எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Tuesday, June 8, 2010

’ காதுல பூ ‘ - கா.சிவத்தம்பி


யார் வேண்டுமானாலும் - எது வேண்டுமானாலும் சொல்லலாம் ; இப்படி ஒரு நிலை இன்று தமிழுக்கு.......
தமிழன் என்றதுமே, கடைநிலைச்சிங்களவன்கூட காறித்துப்புகிறான்.
அவன் காறித்துப்புவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது?
சொந்த இனத்தையே கருவறுப்பதில், எதிரிக்குத் துணை நிற்கும் எட்டப்பர்கள் பெருகிவிட்ட இனமாகிவிட்டது இன்று தமிழினம்!
அடடா! காட்டிக்கொடுப்பில்தான் எத்தனை ரகம்?
விட்டால், ‘ காட்டிக்கொடுப்பது எப்படி?’ என்று ஒரு புத்தகமே போட்டு விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது.
அறப்படித்த பேராசிரியர்கள் தொடங்கி, அறவே படியாத தற்குறிகள்வரை, தினிசுதினிசாகக் காட்டிக்கொடுக்கிறார்கள்.
என்ன.... இவர்களுக்கிடையில் ஒரேயொருவித்தியாசம்.....!
பாமரன் வெளிப்படையாகவே ,எதிரிபோடும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டதைக்காட்டிக்கொள்கிறான் ;
ஆனால், இந்தப் பெரீ...ய பேராசியர்களோ, தாம் ஏதோ தமிழினத்தையும் தமிழ்மொழியையும் தாங்குவதற்காகத்தான் இதெல்லாம் செய்கிறோம் என்பதுபோலப் பாவனை காட்டிக்கொண்டே, எதிரியின் கால்களைக் கழுவியேகுடித்துவிடுகிறார்கள்.
தாம் கற்றதமிழை, நூல்களாகவும்,ஒலிநாடாக்களாகவும் தமிழர்களிடமே விற்றுப்பணமாக்கியது போதாதென்று தமிழ்மக்கள் தம்மில் வைத்திருக்கும் மதிப்பையும் விற்றுப் பணமாக்கமுனைகிறார்கள்.
தாம் சொன்னால், அத்துணைத்தமிழர்களுமே, வாய்பொத்தி மௌனிகளாகத் தலையாட்டிக்கொண்டேயிருப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
அப்படி ஒருநிலைமை இருந்தது ஒருகாலம்.... உண்மைதான்!
ஆனால், அது மலையேறியே விட்டது எமது தேசியத்தலைவரின் வருகையின்பின்...
இதை நம்பமறுக்கிறது இவர்களின் நப்பாசை!
நமது ஆயுதங்கள், மௌனிக்கப்பட்டனவேயொழிய மரணிக்கவில்லை.
இதேபோலத்தான், நம்தலைவரும்.
மௌனித்திருக்கிறார் ; உரியநேரம்வரும்போது வெளிப்பட்டேதீருவார்.
இன்று பலர், மௌனத்துக்கும் மரணத்துக்கும்டையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளமுடியாதமையினாலேயே இந்த ஆட்டம்போடுகின்றனர்.
ஏன்? சிங்களத்துக்கெதிராக இயங்கும் சிங்களவர்இல்லையா என்று இதில் ஒரு கேள்வி எழலாம்...
இருக்கிறார்கள்..... அங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்!
ஆனால், அவர்கள் பெரும்பாலும், தமிழர்தரப்பு நியாயத்தைப் புரிந்துகொண்டமையினாலேயே சிங்களத்தை எதிர்க்கிறார்கள். உதாரணத்துக்கு, Dr. பிரையன் செனிவிரத்னா,Dr. விக்கிரமபாகு கருணரத்னா ஆகியோரைக்கூறலாம்.
இனி நேரடியாக விடயத்துக்குவருவோம்.
கவிதாயினி தாமரை அவர்கள் கூறியதுபோல ‘ குருதிபிசுபிசுக்கும் ‘
ஈழமண்ணில் நின்று கூத்தடித்தது அந்தக்கொலைகாரக்கூட்டணியான இந்தியாவும்,ஸ்ரீலங்காவும்.
இந்தக்கூட்டணியின் மற்றொருபங்குதாரரான கருணாநிதியும், தமது பங்கிற்கு, தமிழகமண்ணிலேயே ஒருகூத்தை நிகழ்த்திமுடிக்கவிருக்கிறார் என்றவிடயம் அனைவரும் அறிந்ததே!
