ஐயா!தங்கள் பெயரின் முன்னே இருக்கும் அடைமொழிக்கு முற்றிலும் தாங்கள் தகுதியானவரே!
பேசும்போதுகூட,அந்த உச்சரிப்பு,கேட்கக்கேட்கத் திகட்டாது.
தங்கள் பேச்சுகளை இணையத்தில் தேடியெடுத்து,அடிக்கடி நான் கேட்பதுண்டு.அவ்வளவுக்கு நான் தங்களின் பரம இரசிகன்.
ஆனாலும்,அண்மையில் ´சிங்களர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டது`பற்றித் தாங்கள் வெளியிட்ட கருத்து என்மனதைக் கொஞ்சம் புண்படுத்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
அமைதி வழியிலேயே முப்பது ஆண்டுகள் போராடி,
ஒரு தலைமுறையே நாசமாய்ப் போனதுதான் நம் வரலாறு என்பது தாங்கள் அறியாததல்ல.
அமைதி வழியில் போராடியவர்களுக்கெல்லாம் கிடைத்த பரிசுகள்,துப்பாக்கிக்குண்டுகளும்,தூஷண வார்த்தைகளுமே!
நிராயுதபாணிகளாக நின்றவர்களிடம் வீரத்தைக் காட்டினார்கள் அந்த வீணர்கள்.
துரத்தித்துரத்தி வெட்டினார்கள்.
ஓடினோம்! ஓடினோம்!! ஓடிக்கொண்டேயிருந்தோம்.
அப்போதுகூட அவர்கள் துரத்துவதை நிறுத்தவில்லை. கூக்குரலிட்டோம்.யாருமே கண்டுகொள்ளவில்லை. கூப்பிடுதூரத்திலுள்ள தமிழகமே ஏனென்று கேட்கவில்லை. அழுதோம்! அழுதோம்!! அழுதுகொண்டேயிருந்தோம்.
இந்த அழுகையை நிறுத்த - கண்ணீரைத்துடைக்க ´புலியென`புறப்பட்டான் ஓரிளைஞன்.
அவன் தான் எங்கள் மேதகு தலைவன் பிரபாகரன்.
அடுத்தகணமே எமது இரகசியப் பேச்சுகளைக்கூட உலகம் உற்றுக்கேட்டது.
தங்களைப் போலவே,காந்தியாரின் கொள்கைகளில் பற்றுவைத்து,அமைதி வழியிலேயே போராட்டங்களை முன்னெடுத்து அழிந்துபோன,ஈழத்தின் தந்தைசெல்வாவின் காலத்திலிருந்து,
முள்ளிவாய்க்காலில் மௌனித்துப்போன புலிகளின் ஆயுதப்போராட்டம்வரை,
இந்தச்சிங்களர்கள் தமது அரசைத் தேர்ந்தெடுப்பதற்குரிய அடிப்படைத் தகைமையாக எதைக் கொள்கிறார்கள்?
´எவர் அதிகமாக இனவாதத்தைக் கக்குகிறார்`என்பதைத்தானே?இவர்களைப்பொறுத்தவரை,அன்பு,கருணை,இரக்கம் என்பனவெல்லாம் நூதனசாலையில் வைக்கவேண்டியபொருட்கள்.
இதற்குமேலும் இவர்களுக்கெல்லாம் அமைதிவழியில் எதையாவது புரியவைக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா?
மகாத்மா காந்தியே வன்முறையை முற்றாக எதிர்க்கவில்லையே!பெண்கள் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள,விரல் நகங்களையே ஆயுதங்களாக்கி வன்முறையில் ஈடுபடலாம் என்றுதானே சொல்கிறார்?
நமது நிலைமை இதைவிட மோசமானதில்லையா?
மேலும்,காந்தியின் காலம் என்றோ காலாவதியாகிவிட்டது.
காந்தி என்றபெயர்,அவருக்கே இல்லையென்றாகிவிட்டது.
ஆயுதப்போராட்டம் என்பதைவிட,
நினைத்துப்பார்க்கமுடியாத கொடுமைகளுக்கு வித்திட்ட சர்வாதிகாரிகளுள் ஒருவரான ´முசோலினியின்`முக்கிய தளபதியொருவரின் தவப்புதல்வியிடம் அடைக்கலமாகிவிட்டது.
ஸ்ரீலங்காவைத்தான் விட்டுத்தள்ளுவோம்... இந்தியத்திருநாட்டிலேயே ´மகாத்மாகாந்தி`என்பது மாயை என்றாகிவிட்டது.
திலீபனைச் சாகவிட்டோம்;
செந்தூரனைக் கண்டுகொள்ளவேயில்லை.
இன்னும் ஆண்டுக்கணக்காக அமைதிவழியில் போராடிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களின்மீதே ஆயுதவன்முறைதான் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
அமைதிவழியில் போராடும் நமது மக்கள் செத்து விழுந்தால், எத்தனை பிணங்களையும் தின்னக் காத்திருக்கின்றன பேய்கள்.
வெள்ளையர்கள் காந்தியாரின் அமைதிவழிக்கு மதிப்புக் கொடுத்தார்கள்;
ஆனால் அந்த அமைதிவழியைத் தங்களுடனேயே எடுத்தும் சென்றுவிட்டார்கள்.
