எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Friday, May 4, 2012

 முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகக்

கொலையுண்ட எமது உறவுகளுக்கான

 சிறப்புப் பதிவு.


முள்ளிவாய்க்கால்தானா முடிவாகிப்போகும் போடா! 

பாடல் இடம்பெற்றுள்ள குறுவட்டு : தாய்பிறந்த மண்

அடடா! தமிழா! தமிழா! தமிழா!
அடடா! தமிழா! தமிழா! தமிழா!

முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எத்தனை முறைதான் கடல் கொண்டது;
எத்தனை முறைதான்  இடர் தந்தது ;
அத்தனை முறையும் தமிழ் வென்றது
அடடா! வா தமிழா!
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எழுஎழு விரைவினில் தரணியில் தமிழதன்
இழிநிலை துடைத்திடுவோம் வா!
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
புயலொடு பொருதிடு பகைவரின் படையதில்
முடிவுரை எழுதிடு வாடா!

                                             - நம் - 
உறவுகள் அங்கே ஆயிரம்
மாண்டனர் அன்றோ ஆயினும் - நீ
மீண்டும் எழுந்தொரு தீயில் இறங்கிடு
நம்பிக்கை ஒன்றே ஆயுதம்
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 

எங்கள் மண்ணின் மடி தொட்டவன் - எமை
அங்கு நின்றபடி சுட்டவன் - ஒரு
ஆறடி மண்ணும் சொந்தமின்றி இனி
அழிந்துபோகத் தக்கவன்.
தமிழா! தமிழா! தமிழா!தமிழா! 
முள்ளிவாய்க்கால்தானா
முடிவாகிப்போகும் போடா! 
                                             ஆக்கம் : சிவம் அமுதசிவம் 

Friday, November 18, 2011

முதலாவது மாவீரர்நாள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட ,
1976 ம் ஆண்டிலிருந்து, தாயக விடுதலைக்காய் தமதின்னுயிரை ஈகம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளின் அளப்பரிய தியாகங்களையெல்லாம் , அவ்வப்போது உரியமுறையில் கௌரவித்து வந்த விடுதலைப்புலிகள், காலப்போக்கில் அதற்கென்றே ஒரு நாளைப் பிரகடனப் படுத்தினர். 
அதாவது, 1989 ம் ஆண்டு கார்த்திகைத்திங்கள் 27 ம் நாள் முதன்முதலாகத் தமிழீழத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் மாவீரர்களுக்கான 
அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த ’கார்த்திகை 27’ என்பது, அவ்வமைப்பின் முதற்களபலியான 
மாவீரன் செ.சத்தியநாதன் எனும் இயற்பெயரைக்கொண்ட 
லெப்.கேணல் சங்கர் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட தினம் எனும் குறியீட்டுடனேயே தேர்ந்தெடுக்கப்பட்டது. 
எனினும் மேலதிக ஒரு காரணமாக : தலைவர் பிரபாகரன் பிறந்தநாளான 
கார்த்திகை 26 ம் இணைக்கப்பட்டது.
1982 இல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு , படுகாயங்களுடன் குருதி சொட்டச்சொட்டத் தப்பியோடிவந்து, சிகிச்சைக்காகத் தமிழகம் கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி,
தலைவரின் மடியிலேயே உயிர்துறந்த 
அந்த உன்னதப்போராளியை மறக்கமுடியாமற்றான் 
13 ஆண்டுகள் கழித்து , அவ்வமைப்பு இக்கௌரவத்தை அவருக்கு வழங்கியது.
உலகறிய ’மாவீரர்நாள்’ பிரகடனப்படுத்தப்பட்டது 1989 இல் என்றாலும்,
அவ்வெண்ணக்கருவானது, அவர் பலியான 
ஓராண்டு நிறைவு தினமாகிய
1983 கார்த்திகை 27 
இலேயே விடுதலைப்புலிகளிடம் தோன்றியிருந்தது. 
மிகக்குறைவான உறுப்பினர்களையே கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் , யாழ்ப்பாண நகரத் தெருக்களின் சுவர்களையெல்லாம் அலங்கரித்த, அஞ்சலிக்கவிதைகளிற் சிலவற்றை 
இதிற்காணலாம்.


1. மீளாத் துயிலில் ஆழ்ந்தநம் தோழா!
           மீண்டு மிவண்வா! சத்தியநாதா!
     நாளா னாலும் நாமுனை மறவோம்.
            நாட்கள் சென்றால் நாமுனைத் தொடர்வோம்!
    தூளாய்ப் போகும் துட்டரின் சட்டம்!
            தூக்கி யெறிந்திடுவோம் எம திஷ்டம்!
    காளான் போலும் கட்சிக ளில்லை
           காண்போம் முடிவில் தனித் தமிழீழம்!