அந்தக்கூத்துக்கு, தமிழ்ச்சாயம் பூசப்பட்டிருப்பதால், அதற்கு, தமிழறிஞர்கள் என்று அறியப்பட்டவர்கள் தேவைப்படுகிறார்கள் அவருக்கு.
முக்கியமாக, ஈழமக்களிடையே இன்னமுமே தமக்குச் செல்வாக்கு உண்டென்று காண்பித்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.
இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்பவர்.
ஆரம்பத்தில், இவரும் இந்தச்செம்மொழிமாநாடு இப்போது தேவைதானா?என்று கடுமையான எதிர்ப்பைத்தான் வெளியிட்டிருந்தார்.
ஆனால், ஒருசில நாட்களிலேயே, தேவைதான் என்று குத்துக்கரணமடித்து வெளியானது மறுஅறிக்கை.
காரணம் புரியாமல், அதிர்ந்துபோயினர் தமிழுணர்வாளர்கள்.
(ஒருவேளை, இவருக்கானது காலந்தாழ்த்தித்தான் பட்டுவாடா செய்யப்பட்டதோ யார்கண்டார்.)
அதன் தொடர்ச்சியாக, இப்போது புதிய புஷ்வாணம் ஒன்றைவிட்டிருக்கிறது இந்த ஈழத்துப்புல்லுருவி.
‘தமிழீழம் என்பது கருணாநிதியை நம்பித்தொடங்கவில்லையாம் ‘
எப்படி இருக்கிறது ‘ காதுல பூ’ ?
அப்படியானால், யாரைநம்பித் தொடங்கினாராம்?
அதையாவது வெளிப்படையாகச்சொல்லட்டுமே!
இதை நான் கேட்கவில்லை ; தமிழ்மக்கள் கேட்கிறார்கள்..!
ஏனெனில், தொடங்கியவனுக்கு மட்டும்தானே அது தெரிந்திருக்கும்?
ஏதோ, தாம்தான் ஈழப்போரைத் தலைமையேற்று இதுவரை நடத்தியவர் போலல்லவா பிதற்றியிருக்கிறார்?
அதுமட்டுமா? “அங்கும் போய் இதைச்சொல்வேன்” என்ற முழக்கம்வேறு!
அதாவது, முழங்கையில் பிடித்து வரவேற்பதுபோல....
தாமும், எம்மைப்போலவே கருணாநிதியின்மீது கோபத்தில் இருக்கிறாராம்.
தாமும் ‘தமிழின உணர்வாளர்’தானாம். இதை நாம் நம்பவேண்டுமாம்.
இவரது இந்தப்பெருங்கோபம், கருணாநிதியை எள்ளளவும் பாதித்ததாகத் தெரியவில்லையே!
‘கோழிமிதித்துக் குஞ்சு சாகாது ‘ என்பார்களே! அது, இதுதானோ?
ஆனால், மற்றொரு பேராசிரியர் - மலேசியநாட்டின் பினாங்கு எனும் மாநிலத்தின் துணைமுதல்வர் டாக்டர்.பி.இராமசாமி அவர்களுக்கு மட்டும் இந்தியாவுக்கான நுழைவு அனுமதியே மறுக்கப்பட்டிருக்கிறது.
இதிலிருந்தே, இவ்விரண்டுக்குமிடையிலுள்ள வித்தியாசத்தை இலகுவில் அடையாளங்கண்டுகொள்ளலாமே.
ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள் பே...ராசிரியர் அவர்களே!
மக்களை நம்பித்தான் இப்போராட்டம் தொடங்கியது.
அதுவும் , இந்தியாவையோ எந்தவொருவல்லரசையோ நம்பாமல் உலகத்தமிழ்மக்களைமட்டுமே நம்பி, களத்தில் நின்று வீரச்சாவடைந்தனர் நமது வீரத்தமிழ்மறவர்கள்!
உங்களுக்குச்சோறுபோட்ட தமிழுக்காய் உயிர்நீத்த இவர்களுக்கெல்லாம் நீங்கள் காட்டும் நன்றியறிதல்இதுதானா?
இந்த ‘ உலகத்தமிழர் ‘ என்ற பதத்தில் நீங்களும் உள்ளடக்கம்தானே? நீங்களே இப்படிப்பேசலாமா?
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
தயவுசெய்து, இந்தத் தமிழ்த்துரோகியின் மாநாட்டுக்குப் போவதைத்தவிர்த்துவிடுங்கள்.
இதன்மூலம், தமிழுலகின் நிரந்தரத்துரோகிகள் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுவதிலிருந்து தப்பிக்கொள்வதற்கானவாய்ப்பு இன்னமும் உண்டு.
அன்புடன்
சிவம் அமுதசிவம்.