இதனாற்றான்,இலண்டன் மாநகரில் உண்ணாவிரதமிருந்த இளைஞன் பரமேஸ்வரனை அமெரிக்காவரை அழைத்துப்போய் பேச்சுவார்த்தை நடத்தி,அவனது உயிரைக் காப்பாற்ற அவர்களால் முடிந்தது.
இன்னும்,முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறிக்கொண்டிருந்த அந்த வேளையில்,தமிழகமே திரண்டுநின்று,ஒரேகுரலில்
" ஏ! ஸ்ரீலங்காவே!போரை நிறுத்து!அப்பாவி மக்களின்மீது குண்டுகளைப் போடாதே!" என்று பெருங்குரலெடுத்துக் கத்தியது.
,அவர்களுக்கு அது துளியும் கேட்கவில்லை. டில்லிக்கும் கேட்கவில்லை.ஏன்?தமிழக ஆட்சியாளர்களுக்கே கேட்கவில்லை.
இன்னும்,எங்களைக் ´கோமாளிகள்`என்று கேலிசெய்தார்கள்.
ஆனால்,இது மட்டும் உடனடியாகவே அனைவரது காதுகளிலும் விழுந்து,அடுத்த கணமே நம்முடன் போர்ப்பிரகடனமும் செய்துவிட்டார்கள்.
இப்போது,நான் தங்களிடம் கேட்கும் கேள்வி: இந்தக் கல்லில் நார் உரிக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா?
அதாவது,அமைதிவழிப் போராட்டம் இவர்கள் விடயத்தில் பலன்தருமா?
இவர்களிடம் நாம் நீதியை எதிர்பார்ப்பது,´கசாப்புக் கடைக்காரனிடம் ஆடு கருணையை எதிர்பார்ப்பதுபோலில்லையா?
எனவே,காந்தியாரின் பெயரால் இயக்கம் கண்டிருக்கும் தாங்களாவது,எனது இந்த மனக்குமுறலைப் புரிந்துகொண்டு, நியாயம் வழங்குவீர்கள் எனும் எதிர்பார்ப்புடன் இம்மடலை நிறைவுசெய்கிறேன்.
வெல்க தமிழ்!!!
இலங்கையில் இருந்து ஆன்மீக வழிப்பாடுகளுக்காக வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு சென்ற இலங்கையர்கள் மீது (சிங்களவர், தமிழர் இரு சாரரும் இருந்துள்ளனர்) தாக்குதல் நடத்தியும், இலங்கை பாடசாலை மட்ட உதைபந்தாட வீரர்கள்(சிறுவர்கள்) நட்பு ரீதியான விளையாட்டு போட்டிக்கு சென்னை சென்றதை எதிர்த்து, அவர்களை திருப்பி அனுப்பியும், மற்றும் தமிழ்நாட்டில் காணும் இடமெல்லாம் இலங்கை அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தியும் சந்தோஷ பட்டுகொள்ளும் தமிழ்நாட்டு நண்பர்களே! உங்கள் செயல்களால் அவமானம் அடைந்து வெட்கி தலைகுனிந்து பாதிப்புறும் ஒரு சாமான்ய இலங்கை தமிழன் நான்.
ReplyDeleteநீங்கள் செய்தது தப்பென்று நாம் கூறவில்லை. உணர்ச்சிகள் மேலோங்கும் போது இவ்வாறு செய்யத்தான் தோணும். உங்களின் உணர்வுகள் புரிகின்றன. இதைவிட அதிகமான உணர்ச்சியில் 30 வருடங்களுக்கு மேலாக இருந்தவர்கள் நாங்கள். ஆனால் நீங்கள் இலங்கையர்களை தாக்கும் அந்த கணங்களில் இலங்கையில் வாழும் எம்போன்ற அப்பாவிகளை கொஞ்சமாவது நினைத்து பார்கின்றீர்களா? உங்கள் செய்கைகளினால் பாதிக்கப்பட போவது சென்னையில், மதுரையில், திருச்சியில், கனடாவில், நோர்வேயில் வசிக்கும் தமிழன் அல்ல.துவேஷ வன்மங்களுக்கு ஆளாகபோவது மீண்டும் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழனே. லட்சங்களில் சொந்தங்களை இழந்து வாடும் இலங்கை தமிழனே. எங்கள் வலிகளை புரிந்துகொள்ளுமாறு கெஞ்சுகிறோம்.
30-40 வருஷமா வராத பாசம் எங்க இருந்துய்யா வந்துச்சு உங்களுக்கு? நாங்க எல்லாம் கொத்து கொத்தா செத்து போனப்போ, தமிழ்நாட்டுல இருந்து எவன்யா வந்தான். தமிழ்நாடு அரசு இந்திய மத்திய அரசோடும் இந்திய மத்திய அரசு இலங்கை அரசோடும் யுத்தகாலத்தில் கொஞ்சிக்குலாவி உறவாடி கொண்டுதானே இருந்தன. இப்ப மட்டும் தமிழ் நாட்டில் இலங்கை யாத்திரிகர்கள்,சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்துவதால், நீங்கள் சாதிக்க நினைப்பது ௭ன்ன? அதேபோல் இலங்கை அப்பாவி தமிழ்மக்களுக்கு இதனால் ஏற்படும் நன்மை ௭ன்ன?
அருமை நண்பரே,
ReplyDelete//´முசோலினியின்`முக்கிய தளபதியொருவரின் தவப்புதல்வியிடம் அடைக்கலமாகிவிட்டது.//
இது உண்மையா? விவரம் தாருங்கள்.