2.   விடைகொண்ட வீரா! வீறுடை வேங்கை
                 விண்ணிலே வாழும் சத்தியநாதா!
      குடைகின்ற தையா குமுறிடும் நெஞ்சம்!
                 கூடிடும் நாளோ ஓராண்டு காலம்!
      மடையினை வென்ற வெள்ளமா யோடும்
                மனதில்நாம் கொண்ட இலட்சியம் யாவும்
     தடையினை வென்று தாயகம் காப்போம்!
               தரணியிற் காண்போம் தனித் தமிழீழம்!

3.   விடிகின்ற வேளை வெளிவரும் அந்த
              வெள்ளியைப் போலும் விடுதலைப் போரின்
      அடித்தள மானாய் அன்பின்நம் தோழா!
              ஆவியை ஈந்தாய் சத்தியநாதா!
     கொடியவர்எதிரி இராணுவம் வசம்நீ
              கொடுத்திட வில்லை ஆயுதம் தன்னை
    கடிதினில் வந்தாய் - நம்வசம் தந்தாய்
            காலனோ டேனோ காதலிற் சென்றாய்?
                                                                 கவிதை ஆக்கம்: சிவம் அமுதசிவம்

அப்படிப் பார்த்தால், முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட ’ மாவீரர்நாள் ‘
1983 கார்த்த்கை 27 எனவும் கொள்ளலாம்.


Wednesday, April 20, 2011

’ பாகம் - 2 ‘ யானை பார்த்ததுபோல்......

மேற்குநாடுகளில் வாழும், புலி எதிர்ப்பாளர்களில் விசித்திரமான ஓரிரு பிரிவினரைப்பற்றி பாகம் - 1 இல் பார்த்தோம்.
இந்த வகையினரில் புத்திசாலித்தனமாகப் பொருளீட்டும் மற்றொருபிரிவினர்பற்றியும் இங்கு சிறிதளவு பார்ப்போம்.
இவர்கள் மக்களிடம் பணம் வசூலிக்கப்போகும்போது, தனிப்பட்டவர்களாகப்போகாமல், ஒரு நிறுவனமாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு போவார்கள்.
அதுவும், ஏற்கெனவே பிரபலமான தொண்டர்நிறுவனங்களின் பெயர்களின் சாயலிலேயே தமது நிறுவனத்தின் பெயரையும் அமைத்துவிடுவார்கள்.
உதாரணமாக, ‘ செஞ்சிலுவைச்சங்கம் ‘ என்பதிலுள்ள ‘ சிலுவை ‘ என்பதைத் தமது நிறுவனத்தின் பெயரில் சொருகிக்கொள்வார்கள்.
அல்லது, ‘ உதவும் கரங்கள் ’ ( Helping Hands ) என்பதை ‘ கரங்கள் ‘ என்றோ ’ கரம் ‘ என்றோ பயன்படுத்துவார்கள்.
இதன்மூலம், மக்களின் சந்தேகப்பார்வையிலிருந்து தப்பிக்கொள்வார்கள். இன்னும், அவ்வப்போது ஏதாவது ஒரு சாக்கில் , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்சந்தித்து, மறக்காமல் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து, அதைப்பிரபலப்படுத்தி, தாம் மேல்மட்டங்களுடனெல்லாம் தொடர்புள்ளவர்கள் என்பதுபோல மாயை காட்டுவார்கள்.
யாராவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், இவர்களைச்சந்திக்க மறுத்தால்,
அவர்களைக் கீழ்த்தரமாகத்திட்டித் தமது வலைப்பூக்களில் செய்தி வெளியிடுவார்கள்.
இப்படிச்சேர்த்த பணத்திலேயே இலங்கைக்குச் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமது உறவினர்கள் தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒருபகுதியைக்கொடுத்துவிட்டு , இவர்களுக்குத்தான் புதிய வாழ்க்கைதொடங்க உதவுகிறோம் என்று ஏமாற்றுவார்கள்.
முழுமையான வரவு - செலவுக்கணக்குகளைக்கூடக்காட்டமாட்டார்கள்.
“ சிறியதொகை தந்தவர்களின் பெயரை வெளியிட்டால் அவர்கள் மனவருத்தப்படுவார்கள் “ என்ற சாக்குச்சொல்லி
அரைகுறைக்கணக்குவழக்கையே வெளியிடுவார்கள்.
தட்டிக்கேட்க யாரால்முடியும்? புலியின் கதைதான் முடிந்துவிட்டதே! ... என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவர்கள் இவர்கள்!

இப்படியாகப் புலியைப்பார்த்த ‘யானைபார்த்த குருடர் ’ களில் -
முதலாவது வகையின் முதன்மூன்று பிரிவினர்தான் இவர்கள்.