Wednesday, June 2, 2010

’ இர்ர் ‘ ஐ விட்டார் ஏ.ஆர்.ரஹ்மான் !!!!




கடந்த ஆண்டு சிங்கள / இந்திய அரசுகளால், திட்டமிட்டவகையில் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் குருதிநெடி இன்னமும் ஆங்காங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறது.
முள்வேலிக்குள் அடைபட்ட அப்பாவித்தமிழரின் நிலைமையில், பெரிதாக மாற்றமேதும் இல்லை.
உலகநாடுகளை ஏமாற்றும்வகையில், மீள்குடியேற்றம் என்றும் கண்ணிவெடி அகற்றல் என்றும் போக்குக்காட்டிக்கொண்டே, சிங்களமானது தனது நில ஆக்கிரமிப்பைத் தீவிரமாகமுன்னெடுக்கிறது.
ஆங்காங்கே தமிழ்ப்பகுதிகளை உயர்பாதுகாப்புவலயம் என பிரகடனப்படுத்திவிட்டு, சிங்களக்குடியேற்றங்களை அமைத்துவருகிறது.
இளம்போராளிகளைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதாக, ஊடகங்களின் ஒளிப்படக்கருவிகளின்முன் நாடகம் நடத்திவிட்டு, மீண்டும் இரகசியமாக அவர்களைக்கைதுசெய்து சிறையிலடைக்கிறது சிங்களம்.
ஏனைய போராளிகளை, புனர்வாழ்வு எனும்போர்வையில், திறந்தவெளிச்சிறைகளில் அடைத்து , அடிமைகளாகவைத்து வேலைவாங்குகிறது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னமும் கொலை,கற்பழிப்புகள் நிகழ்ந்தவண்ணமேயுள்ளது.
இவையெல்லாம் ஏதோ, மனிதரின் அன்றாட அத்தியாவசிய நிகழ்வுகள் எனும் தோரணையில் , உலகமே ,களியாட்டங்களிலும் விளையாட்டுக்களிலும் மூழ்கிப்போயிருக்கிறது.
அன்றாடம் துன்பத்தில் உழலும் மக்களின் உண்மைநிலையை, உலகத்துக்குப் புரியவைக்கவேண்டிய ஊடகங்கள், தமது கடமையை மறந்து, ‘ காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் ‘ எனும் பழமொழிக்கமைய , பணம் சம்பாதிப்பதில் போட்டிபோடுகின்றன.
உலக ஊடகங்கள்தான் இப்படியென்றால், தாய்த்தமிழகத்திலும் இதேநிலைதான்.
பெரும்பாலான தமிழக ஊடகங்கள்,தமிழ்மக்களைக்குழப்பும்விதமான செய்திகளுக்கு முன்னிரிமை தந்து, அதன்மூலம் , ஈழ ஆதரவு / எதிர்ப்பு ஆகிய இருமுனைகளிருந்தும் பணம்பண்ணும்வழியையே பின்பற்றுகின்றன.
கொலைகாரக்கூட்டணியான இந்தியாவும் ஸ்ரீலங்காவும், தாம்செய்தபடுகொலைகளை மறக்கடிக்கச்செய்யும்விதமாக, பெரும் எடுப்பில் ஐஃபா களியாட்டங்களை நடாத்துகிறது.

இருந்தும், தமிழின உணர்வாளர்கள், நிம்மதிப்பெருமூச்சு விடக்கூடிய ஒரு விடயமும் வெற்றிகரமாகத் தமிழகத்தில் நடந்தேறியேவிட்டது.

