எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Tuesday, November 6, 2012

விகடனின் ´விற்பனைக்கான கற்பனை.`


விகடனின் ´விற்பனைக்கான கற்பனை.`


முந்நாள் விடுதலைப்புலிப் போராளி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு பெண்,
தனது வயிற்றுப் பசி தீர்க்க,பாலியல் தொழில் செய்து  உயிர் வாழ்வதாக,
´விகடன்` குழுமப் பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரை பல வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
ஏற்கெனவே,பல அறிஞர்கள் இந்த விகடனின் முகத்திரையைக்
கிழி கிழியென்று கிழித்தேவிட்டார்கள்!
எனினும், எனது மனதிற் தோன்றும் கருத்துக்களையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

இதை வெறுமனே ஒரே கோணத்தில் பார்க்காமல் வெவ்வேறு வகைகளில்  நோக்கவேண்டியுள்ளது.

உண்மையில், அப்படியொரு பெண் இருந்து, அவரே இப்பேட்டியை அளித்திருந்தால்,
1.இவர் சொல்வது பொய்..
2.இயக்கத்துக்கும் உண்மையில்லாமல், தமது குடும்பத்துக்கும் உண்மையில்லாமல்
 அவ்வளவு காலமும் ஒரு போராளியாக நடித்திருக்கிறார்.

அல்லது,
3.  இந்த விகடன் குழுமமே, தனது வியாபாரத்தில் ஏற்பட்ட தற்காலிகமான தொய்வைச் சரிசெய்வதற்காக
இப்படியொரு கற்பனைக்கதையை உருவாக்கியிருக்கிறது.

இம்மூன்று தேர்வுகளிலுமுள்ள முதலிரண்டு நேர்மறையான கருத்துகளைப்பற்றி முதலில் ஆராய்வோம்.

இந்தப்பேட்டி அளித்ததன் மூலம் இப்பெண் யாருக்கு என்ன நன்மை செய்ய முயன்றிருக்கிறார் என்று ஆராய்ந்தால், -
யாருக்கும் எதுவுமில்லை என்பதுதான் முடிவாக இருக்கும்.

தமது வயிற்றுப்பசி தீர்ப்பதற்காக பாலியல் தொழிலாளியானதாகக்கூறும் இவர்
 வெறுமனே,பத்திரிகைக்காரரின் பசி தீர்க்கவே பயன்பட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகள் என்றாலே ஒழுக்கம் மிகுந்தவர்கள் என்பது உலகறிந்த உண்மை.

எதிரிகளும் ஏற்றுக்கொண்ட உண்மை.

இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு , ஜேர்மனியின் நீதிமன்றத்தில் நிகழ்ந்த
சம்பவமொன்றைக்  குறிப்பிடலாம்.

1985 ம் ஆண்டு பிற்பகுதியில், விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், -
விடுதலைப்புலிகளின் ஜேர்மன் கிளைப் பொறுப்பாளராகச் செயற்பட்டவர்
 கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒவ்வொரு மாநிலப் பொறுப்பாளர்களும் தனித்தனியே விசாரிக்கப்பட்டனர்.

அதில் ஒரு பொறுப்பாளரைப் பார்த்த நீதிபதி, அவர் புகைப் பழக்கம் உள்ளவர்
என்பதைக் கண்டுகொண்டு, பின்வருமாறு கேட்டார்:

"உனக்கு மதுப் பழக்கம் உண்டா?"
" இல்லை " 
" உனக்குச் சிகரட் பிடிக்கும் பழக்கம் உண்டா? "
" சிலவேளைகளில்.. "  சங்கடத்துடன் நெளிந்தபடி இழுத்தார் அந்தப் பொறுப்பாளர்.
ஆனால், அவர் சங்கிலித்தொடர் ( Chain smoker)  புகைப்பிடிப்பாளர் என்பது, அவரது தடித்த உதடுகளின் கருமையிலேயே தெரிந்தது.
நிதிபதியும் விடாமல், " உனது மேலிடத்துக்கு அறிவிக்கட்டுமா? " என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.
நீதிமன்றமே சிரிப்பலைகளால் அதிர்ந்தது.