இன்னும், இவர்களிடையேயும் , -
முகத்துக்கஞ்சி ...........யாடுவோர் என்ற ரகமும் இருக்கத்தான் செய்கிறது.அதாவது, புலி தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் - நிகழ்ச்சிகளை மனதார இவர்கள் தவிர்க்கவிரும்பினாலும் , அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
தற்செயலாகத் தமிழீழம் கிடைத்துவிட்டால், அங்குள்ள தமது நிலபுலங்கள் வீடுகளைப் பார்க்கமுடியாமற்போய்விடுமே என்பதற்காக -
புலி ஆதரவாளர்கள் பார்க்கும்படியாக இடைக்கிடை அங்கு முகம் காட்டுவார்கள்.
அதிலும் இவர்கள் புத்திசாலித்தனமாக, புலி ஆதரவாளர்களால் நடாத்தப்பெறும் ‘மே தின ஊர்வலம் ’ போன்ற, இரண்டிற்கும் இடைப்பட்டவற்றிற்கே சமுகமளிப்பார்கள்.
இதன்மூலம், தமது துரோக வட்டத்தில் கேள்வி எழுந்தால், -

“ இவங்கடைக்கு ஆரும் போவாங்களே? நான் மேதின ஊர்வலம் எண்டபடியாத்தான் போனனான் “ என்று சொல்லித்தப்பிக்கொள்வார்கள்.

நானறிந்த இவ்வகையான ஒருவர், தனது பிள்ளைகளை, புலிவாடையே படக்கூடாது என்ற கரிசனையுடன் மிகவும் கவனமாகவே வளர்த்துவந்தார்.
ஆனால், அவரின் மூத்த மகன், கடந்த மாவீரர்தினத்திற்கு வந்திருந்தான்.
எதிர்பாரமல் என்னைச் சந்தித்தவன், தான் அங்கு வந்தமைபற்றித் தந்தையாரியம் சொல்லவேண்டாம் என்று என்னிடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டான்.
நானும், ‘ அப்பன் அப்படி இருந்தாலும், இவனாவது இளைஞர் அமைப்புடன் சேர்ந்தியங்குகிறானே என்று சந்தோஷப்பட்டேன். பிறகுதான் தெரிந்தது - அவன் வந்தது , அங்குவரும் பெண்பிள்ளைகளைப்பார்ப்பதற்காக என்று...
இஃதெப்படியிருக்கிறது?
தமிழினத்தின் விடிவிற்காய் தம்மையே ஆகுதியாக்கிய அந்த ஒப்பற்ற மாவீரர்களுக்கான நினைவுநாள், எப்படியெப்படியெல்லாம் பயன்படுகிறது.

இப்படியானவர்கள் நமது சமுதாயத்தின் குள்ளநரிகள்.
இவர்களுடன் எதையும் மிகுந்த அவதானத்துடனேயே பகிர்ந்துகொள்ளவேண்டும்.

இன்னும் ஒருசில வினோதமான சனங்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன.
இவைகளைப்பொறுத்தவரை , ‘ இராமன் ஆண்டாலென்ன... இராவணன் ஆண்டாலென்ன....
ஒலிவாங்கியுடன் மேடை எங்கெல்லாம் கிடைக்குமோ , அங்கெல்லாம் தோன்றுவார்கள் இந்த ஈனப்பிறவிகள்.
புலிகள் களத்தில் நின்ற, கடந்த 2008வரை, துரோகிகளின் மேடை கிடைக்காமையால், வேறுவழியின்றி புலிகளுடனேயே நின்று
வீரவசனம் பேசித்திரிந்தவர்கள் -
தமிழகத்தலைவர்கள் தோன்றும் மேலைத்தேய மேடைகளிலெல்லாம் தலையைக்காட்டி, தம்மைப் பெருமிதப்படுத்திக்கொண்டவர்கள் -
2009 இலிருந்து புலிகளின் பின்னடைவைக்கண்டு மெல்லமெல்ல காணாமற்போகத்தொடங்கினர்.
அதுமட்டுமல்லாது துரோகக்குழுக்களைத் தேடிப்போகவும் தலைப்பட்டனர்.

இங்கு புலிகளின் மேடைகளில் பேசியவீர வசனங்களுக்கு முழுமாறாக , அங்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் , மறக்காமல் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் தூற்றுவார்கள்.
இன்னும், ”தொலைந்தான் பிரபாகரன்.இனி பிரச்சினையில்லை; சும்மா சும்மா காசு காசெண்டு இங்கை வரமாட்டாங்கள்” என்று கூடிக்கதைப்பார்கள்.
இவர்களெல்லாம், புலியின் பலத்தைப் பார்க்காமல்,
மலத்தைமட்டும் பார்த்தவர்கள்.
ஒன்றிலிருந்து ஐந்துவரை அறிவுகொண்ட ஜந்துக்கள்!
அப்படித்தான் இருப்பார்கள்.
இவை மட்டுமல்ல... இன்னும் தினுசு தினுசாக எத்தனையோ ரகங்கள் உண்டு.அத்தனையையுமிங்கு அலசமுனைந்தால், இன்னும் நூறு பாகங்கள் முடிந்தாலும் இக்கட்டுரை முடியாது. எனினும், குப்பை கூளங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று அறிந்துவைத்திருந்தாற்றானே சமயத்தில் நாம் அவற்றைத்தவிர்த்து நடந்துகொள்ளமுடியும்?
இந்தக்காரணத்துக்காகத்தான் , இரண்டு பாகங்கள் முடியும்வரையில் இதை அலசவேண்டியதாயிற்று.
இனி, அடுத்த பாகத்தில் புலி ஆதரவாளர்களிடையே உள்ள முரண்பாடுகளையும் அதற்கான காரணங்களையும் விரிவான முறையில் ஆராய்ந்து அம்முரண்பாடுகளைக் களைவதற்கான வழிவகைகள் பற்றியும் ஆராய்வோம்.
மீண்டும் மூன்றாம் பாகத்தில் சந்திப்போம் உறவுகளே!