கொழும்புசெல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பங்குபற்றும் திரைப்படங்களுக்கு தமிழகம் மட்டுமல்லாது, தென்னிந்தியாவிலேயே தடைவிதிக்கப்படும் என்ற , ’தென்னிந்தியத்திரைப்படச்சம்மேளனத்தின்’ அறிவிப்பு , ஐஃபா விழா எதிர்ப்பாளர்களுக்குப் பெரும் பக்கபலமாக அமைந்துவிட்டது.
இதற்கு அடிப்படையாக அமைந்தது, ரஜனிகாந்த் அவர்களின் அதிரடி முடிவுதான் என்றால் மிகையாகாது.
எவருமே முடிவை அறிவித்திராதநிலையிலும், முதன்முதலாக துணிச்சலுடன் உறுதியாகத்தமது முடிவை அறிவித்திருந்தார் சூப்பர்ஸ்ரார் ரஜனிகாந்த்.
அவர் அதற்கான காரணத்தையும் மிகத்தெளிவாகவே வெளியிட்டிருந்தார்
அத்துடன்நில்லாது , கமலஹாசன் போன்றவர்களுக்கும் உண்மைநிலையைப் புரியவைத்து, அதிலிருந்து விலகச்செய்தார்.
தமிழகத்தின் பெரும்புள்ளிகளான இவ்விருவருடன், முன்னணி இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் முடிவுமே , பலருக்கு , தமது நிலைப்பாட்டை உறுதியாக்கிக்கொள்ள உதவியது என்பதுதான் உண்மை.
தொடர்ந்து , ’ செந்தமிழன்’ சீமானின் நாம்தமிழர் இயக்கம் நடாத்திய அதிரடிப்போராட்டத்தில் மிரண்டுபோய் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன். ஐஸ்வர்யாராய் போன்ற இந்திப்படவுலகத்தின் முக்கியபுள்ளிகளும் பின்வாங்கிவிட , மலையாலப்படவுலகமும் தன் முடிவை அறிவித்தேவிட்டது.
கமலஹாசனின் உற்றநண்பரான ஷாருக்கான், காலந்தாழ்த்தினாலும் , தமது முடிவை உறுதியாக அறிவித்தமை பாராட்டுக்குரியதே!
இதில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியது யாதெனில், தமிழ்த்திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற அயல்மாநில நடிகையான நமீதாவும், இவ்விழாவைப் புறக்கணித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், காரணத்தையும் சரியாகக்குறிப்பிட்டமையே!
இந்தியத்திரைப்படத்துறையின் ஜாம்பவான்கள் அத்துணைபேரும் பின்வாங்கியநிலையிற்றான், களையிழந்துபோன இவ்விழாவைத்தூக்கிநிறுத்த , ‘ மான்வேட்டையில் சிக்கிச்சிறையிருந்த இந்திநடிகரான சல்மான்கான் முன்வந்தார்.

இந்நிலையில் , தமிழகத்திலிருந்தே, ஈழத்துக்கு மட்டுமல்லாது _
தமிழுக்கே _ தமிழ்மொழிக்கே ஒரு துரோகம் நடந்துகொண்டிருக்கிறது.

எதுவென்கிறீர்களா?

சிங்களத்தின் எதிர்க்கட்சிகளே , தமிழ்மக்கள் இன்னமும் , தகரக்கொட்டகைகளில் ஆடுமாடுகளைப்போல் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என ஒப்புக்கொண்டு , ஒப்புக்காவது நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்தநேரத்தில் _
மிக ஆடம்பரமாக பெரும் எடுப்பில் நடைபெற ஏற்பாடாகிக்கொண்டிருக்கிறது செம்மொழிமாநாடு என்ற பெயரில் ஒரு களியாட்டநிகழ்வு.
இது, தமிழ் செம்மொழியானதை முன்னிறுத்தியதல்ல - வெறும் களியாட்டத்தையும், அரசியல் இலாபங்களையும் நோக்கமாகக்கொண்டது என்பதற்குச்சரியான சான்று -
தமிழக அரசின்சார்பில் இதற்காகத்தயாரான பாடலை இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் , வழக்கம்போலவே இதிலும்கூடத் தமது மொழியைச்சிதைக்கும் நடவடிக்கையில் இறங்கியமையே!

அதாவது, ‘ யாதும்  ஊரே ! யாவரும் கேளிர்’ என்ற கணியன்பூங்குன்றனின் வரிகளையே கொச்சைப்படுத்தி -
‘யாதும் ஊரே ! யாவரும் கேளீ.... ‘ என்று முடித்திருக்கிறார்.

இதில் அந்த ‘ ர்’ என்பது சேர்ந்தாலும், அவ்வரி தவறானது என்பது தமிழுணர்ந்த அனைவர்க்கும் புரியும்.
ஆனால், இவரோ அந்த ‘ர்’ கூட இல்லாமல் அதை முடித்திருக்கிறார்.

இவரைப்பொறுத்தவரை, ஏற்கெனவே , அரபிக்கடலோரம் நின்று ‘ ஹம்மா ஹம்மா ‘ என்று தமிழ்மொழியின் முதல்வார்த்தையையே கொலைசெய்து , அதன்மூலம் கவிஞர் வைரமுத்துவின் அதிருப்திக்குள்ளானவர் என்பது அனைவரும் அறிந்தவிடயம்.
இஃதிவ்வாறிருக்க, ’தமிழுக்குப்பெருந்தொண்டாற்றிய பெருமகன்’ என்று தமக்குத்தாமே புகழ்மாலை சூட்டிக்கொள்ளும் கருணாநிதி -
இந்த முக்கியமான வரிகளைக்கவனிக்காமல்விட்டதன்மூலம், இதிலும் அப்பட்டமான அரசியல்நகர்வையே மேற்கொள்ளுகிறார் என்பது நிரூபணமாகிறது.
‘ ர் ‘ ஐ விட்டவர் வாழ்க!!
என்று வாழ்த்துவதைத்தவிர, இதில் யாரால் என்னசெய்யமுடியும்?
அவர்கள் பக்கம் காற்று பலமாகவே வீசுகிறது.
காற்றுமட்டுமா_? மழையும்கூட அவர்கள் பக்கம்தான்!!!