அவ்வளவுக்கு, ஜெர்மானியர்களே, விடுதலைப்புலிகளின் ஒழுக்கத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்
என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம்.

மேலும், இவ்வளவு ஒழுக்கம் மிகுந்த ஒரு இயக்கத்தில் நீண்டகாலம் பயிற்சி பெற்ற ஒருவர்,
எவ்வளவு உடல் வலிமை மிகுந்தவராக இருக்கவேண்டும்?
ஒரு சராசரி ஆணை விடவே, பெண்புலிகள் வலிமை மிக்கவர்கள் அல்லவா?.
அப்படியிருக்க எதற்காக இவர் பாலியல் தொழில் செய்யவேண்டும்?
ஒருவேளை, 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு, உடல் வலிமை குன்றியிருந்தாலும்கூட, -

´உடல்வலிமை குறைந்தவர்களெல்லாம் பாலியல் தொழிலில் ஈடுபடலாம்`என்று சொல்லலாமா?

இன்னும், இவரைவிடவும் உடல் வலிமை குறைந்த பெண்கள்  ஈழத்தில் இல்லையா?

அத்தனை பெண்களுமே பாலியல் தொழிலையா செய்கிறார்கள்?
எனவே, இவர் கூறும் அடிப்படைக்காரணமே இங்கு தகர்ந்துபோகிறது.

இனி, அந்த மூன்றாவது தேர்வான, ´விகடனின் கற்பனை`என்பதைக் கருத்திற்கொண்டு,
நோக்கினால், -

பொதுவாகவே விகடன் குழுமம் மட்டுமல்லாது, பெரும்பாலான தமிழகப் பத்திரிகைகளுமே
கொள்கைப்பிடிப்பில்லாமல் இயங்குபவைதாம்.
அதிலும் இந்த விகடன் குழுமத்தின் நகர்வு கொஞ்சம் வித்தியாசமானது.
தமிழ்நாட்டில் புலி ஆதரவு பலமாக இருந்த காலத்திலேயே,
´ஆனந்த விகடன்`இல் புலிகளுக்கு எதிராகவும், ´ஜூனியர் விகடன்`இல் புலிகளுக்கு ஆதரவாகவும் எழுதி
இருசாராரிடமும் சம்பாதித்த வரலாறும் இதற்கு உள்ளது.

இதைக் கருத்திற்கொண்டுதான், ஈழப்பிரச்சினையை மையக்கருவாகக்கொண்டு வெளியான ´ஆணிவேர்`என்ற திரைப்படத்தில்
 ஒரு காட்சி வரும்..

கதாநாயகன் குண்டடிபட்ட குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது,
அங்கு வந்த தமிழக நிருபரான கதாநாயகி ஒலிவாங்கியை நீட்டுகிறாள்..
இதனால் வெகுண்டுபோன அவன், " எங்கள் இரத்தத்தையும் சதையையும் காசாக்க வந்துவிட்டீர்களா?.. போடீ.." என்று சீறுகிறான்.
அதாவது, கொள்கைப்பிடிப்போ மனிதநேயமோ அன்றி இன உணர்வோ .... ஏதுமின்றி, முழுக்க முழுக்க பணத்தையே
 குறிக்கோளாகக்கொண்டு இயங்கும் கீழ்த்தரமான உலகம்.

´வட்டுக்கோட்டை` - ´நவாலி` - ´புக்காரா`  இப்படி ஒருசில சொற்பதங்களை வைத்து,  இந்தப்பேட்டியை அளித்தவர் ஒரு உண்மையான ஈழப்போராளிதான் என்று காண்பிக்கமுனைந்திருக்கிறது இப்பத்திரிகை.

இவையெல்லாம் இன்று ´சனல் 4` தொலைக்காட்சியினால், உலகம் முழுவதுமே அறிந்த சொற்கள்.

இன்னும், இக்கட்டுரையாளர் தம்மையறியாமலே பல முரண்பாடுகளை இதில் வைத்திருக்கிறார்.

இதில் முக்கியமானதாக, ´ ஈழவிடுதலை கிடைத்ததோ இல்லையோ, பெண்விடுதலை கிடைத்துவிட்டது ` என்று கூறும் இவர்,
அதற்கு மறுதலையாக, தாம் பெண் என்பதால் கணவர் இறந்தபின் வாழ வழியின்றி பாலியல் தொழிலாளியாக மாறியதாகச் சொல்கிறார்.