அன்புடன்
சிவம் அமுதசிவம்


Thursday, April 7, 2011

யானை பார்த்ததுபோல் ‘ புலி ‘ யைப்பார்த்தவர்கள் - பாகம் 1


’ கிளையில் அமர்ந்திருந்த கிளியின் கழுத்துப்போல ‘ மிகத்துல்லியமான பார்வையுடன் , திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட தமிழீழப்போராட்டமானது, -
‘ தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ‘ என்பதுபோல்,
கணனி கிடைத்தவன் எல்லாம் தலைவனாகி, -
எதிரிக்காக, ஒன்றிற்குமேற்பட்ட பாதைகளைத்திறந்து செங்கம்பளம்விரித்து நிற்கிறது.
தமிழீழத்துக்கான எமது போராட்டம்,
தற்காலிகமாக முடங்கியுள்ளதேதவிர,
’முடித்துவைக்கப்படவில்லை ‘ என்பதை,
மௌனிக்கிறோம் ‘
என, மிகத்தெளிவாகத் தலைவர் குறிப்பிட்டுள்ளபோதிலும்,
அதைக்கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல்,
‘ புலிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது ‘
என்று மனனம் செய்வதிலேயே இன்பம்காண்பவர்கள்தாம் இங்கு அதிகமாக உள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இதுவரை காட்டிக்கொடுப்பு வேலைகளைமட்டுமே கனகச்சிதமாக்ச்செய்துகொண்டிருந்த பலர்,
‘ அண்ணை எப்ப சாவான் ; திண்ணை எப்ப காலியாகும் ‘ எனக்காத்திருந்ததுபோல -
இந்த இடைவெளியை நிரப்புவதில் போட்டிபோட்டுக்கொண்டு பொருளீட்டமுனைகின்றனர்.
ஆனாலும், இவர்கள் ,தமது துரோகமுகத்துக்கு , இனப்பற்று என அவர்களே சொல்லிக்கொள்ளும் ஒரு முகமூடியை அணிந்தபடியே புலம்பெயர்தேசத்துமக்களுள் வலம்வருகிறார்கள்.
அங்கு முள்வேலியிலுள் அல்லற்படும் மக்களுக்கு உதவிசெய்யப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டே பொருட்களாகவும் பணமாகவும் வசூலித்து தமது வாழ்வு வசதிகளைப்பெருக்கிக்கொள்கிறார்கள்.

உலகமே வியக்குமளவுக்கு இத்தனை அளப்பரிய தியாகங்களைச்செய்து, தமிழர்பிரச்சினைகளை உலகத்தின் கண்களுக்குத் தெரியவைத்த புலிகளைப்பற்றி இவர்களிடம்கேட்டால்,
“ இதைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க எமக்கு நேரமில்லை ; மக்களைப்பற்றித்தான் எமது கவலையெல்லாம்..... “
என்பதுபோன்ற தத்துவங்களை உதிர்த்துவிட்டு, -
புலம்பெயர்தமிழரைச்சுரண்டித் தமது வங்கிக்கணக்கை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர்.
அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்திடமே தட்டிப்பறித்து, தங்களுக்கு ஆதரவான சிங்களருக்கு வழங்கும் மகிந்தா கும்பலுக்கு , இவர்கள் எம்மாத்திரம்?
அப்படி இவர்கள் தட்டித்தவறி ஏதாவது, தமது உறவினர்களுக்கு வழங்கும் திட்டத்துடன் கொண்டுபோனாலும், அது முழுமையாக கொழும்பைத்தாண்டாது என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
செஞ்சிலுவைச்சங்கமானது, தான் கொண்டுபோன பொருட்களை, வினியோகம் செய்யும் இடத்தில்வைத்துத்தான் சிங்களக்காடையரிடம் பறிகொடுத்தது ; ஆனால், இவர்களோ தாமாகவே சிங்களரின் காலடியில்வைத்து, அதில் மிஞ்சும் ஓட்டை உடைசல்களைத்தான் அப்பால் கொண்டுபோகமுடியும். இதுதான் யதார்த்தம்.
யானை பார்த்த குருடர்கள் கதை நாமெல்லாம் சிறுவயதில் படித்ததுதான்.
ஒருவன் வாலைமட்டும் தடவிப்பார்த்துவிட்டு, யானை ‘ விளக்குமாறு ‘ போல் உள்ளது ‘ என்றானாம். மற்றவன், துதிக்கையைத்தடவிப் பார்த்துவிட்டு , உலக்கை போலுள்ளது என்றானாம். மற்றவர்கள் காலைத்தடவிப்பார்த்துவிட்டு ‘ தூண் ‘ என்றும், வயிற்றுப்பகுதியை ப்பார்த்துவிட்டு ‘ சுவர்’ என்றும் சொன்னார்களாம்.