இதில் எமது தேசியத்தலைவரின் படம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு வெளியிட்டதில் , கருணாநிதியின் படம்தான் உள்ளது. இங்குள்ள இணையதளமொன்றின் ஆர்வக்கோளாறுதான் இதற்குக்காரணம்.

ஊடகம் என்றுபார்த்தால், இஃதொரு மிகப்பாரதூரமான தவறு!!

Monday, May 31, 2010

மகி சிவம் ஆனார் சுகிசிவம்


இந்தநாள் இனியநாள் எனும் நிகழ்ச்சியின்மூலம் தமிழர்களிடையே மிகப்பிரபலமானவர்தான் இந்த சுகிசிவம் என்ற சு.கி.சிவஞானகிராமணியார்.
கடந்தசிலமாதங்களுக்குமுன் இவர், கொழும்பு சென்று திரும்பியபின் வெளியான ‘ இந்தநாள் இனியநாள்’ இல், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை மிகவும் கேவலமாகக்க் குறிப்பிட்டமையானது ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற , ஈழத்தமிழர் செறிந்துவாழும் நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது .

அடிப்படையில் இவர், ஒரு தமிழராக இருந்தும், இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டமையையொட்டி, ஈழத்தமிழர் இவரில் அதிருப்தி கொண்டிருந்தனர்.
ஸ்ரீலங்காவின் ஊதுகுழலாகச்செயற்படுகிறாரோ எனும் சந்தேகக்கண்ணுடன் நோக்கினர்.
ஏனெனில், இராசபச்சே குடும்பம், தனது அராஜக ஆட்சியைத்தொடர்வதற்கு, புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும், அவர்களைக்குறிவைத்தே தமது புலனாய்வுப்பிரிவு செயற்படுவதாகவும் வெளிப்படையாகவே பலதடவைகள் அறிக்கைகள் வெளியிட்டமையை நேயர்கள் மறந்திருக்கமுடியாது.
இதனால், ஆங்காங்கே பலரும் தத்தமது வலைத்தளங்களில் எதிர்ப்புகளை வெளியிட்டுமிருந்தனர்.

இது பழையசெய்தி!

புதிய செய்தி என்ன தெரியுமா?

கடந்தவாரம் , அல்ஜசீராதொலைக்காட்சிக்கு , மகிந்தா (எளிமையான) ஆங்கிலத்தில் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்த, புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய விடயமானது, அன்றே சுகிசிவம் அவர்களின்வாயிலிருந்து,‘இந்தநாள் இனியநாள்’ இல் வந்திருக்கிறது .

நிகழ்ச்சியின் தலைப்புக்கு எள்ளளவும் பொருத்தமில்லாத ஒருவிடயத்தை வைத்து அப்படித் தாழி தாழியென்று தாழித்திருந்தார் சுகிசிவம்.
அதிலே, எதைத்தான் இவர் சொல்லவந்தார்?
சிங்களத்தால் சிதைக்கப்பட்ட உடைந்தவீடுகளில், அங்குவாழும் மக்கள் குடியேறிவிட்டால், அன்றையநாள் இனியநாளாகிவிடும் என்பதையா?
மாறாக :
எதிரி எமது வாழ்விடங்களுக்குள்ளேயே உட்புகுந்து, அழிவுகளை மேற்கொள்ளுமளவுக்கு நாம், எமக்குள்ளேயே ஒற்றுமையின்றி இருந்துவிட்டோம் ; இனியாகிலும், மேற்கொண்டு எமது வீடுகள் உடையாதபடி, உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டால் ‘ இந்தநாள் இனியநாள்’
என்றவகையிலல்லவா அஃதமைந்திருக்கவேண்டும்?
இஃதல்லவோ ஒரு அறிவாளிக்கு அழகு?

அதைவிடுத்து, ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடிப்போனவர்கள்.... அங்கு உல்லாசவாழ்க்கை வாழ்கிறார்கள்’ அப்படி இப்படியெல்லாம், மிகவும் மலிவானசொற்பிரயோகங்களுடன் அவர் சொன்னமுறை -
புலம்பெயர்ந்திருப்பவர்கள் என்றாலே, ஏதோ ‘ பயந்தாங்கொள்ளிகள்’ என்பதுபோலவும் -
‘ சொந்தச்சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கண்டும் சிந்தையிரங்காதவர்கள்’ என்பதுபோலவும் -
ஒரு தோற்றத்தை, தமிழகத்திலும் ஈழத்திலும் வாழும் தமிழர் மனங்களில், ஆழமாகப்பதியவைக்கும் முயற்சியல்லவா?

