித்தவன், தான் அங்கு வந்தமைபற்றித் தந்தையாரியம் சொல்லவேண்டாம் என்று என்னிடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டான்.
நானும், ‘ அப்பன் அப்படி இருந்தாலும், இவனாவது இளைஞர் அமைப்புடன் சேர்ந்தியங்குகிறானே என்று சந்தோஷப்பட்டேன். பிறகுதான் தெரிந்தது - அவன் வந்தது , அங்குவரும் பெண்பிள்ளைகளைப்பார்ப்பதற்காக என்று...
இஃதெப்படியிருக்கிறது?
தமிழினத்தின் விடிவிற்காய் தம்மையே ஆகுதியாக்கிய அந்த ஒப்பற்ற மாவீரர்களுக்கான நினைவுநாள், எப்படியெப்படியெல்லாம் பயன்படுகிறது.

இப்படியானவர்கள் நமது சமுதாயத்தின் குள்ளநரிகள்.
இவர்களுடன் எதையும் மிகுந்த அவதானத்துடனேயே பகிர்ந்துகொள்ளவேண்டும்.

இன்னும் ஒருசில வினோதமான சனங்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன.
இவைகளைப்பொறுத்தவரை , ‘ இராமன் ஆண்டாலென்ன... இராவணன் ஆண்டாலென்ன....
ஒலிவாங்கியுடன் மேடை எங்கெல்லாம் கிடைக்குமோ , அங்கெல்லாம் தோன்றுவார்கள் இந்த ஈனப்பிறவிகள்.
புலிகள் களத்தில் நின்ற, கடந்த 2008வரை, துரோகிகளின் மேடை கிடைக்காமையால், வேறுவழியின்றி புலிகளுடனேயே நின்று
வீரவசனம் பேசித்திரிந்தவர்கள் -
தமிழகத்தலைவர்கள் தோன்றும் மேலைத்தேய மேடைகளிலெல்லாம் தலையைக்காட்டி, தம்மைப் பெருமிதப்படுத்திக்கொண்டவர்கள் -
2009 இலிருந்து புலிகளின் பின்னடைவைக்கண்டு மெல்லமெல்ல காணாமற்போகத்தொடங்கினர்.
அதுமட்டுமல்லாது துரோகக்குழுக்களைத் தேடிப்போகவும் தலைப்பட்டனர்.

இங்கு புலிகளின் மேடைகளில் பேசியவீர வசனங்களுக்கு முழுமாறாக , அங்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் , மறக்காமல் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் தூற்றுவார்கள்.
இன்னும், ”தொலைந்தான் பிரபாகரன்.இனி பிரச்சினையில்லை; சும்மா சும்மா காசு காசெண்டு இங்கை வரமாட்டாங்கள்” என்று கூடிக்கதைப்பார்கள்.
இவர்களெல்லாம், புலியின் பலத்தைப் பார்க்காமல்,
மலத்தைமட்டும் பார்த்தவர்கள்.
ஒன்றிலிருந்து ஐந்துவரை அறிவுகொண்ட ஜந்துக்கள்!
அப்படித்தான் இருப்பார்கள்.
இவை மட்டுமல்ல... இன்னும் தினுசு தினுசாக எத்தனையோ ரகங்கள் உண்டு.அத்தனையையுமிங்கு அலசமுனைந்தால், இன்னும் நூறு பாகங்கள் முடிந்தாலும் இக்கட்டுரை முடியாது. எனினும், குப்பை கூளங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று அறிந்துவைத்திருந்தாற்றானே சமயத்தில் நாம் அவற்றைத்தவிர்த்து நடந்துகொள்ளமுடியும்?
இந்தக்காரணத்துக்காகத்தான் , இரண்டு பாகங்கள் முடியும்வரையில் இதை அலசவேண்டியதாயிற்று.
இனி, அடுத்த பாகத்தில் புலி ஆதரவாளர்களிடையே உள்ள முரண்பாடுகளையும் அதற்கான காரணங்களையும் விரிவான முறையில் ஆராய்ந்து அம்முரண்பாடுகளைக் களைவதற்கான வழிவகைகள் பற்றியும் ஆராய்வோம்.
மீண்டும் மூன்றாம் பாகத்தில் சந்திப்போம் உறவுகளே!

அன்புடன்
சிவம் அமுதசிவம்