இதைப்போலத்தான் இவர்களும்,----

மகிந்தாவின் பொய்ப்பிரச்சாரப்பீரங்கிகளை மட்டும் தடவிப்பார்த்துவிட்டு,
தம்மால் முடியாததை மகிந்தா செய்துமுடித்துவிட்டதாக, ஆனந்தத்தில் துள்ளிக்குதிப்பவர்கள்.
இந்த ரகத்தைச்சேர்ந்த இவர்கள் எக்காலமும் இப்படியேதான் இருப்பார்கள். இவர்களெல்லாம் முற்றாகப் புறந்தள்ளப்படவேண்டியவர்களே!
எனினும் இந்தப் புலி எதிர்ப்பாளர்களில் இன்னோருவகையினரும் இருக்கத்தான் செய்கின்றனர். அதாவது, தமக்கோ அன்றித் தமது உறவினருக்கோ போரின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்காகப் புலியைக்குறைசொல்பவர்கள். இவர்களை ஓரளவு மன்னிக்கலாம் - இவர்களது அறியாமைக்காக....
ஈவிரக்கமேயில்லாமல் குழந்தைகளைக்கூட பொசுக்கித்தள்ளிய சிங்களக்காடையரைவிட்டு , மானங்காக்கவந்த மறவரைக் குற்றஞ்சொல்லும் இவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்களே!
இந்த வகையினரை வழிக்குக்கொண்டுவருவது, தமிழுணர்வாளர்களின் சாதுரியமான அணுகுமுறையிற்றான் தங்கியுள்ளது.
மேற்சொன்ன இவ்விரண்டு பிரிவினரையும்விட, இன்னொருபிரிவினரும் உள்ளனர்.

இந்தப்பிரிவினர்பற்றி இரண்டாம்பாகத்திற்காண்போம்.

----------- சிவம் அமுதசிவம்


Wednesday, February 23, 2011

ஈழத்துத்தும்மல் - எச்சரிக்கை தமிழா! எச்சரிக்கை!

சினிமாவிலிருந்து ஒரு புதிய பூதம் கிளம்பியிருக்கிறது அரசியலுக்கு- பஞ்ச் டயலாக் உடன்.

தமிழனுக்கு விழும் ஒவ்வொரு அடியையும் தன்மீது விழுந்த அடியாக நினைத்துப்போராடுவாராம் -

அண்மைக்காலம்வரை தமிழனுக்குத்தலைவலியாகவும், சினிமாவில் தளபதியாகவும் இருந்த நடிகர் விஜய்.

அவரது டயலாக் இன்படி இதுவரை தமிழன் அடிவாங்கிக்கொண்டேயிருக்கிறானே!

இவர் முதுகில் எத்தனை ’தமிழ்த்தழும்புகள்’ வைத்திருக்கிறார்?

ஈழத்தில் தமிழன் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டானே! அப்படிப்பார்த்தால், இவர் ஏழேழு தலைமுறைக்கும் உயிருடனேயே இருக்கக்கூடாதே!

இவ்வளவுக்குப்பிறகும், காங்கிரஸ் கட்சியிலேயே முக்கியபதவியைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தவர்தானே இவர்?

அதுவுமல்லாமல்,” ராகுலை ஏன் சந்தித்தீர்கள்?” என்ற நிருபர்களின் கேள்விக்கு, ராகுலின் கொள்கைகள் தனக்குப்பிடிக்கும் என்றும் , அதனாலேயே தாம் ராகுலைச்சந்தித்ததாகவும் ,திமிரோடு பதிலளித்தவர்தானே இந்த நடிகர் விஜய்?

ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்டுவதையே தமது முக்கிய கொள்கையாகக்கொண்ட ராகுலைப்பிடிக்கும் என்றால் அதன் அர்த்தம்தான் என்ன?

தமிழனை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டுவது எனும் கொள்கை இவருக்குப்பிடித்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும்?

இது வேறொன்றுமில்லை...

பெயரிடப்படாத விஜய் படத்துக்காக யாரோ எழுதிய வசனம். அந்த வசனத்தைப்பிரபலமாக்கி- பின்பு அதன்மூலம் படத்தைப்பிரபலமாக்கும் உத்தி இது.