இதைத்தானே மகிந்தாவும் வெகுசிரமப்பட்டுச் சொல்லிமுடித்தார்?
மகிந்தாவுக்குத்தான் புலம்பெயர்தமிழர்கள் நேரடியான எதிரிகள் ;

இவரைப்பொறுத்தளவில் , இதற்கான தேவைதான் என்ன?
இவருக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் அப்படி என்னதான் பிணக்கு?
எதுவுமில்லையே!
இன்னும் சொல்லப்போனால், இவர் தமது ஆடம்பரவாழ்வுக்கு நம்பியிருப்பது புலம்பெயர்ந்த தமிழர்களைத்தானே!
இந்தியாவில் வருடம் முழுவதும், ஓடி ஓடிப்பிரசங்கம் செய்து கிடைக்கும் வருமானம், இலண்டன் மாநகரில் ஒருநாளில் கிடைத்துவிடுகிறதே!

இருந்தும் இப்படியான ஒருமுடிவை இவர் ஏன் மேற்கொண்டார்?

இங்குதான் நாம் யோசிக்கவேண்டியுள்ளது.

இலண்டன் மாநகரில் பத்துவருடங்களில் கிடைக்கும் வருமானம், ஸ்ரீலங்காவிடமிருந்து ஒரேமுறையில் இவருக்குக்கிடைத்திருக்கிறது.

இதைத்தவிர வேறெதுவாக இருக்கமுடியும்?
இதனாற்றான், ஸ்ரீலங்காவின் புலனாய்வுப்பிரிவு ஆற்றவேண்டியபணியின் ஒருபகுதியை இவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

ஸ்ரீலங்காவுக்குப் பெரும் சவாலாக இருக்கும் புலம்பெயர் சமூகத்தை, ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களின் உறவுகளிடமிருந்து அன்னியப்படுத்துவதில், மகிந்தாவுடன் கைகோர்க்கமுனைந்திருக்கிறார் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறதல்லவா?

மகிந்தாவுடன் கைகோர்த்தமையால், இவரை இனிமேல் ‘ சுகிசிவம்’ என்பதைவிட ‘ மகிசிவம்’ என்பதே சாலவும் பொருத்தமானது.

இவ்வகையான, அடுத்துக்கெடுக்கும் தமிழ்ப்பகைவர்களை இனங்கண்டு - புறந்தள்ளி விடுதலைப்பாதையில் முன்னேறுவோம்.

ஏனெனில், நாம் தமிழர்!!!

Thursday, May 27, 2010

ஏக்க தமாய் கோகணா!

அடடா! என்ன அருமையான கண்டுபிடிப்பு!

ஸ்ரீலங்காவினால், ஐ.நா.வுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் பாலித்தா கோகணா என்பவர், அண்மையில் தாம் வெறும் தூதுவர்தான் என்பதை மறந்து, ஏதோஉலகம் முழுவதுமே தன்சட்டைப்பையில் என்பதுபோலப் பேசியிருக்கிறார்.
ஏற்கெனவே , மலையாளி என்ற காரணத்தால் இவர்களிடம் விலைபோன விஜய் நம்பியார் என்பவரைவைத்து, பான்கீமூனையும் விலைக்குவாங்கியிருந்தார்கள் என்பது உண்மையே!

ஆனாலும், இவர்களனைவரையும் மீறி, பீறிட்டுக்கசிந்த உண்மைகளால், அதிலும் குறிப்பாக பிரித்தானியாவின் , ‘சனல் 4’ தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக்காணொலிகளால், இக்கட்டுக்குள்ளாகியிருக்கும் , ஐ.நா.செயலர் பான்கி மூன் , அப்படுகொலைகளையும் ஸ்ரீலங்காவின் போர்க்குற்றம் தொடர்பாகவும் ஒரு விசாரணைக்கமிசன் அமைப்பதற்காக, தமக்கு ஒரு ஆலோசனைக்குழுவை அமைக்கப்போவதாகக் கூறிவருகிறார்.

இங்கே நாம் கவனிக்கவேண்டியது, பான்கிமூன் அவர்கள் , ‘ இதோ வருகிறது !! இதோ வருகிறது !! ’ என்று விளம்பரம் செய்வது விசாரணைக்கமிசன் அமைப்பதற்காக அல்ல..
மாறாக, அதற்கான ஆலோசனைக்குழுவை அமைக்கப்போவதாகத்தான் அவ்வப்போது முழங்கிக்கொண்டிருக்கிறார்.
இதற்கான உண்மையான காரணம், ‘ நான் அப்படி இப்படி ஏதாவது சொல்லிக்காலத்தை இழுத்தடிக்கிறேன்... அதற்குள் நீ ஏதாவது செய்யமுடிந்தால் செய்! ‘ என்று ஸ்ரீலங்காவுக்கு சமிக்ஞை கொடுக்கிறார்.அதாவது, அவர்களீடம் விலைபோனமையிலிருந்து விடுபடமுடியாமற்தவிக்கிறார்.