எத்தனையோ மனைவியை இழந்த  ஆண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

அத்தனை ஆண்களுமே பாலியல் தொழிலா செய்கிறார்கள்?

வன்னிக்குப் போய்வந்த எனது நண்பரொருவர் தாம் பட்ட அனுபவத்தை இப்படி விபரித்தார்:

ஒரு காலை முழுமையாக இழந்த ஒருவர், சிறிய குடிசையொன்றில், நான்கு பிள்ளைகளுடன் வசிக்கிறார்.
மூத்தவளுக்கு வயது 15 இருக்கலாம். அப்படியே 12... 10... 8 என்ற வரிசையில் கடைக்குட்டிதான் ஆண் பிள்ளை.
அக்குடிசையுடனேயே ஒரு சிறு பத்தியொன்றை இறக்கி, அதில்  ´மிதிவண்டி திருத்தும் நிலையம்`ஒன்றை நடத்திவருகிறாராம்.
அந்த 5 சீவன்களுக்கும் அவ்வப்போது ஒருநேரக் கஞ்சிக்கேனும் வழியேற்படுத்துவது அந்தத்தொழில்தானாம்.
இவ்வளவு சிக்கலுக்கு மத்தியிலும், அத்தனை பிள்ளைகளும் பாடசாலைக்கும் போகிறார்களாம்.

தமக்கென்றால்,சொல்லொணாத கவலையும், அதேவேளை ஆச்சரியமாகவும் இருந்ததாம்.
அவரிடம் பேச்சுக்கொடுத்ததில், அப்பிள்ளைகளை அவர் மட்டுமே வளர்த்து வருவதாகச் சொன்னாராம்.

ஒருவேளை, அவரது மனைவி போரில் இறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, தாம் அவரைப்பார்த்து,
" ஏன்? உங்க மனைவி மோசம் போய்விட்டாவா?" என்று கேட்டாராம்.
சிறிதுநேரம் பதிலே சொல்லாமல் அமைதிகாத்த அவர், திடீரென முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க,
" அவ மோசம் போகேல்லை.. வேசம் போட்டா" என்றாராம்.
தாம் ஏதும் புரியாமல், ´திரு திரு`வென முழிக்க, அவரே தொடர்ந்து சொன்னாராம் - தமக்கு ஒரு கால் போனதிலிருந்து
தமது மனைவி வேறொருவனுடன் ஓடிவிட்டாள் என்று.

இதுபோல, அங்கே வன்னியில், அந்த மக்கள் நினைத்தே பார்த்திராத -  யாரும் கற்பனையே செய்ய முடியாத நிலைமைகள் இன்னும் ஏராளம் உண்டு.
இப்போது நான் கேட்கிறேன்: இந்த நிலையில் அந்த ´விகடனின் கற்பனைப் போராளி` இருந்தால்,ஒருவேளை பாலியல் தொழிலுடன் , போதை மருந்துக் கடத்தலும் செய்வாரோ?
மேலும், யாழ்ப்பாணத்தைக் கேவலப்படுத்தும் ஒரு முயற்சியாக, ´யாழ்ப்பாணம் வந்த கணத்திலிருந்துதான் நான் பாலியல் தொழிலாளியானேன்`என்கிறாராம்.....யாழ்ப்பாணம் என்றாலே ஏதோ சிவப்பு விளக்குப்பகுதி என்பதுபோல.
உலகிலேயே தனித்தன்மையான வாழ்க்கைமுறையினைக்கொண்ட யாழ் குடாவில், திட்டமிட்டே கலாசாரச் சீரழிவினை ஏற்படுத்தும் சிங்களக் கைக்கூலிகளை ஏன் இவர் குறிப்பிடவில்லை?
பிச்சை போடவே பயந்தவர்கள், கூடப்படுக்கமட்டும் பயப்படவில்லையாம். இது நம்பக்கூடியதாகவா இருக்கிறது?
´ எங்களை வைத்து வியாபாரம் செய்வதை நிறுத்துங்கள்` என்று இந்தியத்தலைவர்களைப் பார்த்து அப்பெண் கேட்கிறாளாம்.
அதாவது, அந்த வியாபாரத்தைத் தமக்கு மட்டுமே தனியுடைமை ஆக்குமாறு கேட்கிறது விகடன்.