ஈழத்தில் ஒருவன் தும்மினாலும்,அதைஈழத்துத்தும்மல் என்று பெயரிட்டு அதைப்பத்துமடங்கு பூதாகரமாக்கிப் பணம் பண்ணுவதைத்தவிர , உருப்படியாக என்னத்தைக் கிழித்துவிட்டார்கள் இவர்கள்?

கேவலம்,...அசின், அசித் திமிரையே அடக்கமுடியல - ஆ!...தவறு... விரும்பல.

குறைந்தபட்சமாக, திரையுலகிலிருந்து அவ்வப்போது நொதித்துச்சிதறும் நாற்றங்களை மறைக்கக்கூட முடியல.

தமிழைக் காப்பாத்தப்போறாராம் தமிழை.

முதல்ல, திரையுலக நாற்றத்திலிருந்து தமிழைக் காப்பாத்தட்டும்! தமிழ் தானாகவே வாழும்!

தமிழா! நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது!

மீண்டும் மீண்டும் சகதியிலேயே போய் விழுந்துகொண்டிருக்காமல் -

தற்காலிக சுகங்களையே பெரிதென மதிக்காமல் -

நீண்ட தொலைநோக்குப்பார்வையுடன் வாக்களித்து, எமது எதிர்காலச்சந்ததியாவது
சுதந்திரமாக வாழ வழிவகுப்போமாக!
-- சிவம் அமுதசிவம்