ஸ்ரீலங்காவும், இவரது நிகழ்ச்சிநிரலுக்கேற்ப, தனக்குத்தானே ஒரு விசாரணக்கமிசன் ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருந்தது; அதன்படி ஒரு கண்துடைப்புக்கமிசன் ஒன்றையும் அமைத்தது.
இப்போது, இந்த அஸ்திரத்துடன்தான் களமிறங்கியிருக்கிறார் இந்த
பாலிதா கோகணா என்பவர்.
தம்மிடம் ஏற்கெனவே ஒரு கமிசன் உள்ளதாம்; எனவே இனி ஐ.நா.வினது வருவது பொருத்தமற்றதாம்.
அதற்கு அவர் சொல்லும் காரணம், ‘ போரில் தோற்றபுலிகள், மக்கள் சக்தியுடன் வென்றுவிடுவார்களாம்’.
அதாவது, அவர் சொல்லவருவது, ஐ.நா. ஒரு கமிசனை அமைத்தால் , தாம் ஏற்கெனவே அமைத்திருக்கும் ,’கள்ளங்கபடமற்ற - தூய்மையான கமிசனின் புனிதம் கெட்டுவிடும் என்பதுபோல.
அல்லது, விடுதலை உணர்வுடனிருந்தவர்களைத்தான் புதைத்துவிட்டோமே! ; ஏனையோரை முட்கம்பி வேலிக்குள்வைத்து, ஆளைவிட்டால்போதும் என்னுமளவுக்கு வதைத்துவிட்டோம் ; இக்கமிசன் ஒருவேளை வந்துவிட்டால்.......? அஃதும் ஒருவேளை நீதியின்பக்கம்நின்றுவிட்டால்...? இவர்களுக்கெல்லாம் விடுதலையுணர்வு துளிர்விட்டுவிடுமோ என்று அச்சம் ; அவ்வளவுதான்.

ஏற்கெனவே இவ்வுலகில், இனப்படுகொலை செய்தமைக்காக, பலநாடுகள் தண்டிக்கப்பட்டிருக்கின்றன ; ஜேர்மனியின் ஹிட்லர் மற்றும் யூகோஸ்லாவியாவின் சுலொபொடோன் மிலோசொவிச் போன்ற பல உலகத்தலைவர்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஹிட்லரோ இறந்தபின்னர்கூட , இன்றுவரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறான்.

இவர்களுக்கெல்லாம்,பாலிதா கோகணாவின் இந்த மந்திரம் தெரிந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாமே!
ஹிட்லர் ஏனைய நாடுகளுக்கெல்லாம் சொல்லியிருக்கலாம் : “ உங்கள் நாடுகளை ஜேர்மானியப்படைகள் தாக்கியமைக்குத்தண்டனையாக, ஜேர்மனியில் நாமே நமக்கு, குண்டுகளைப்போட்டுக்கொள்கிறோம்” என்று.
இதேபோல, பொஸ்னியாவில் தாம் நிகழ்த்திய அட்டூழியங்களுக்காக, “சேர்பியாவில் ஆங்காங்கே விசாரணைக்கமிசன்களை நாமே நடாத்திக்கொள்கிறோம்” என்று சுலொபொடான் மிலோசொவிச் சொல்லியிருக்கலாம்.
இவர்களுக்கெல்லாம் தெரிந்திராத ஒருவிடயம், கோகணாவுக்குத் தெரிந்திருக்கிறது.
இவர் கிறிஸ்துவுக்கு முன்பே பிறந்திருந்தால், இந்தச் சர்வாதிகாரிகளெல்லாம், ஆபிரகாம் லிங்கன், ஜோண் எஃவ் கென்னடி வரிசையில் வைத்துப்போற்றப்பட்டிருப்பார்களோ என்னமோ...
இன்றையநிலையில், சிங்களமானது - தன் கழுத்துக்குநேரே கத்திதொங்குவதை நன்கு உணர்ந்துகொண்டுள்ளது என்பதுமட்டும் உண்மை.

இதனாற்றான், கிலிபிடித்தநிலையில் ஆங்காங்கே மகிந்தா தொடங்கி , பீரிஸ் , அழகப்பெருமா என்று அனைவரும் ஆளுக்கொருதிக்கில்போய், அழாதகுறையாக வாயில்வந்ததையெல்லாம் பிதற்றுகின்றனர்.
எனினும், இவையெல்லாவற்றையும்விட , ஐ.நா.வுக்கே தூதுவர் என்றவகையில், கோகணாவின் உளறலே இதில் முதலிடம்பெறுகிறது.