´எமது போராட்டம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது` .......

இதைச் சொல்லுமளவுக்கு இவர் என்ன உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவரா?
ஆயுதப்போராட்டம் வேண்டுமானால் மழுங்கடிக்கப்பட்டிருக்கலாம். அதுகூட, ´ மௌனிக்கப்பட்டுள்ளது` என்றுதான் புலித்தலைமை அறிவித்தது.
ஆனால், அரசியல் போர் தொடர்கிறது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாத ஒருவர் சொன்னதாக, இக்கட்டுரையாளர் எமக்குச் சொல்வது என்பது,  அப்பட்டமான ´காதுல பூ` இல்லாமல் வேறென்ன?
இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விடயம்:

இந்தியத்தலைவர்களை - தமிழீழத்தலைவர்களை என்று சகட்டு மேனிக்குச் சாடும் இவர்,  மறந்தும் இப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த சோனியா காங்கிரசைச் சாடவில்லை.
சிறிலங்காவைக்கூட ´அமைச்சர்கள்`என்று பட்டும் படாமலும் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, சிங்கள அரசு என்றோ, மகிந்த அரசு என்றோ குறிப்பிடவில்லை.
புலிகளுக்கு எதிரானதா, அன்றி ஆதரவானதா என்று மக்கள் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே,
விற்பனையில் சாதனை படைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரை.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்லி, சோ சாமி, சு சாமி போன்றவர்களையும் திருப்திப்படுத்தி,
´இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன்` என்று, தமிழுணர்வாளர்களையும் குளிர்வித்து,
´ஈழவிடுதலை கிடைத்ததோ இல்லையோ, பெண்விடுதலை கிடைத்துவிட்டது`என்று, பெண்ணியவாதிகளையும் கட்டிப்போட்டு,

ஒரு மாயாஜாலங்காட்ட முனைந்திருக்கிறது இந்தக் கேடுகெட்ட விகடன்.

இதையெல்லாம் பார்த்தால், 1970 களில் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான, அமரர் சொக்கன் அவர்கள் சொன்னதுதான் ஞாபகத்துக்குவருகிறது.

´தமிழகச் சஞ்சிகைகளின் இறக்குமதி அவசியமா? அவசியமில்லையா? ` என்ற தலைப்பில் ,யாழ்.பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில்,பலரது கருத்தும்  ´அவசியம்`என்ற வகையிலேயே அமைந்திருந்தது.
அதிலும் ஒருவர், " நாம் தமிழகமக்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. அதனால், இறக்குமதி அவசியமே" என்றார்.
இதனால், வெகுண்டுபோன கவிஞர் சொக்கன் அவர்கள், ´கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், தேவி வார இதழ்  ஆகிய 4 சஞ்சிகைகளையும் கைகளில் உயர்த்திப்பிடித்தபடியே சொன்னார் :  இந்த 4 சஞ்சிகைகளுக்குமே குறைந்தபட்சமாக 4 முதலாளிகள்தான் இருப்பார்கள்.
இந்த 4 முதலாளிகளுக்காக 35 இலட்சம் தமிழ் மக்களை வெறுப்பார்களேயானால், அந்த 4 கோடி மக்களின் ஆதரவு நமக்குத்தேவையில்லை.

இன்று தமிழன் எடுக்கவேண்டிய முக்கியமான முடிவும் இதுதான்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள்,தொலைக்காட்சிகள், திரைப்படங்களுக்கெல்லாம்  அவ்வப்போது தகுந்த பாடம் புகட்டி,
தமிழின விடுதலையைத் தடம் புரளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
செய்வோமா?

     --- சிவம் அமுதசிவம்.

1 comment:

  1. உறவே இந்த ஆதாரங்களையும் ஒரு முறை படித்துப் பாருங்கள்
    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஈழ வியாபாரி விகடனுக்காக ஈழத்திலிருந்து சில ஆதாரங்கள்

    ReplyDelete