Friday, February 11, 2011

சுபவீ / மனநோய்

சுபவீ..... ஒரு மனநோய் வைத்தியநிபுணர்?
சுபவீ என்று அழைக்கப்படும் பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஒரு பகிரங்கமடல்.
ஐயா! அண்மையில் மனநோய் என்பதற்கு நீங்கள் கொடுத்திருந்த வரைவிலக்கணம் மிகவும் அருமையாகவிருந்தது.
அதாவது, ‘மீனவர்கள் சிங்களரால் கொல்லப்படுவதற்கு, திராவிடமே காரணம் ‘ என்று யாராவது சொன்னால், அதுவே ஒருவகை மனநோய்க்கான அறிகுறி என்ற உங்கள் கண்டுபிடிப்பு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியதொன்றுதான்.( நோபல்?| கின்னஸ்?)
எனினும், பேராசிரியர் எனும் நிலையிலிருந்து நீங்கள் , மனநோய்வைத்திய நிபுணர் எனும் அவதாரம் எடுத்தது எப்போது? என்பதுதான் எமக்குப்புரியவில்லை.
நீங்களே உதிர்த்த தத்துவத்தின் அடிப்படையில் , உங்கள் முதுகையே ஒருமுறை திரும்பிப்பாருங்கள் ஐயா!
மனநோயாளி யார் என்பது தானாகவே புரியும்.
நினைவிருக்கிறதா சுபவீ அவர்களே?
பார்வதியம்மாள் திருப்பியனுப்பப்பட்ட விவகாரத்தில்,
தோழர் தியாகுவுக்கு நீங்கள் என்ன பதில் கொடுத்திருந்தீர்கள்?
இந்த நேரத்தில் முதல்வரை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும்?
இது நீங்களே வெளியிட்ட தகவல்தான்.
இந்தப்பதில் சரியானதுதானா?
முதல்வர் என்றாலே, மக்களுக்காகத் தனது உடல், பொருள், ஆவி என்று அத்தனையையும் அர்ப்பணித்துக்கொண்டவர் என்பதுதான் பொருள்.
அதிலும் உங்கள் முதல்வரோ அனைத்துக்கும் ஒருபடிமேலே உள்ளவர் _ (உங்கள் கருத்துப்படி).
அதாவது, தமிழ்மொழி இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறதென்றால், அஃது அவராற்றான். உலகத்தமிழினத்துக்கே
ஒப்பற்ற ஒரு தலைவர் அவர் _ (உங்கள் கருத்துப்படி)
பார்வதியம்மாள் உலகத்தமிழினத்தின் ஓரங்கமில்லையா?
ஒரு நோயாளியாக வாசல்வரை வந்த தமிழ்த்தாயை, வரவேற்க ஓடோடிச்செல்லவேண்டியவரல்லவா அவர்?
பார்வதியம்மாளோ, வயதான ஒரு நோயாளி ; உங்கள் முதல்வரும் அப்படியா?
நாலாவது வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கத்துடிக்கும் ஒரு இளைஞனல்லவா உங்கள் முத்தானமுதல்வர்?
தமிழுக்காகவே உயிரைத்தக்கவைத்துக்கொண்டிருக்கும் அவரெல்லாம்,நேரம் காலம் பார்க்கலாமா?
இதை அவரே மறந்தாலும் , அவருக்கு மந்தி(ரி) போலியங்கும் உங்களைப்போன்றவர்கள் நினைவூட்டவேண்டாமா?
அடுத்து, நீங்கள் அதில் குறிப்பிட்டிருப்பது : இலண்டனிலிருந்து ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதில் உதவி செய்யுமாறு கேட்டதற்கு, நீங்கள் ஏதோ ‘கிடுக்குப்பிடி‘ கேள்வி கேட்டு மடக்கிவிட்டதுபோன்ற எக்காளத்தொனியுடன் கூடியது.
அவர் கேட்டது ஒரேயொரு கேள்வி ; அதற்கு நீங்கள் கொடுத்ததோ மூன்று வெவ்வேறான பதில்கள் _ அதிலும் ஒருசில கேள்வி வடிவிலேயே.
அதில் முக்கியமானதொன்று : இப்போதுதான் கருணாநிதியையும் என்போன்றவர்களையும் உங்களுக்கு ஞாபகம்வந்ததா? என்பதுதான்.
இதில், அந்த ‘ என்போன்றவர்கள் ‘ என்ற சொற்றொடரின்மூலம் எதைக்கருதினீர்கள் வீரபாண்டியரே?
நிச்சயமாக, ‘ துரோகிகள் ‘ என்பதைத்தானே இதிற் சொல்லாமற் சொல்லியிருக்கிறீர்கள்?
சாதாரணர்களான எமக்கே புரிவது, பேராசிரியரான உங்களுக்குப் புரியாமற்போகுமா?
இது எப்படி இருக்கிறது தெரியுமா?
வீடு பற்றி எரிகிறது ; தீயை அணைக்க உதவிசெய் “ என்று கேட்டால், “ நீ நேற்றே சொல்லியிருந்தால் அணைத்திருப்பேன் ‘ இன்று நேரமில்லை “ என்பது போலல்லவா இருக்கிறது?
இதையெல்லாம் பார்த்தால், மனநோய் உள்ளவன் சொல்வது போல் தெரியவில்லையா உங்களுக்கு?
இனி, பிரபாகரனின் பெற்றோரை, இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாதுஎன்று ஜெயலலிதா கடிதம் எழுதியதைக்கண்டிக்காதவர்கள்... என்று பழையபுராணம் பாடுகிறீர்களே!
அந்தநேரம் நீங்கள் எங்கு போயிருந்தீர்கள்?
புலிகளின் பணத்தில் உல்லாசப்பயணம் மேற்கொள்பவர் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அளவுக்கு, தீவிர(?)_ புலி ஆதரவாளராக அறியப்பட்டவர்தானே நீங்கள்?
ஒருவார்த்தை கண்டித்துப்பேசியதுண்டா?
ஏன்? அதிகம் வேண்டாம் ; நீங்கள் இன்று தூக்கிப்பிடிக்கும் திமுக கூட எவ்விதமான எதிர்ப்பும் காட்டவில்லை என்பதுதான் உண்மை.
ஏற்கெனவே ‘ இம் என்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம் என்றிருக்கும் இந்தியாவில், அன்று தடாபோடா என்று என்னென்னமோ கொடுஞ்சட்டங்களெல்லாம் இருந்தது நீங்கள் அறியாததா?
நீங்கள்கூட அதில் நேரடியாகப்பாதிக்கப்பட்டவர்தானே?
இதில் யாரால் வாய்திறக்கமுடியும்?
‘ ஜெயலலிதா நெஞ்சில் குத்தினார் ;கருணாநிதி முதுகில்அல்லவா குத்திவிட்டார் ‘
இந்தப்பொன்மொழி ஞாபகத்தில் இருக்கிறதா? இதை உதிர்த்தவர் வேறு யாருமில்லை ;சாட்சாத் சு.ப.வீரபாண்டியன் என்கிற நீங்கள்தான் ஐயா! நினைவாற்றல் மிகுந்தவரல்லவா நீங்கள்? எனவே, புலம்பெயெர் தொலைக்காட்சியொன்றில், அன்று திருவாய் மலர்ந்தருளியதை நிச்சயமாக மறந்திருக்கமாட்டீர்கள்.
அவ்வப்போது மனதிற்தோன்றுவதையெல்லாம் பேசுகிறீர்கள்....
உங்களைத்தவிர மற்றவர்களெல்லாம் , நினைவாற்றலே அற்றவர்கள் என்று நீங்களே முடிவெடுத்துவிடுகிறீர்கள்............
இதுமட்டும் மனநோயாகத்தெரியவில்லையா உங்களுக்கு ?
இனி, விடயத்துக்கு வருவோம்.
அன்றாட வயிற்றுப்பிழைப்புக்காக, காற்று, மழை, வெயில் என்றெல்லாம்பாராது, கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை , ஏதோ தெருநாய்களைச்சுட்டுத்தள்ளுவதுபோல, சிங்களக்கடற்படை சுடுவதும், அதற்கு உங்கள் முதல்வர் அழகுதமிழ்தேடி, அவரது சொக்கத்தங்கம் சோனியாவுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதுவும்கூட உங்களுக்குப் பெரிதாகப்படவில்லை.
உயிருக்காகப்போராடும் ஒருவனைக்காப்பாற்ற, அம்புலன்ஸ் எனப்படும் அவசரஉதவி வண்டிக்கு யாராவது கடிதம் எழுதி அனுப்பினால், அந்த நபரை என்னென்பது?
அதைத்தானே உங்கள் முதல்வர் செய்துகொண்டிருக்கிறார்?
இந்த மனநோயைக் கண்டுகொள்ளாமல்விடுவதற்காக, அங்கிருந்து எவ்வளவு கிடைத்தது உங்களுக்கு?
யாரோ சென்னையில் ஒரு பதாதை வைத்துவிட்டார்கள் என்று , அதற்கு மனநோய்ப்பட்டம் சூட்டுகிறீர்கள்.
திராவிடத்தின் பெயரால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால், இப்படிப் படுகொலைகள் தொடர்கின்றன
இந்தக்கூற்றில் என்ன தவறு உள்ளது என்று இப்படிப்புலம்புகிறீர்கள்?
ஒருவேளை இதையே,
திராவிடத்தின் பெயரால் சென்னையில் மழைபெய்யவில்லை
என்று பதாதை வைத்திருந்தால், நீங்கள் சொன்னதில் நியாயம் இருந்திருக்கும்.
ஆனால், திராவிடத்தின்பெயரால் தமிழன் ஏமாற்றப்படுகிறான் என்பது தமிழகஅரசியலை அறிந்தஅனைவரும் அறிந்ததொன்றுதானே!
மாறிமாறி ஆட்சிக்குவரும் திராவிடக்கட்சிகள், தமிழர்நலன்களைப் புறக்கணிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள, பூதக்கண்ணாடியாவேண்டும்?
மாறாக, மலேசியாவின் பினாங்குமாநில துணைமுதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி போன்ற, தமிழுணர்வாளர் ஒருவர் தமிழகத்தின் முதல்வரானால், காவிரிப்பிரச்சினை தொடங்கி , மீனவர் பிரச்சினைவரை எப்போதோ முடிவு கிடைத்திருக்கும்.
இப்போது சொல்லுங்கள் _ யார் மனநோயாளி?
தயவுசெய்து உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் _ ஒரு மனநோய்வைத்திய நிபுணராக.
இஃதே உங்களுக்கும் நல்லது ; தமிழினத்துக்கும் நல்லது.
இப்படிக்கு
சிவம் அமுதசிவம்

Sunday, December 26, 2010


பொள்ளாச்சி நசன் ஐயாவின் இடைவிடாத தமிழ்ப்பணி



அன்புடையீர் வணக்கம்

thamizham - கல்விக்கான நேரடிப் பகிர்வு

http://www.livestream.com/thamizham

மேற்காணும் இணைப்பின் வழியாக நேரடியாக தமிழ்க் கல்வி பற்றிய
செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒவ்வொரு காரிக் கிழமையும் இந்தப் பகிர்வை நிகழ்த்த விரும்புகிறேன்.

தமிழ்க் கல்வி தொடர்பாக உங்களின் வினாக்கள்
உங்கள் தமிழ்ப் பள்ளிக்குத் தேவையான கருவிகள், பாடத்திட்டங்கள்
மாணவர்களுக்கான பிரச்சனைகள் அதைச் சரி செய்ய கருததுருக்கள்
மாணவர்கள் ஆற்றலோடு எழுவதற்கான படிநிலைகள்

இன்றைய பாடத்திட்டம் - அதன் குறைகள் எப்படி சரிசெய்து
நிறைவாக்கி எதிர்கால நாற்றுகளான மாணவர்களை எப்படி
வளர்த்தெடுப்பது என்பதற்கான வழி முறைகள்

இதுபோன்ற கல்வி தொடர்பான செய்திகளை வரிசைப் படுத்தி
உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நேரம் தமிழக நேரப்படி இரவு 7.30 முதல் 8.00 வரை
ஒவ்வொரு காரிக் கிழமைகளிலும் (சனிக்கிழமைகளிலும்)
நிகழ்த்த விரும்புகிறேன். முதல் பகிர்வினை
04- 01 - 2011 அன்று தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்

உலகம் முழுவதும் உள்ள தமிழ் கற்பிக்கும் பள்ளிகள்
இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்

உங்களுக்கான பிரச்சனைகளை மின் அஞ்சல் வழி அனுப்பி
வைத்தால் அதற்கான தீர்வும், அணுகுமுறையும் இந்த நேரத்தில்
பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

இந்த நிகழ்வு பற்றிய உங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும்
மின் அஞ்சல் செய்யுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்
பொள்ளாச்சி நசன்
ம.நடேசன்,., க.மு., அறி.மு., கல்வி.மு., தொ.தூ,க.,
மின் அஞ்சல் - pollachinasan@gmail.com - pollachinasan@yahoo.com