ஏக்க தமாய் கோகணா!!!
ஒபகே சிந்தனாவ, சூப்பர் கல்பனாவ!!!!!!

Friday, May 14, 2010

ஓ! மனிதா!..... ( ஒரு தமிழகத்தமிழனின் உணர்வலைகள்!)

ஓ மனிதா....

உண்மைதான் என்ன?

உரிமையிழந்த எங்கள் உயிர்

இருந்துதான் என்ன?

ஓலமிட்டோம் உலகறிய

உறவுகளின் கை ஒடிந்தபோது...

ஒன்றும் அறியாதவனாய்

உன்னில் எத்தனை பேர்...?

ஓலமிட்டோம் உலகறிய

உறவுகளின் உயிர்போகிறதென்று...

ஒன்றும் அறியாதவனாய்

உன்னில் எத்தனை பேர்...?

வல்லரசுகளாய் வாய் பொத்தி..

அகிம்சை தேசத்தானே ஆயுதப்பொதிகளாய்...

ஊடகக் காரனே ஊமைகளாய்....

மெளனித்த மனித உரிமைக்காரனாய்..

இன்னும் இன்னும் எத்தனை எத்தனை...?

முடிவில் மடிந்தே போயினர்

எம் கையில் வீரத்தமிழன்

என்ற முகவரியைத் தந்து....

ஓ மனிதா....

இதுதான் அந்த உண்மையா...?

எஙகள் முகவரி தமிழன்

அதுதானே...

ஆறாயிரம் ஆண்டுகளாய்

சூடிக்கொண்டிருக்கிறோம்....

இழக்கமாட்டோம் இனியும்.....

முள்ளிவாய்க்காலில்

இரத்தத்தாலும் உறுதியாக

எழுதப்பட்டு இருக்கிறது......

உலகமே!

நீங்கள் எங்களை

அழிக்க அழிக்க எழுதுவோம்....

நங்கள் தமிழரென்று...

எழுவோம்....எழுவோம்.....

இன்னும் இன்னும் பன்மடங்காய்....

தோழர் சிவா - துபாயிலிருந்து

Wednesday, May 5, 2010

ஸ்ரீதரன் நா.உ. இன் கன்னிப்பேச்சு!


அண்மையில் நடந்துமுடிந்த ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தெரிவான திரு.சிவஞானம் ஸ்ரீதரன் ஆற்றிய கன்னிப்பேச்சு பலதரப்பினராலும் பலவிதமான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
பெரும்பாலும், ஒருசில இணையதளங்கள் குற்றங்கண்டுபிடிக்கும் மனப்பாங்குடனேயே அவ்வுரையை வெளியிட்டிருக்கின்றன.

தேர்தல்சமயத்தில், அவரது கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கையை முன்னிறுத்தி இவ்வூடகங்கள் எதிர்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன.

அதைத்தான் சனநாயக தர்மம் என்று ஏற்றுக்கொண்டாலும், இப்போது அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதி என்றவகையில்,
தேவையில்லாமல் அவரைத்தூற்றுவது, அத்தனை தமிழ்மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

அவரது கன்னியுரையானது மிகவும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வுரையை விமர்சனம் செய்யும்போது, அதேயளவு ஆழத்துடனும். தொலைநோக்குடனுமே பார்க்கவேண்டுமேயொழிய, வெறுமனே கண்ணைமூடிக்கொண்டு கருத்துவெளியிடக்கூடாது.

அதாவது, ஆட்டத்தைப்பார்க்க வேண்டுமேதவிர, ஆளைப்பார்க்கக்கூடாது.

எடுத்த எடுப்பிலேயே அவ்வுரையானது, ” தங்கள் உரிமைக்காக, காலமெல்லாம்போராடித்தவமிருக்கும் மக்களிடமிருந்து வருகின்றேன்” என்று என்று தொடங்குகிறது.
இதையே அவர்” போராடித்தோற்ற மக்களிடமிருந்து...” என்று சொல்லியிருந்தால் அது கண்டிக்கத்தக்கதுதான். !

மேலும், “ உங்களுடன் கைகோர்க்கத்தயாரக இருக்கிறோம் - நாம் மனிதர்களாக இருக்கும்வரைதான்..” என்பது எவ்வளவு ஆழமான மிரட்டல்!
இதிலேயே ஒன்று பூடகமாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
அதாவது, “ உங்கள் அடக்குமுறை தொடருமானால் நாம் மனிதர்களாக இருக்கமாட்டோம்” என்பதுபோல.
மனிதநாகரீகம் அறவே இல்லாத ஒரு காட்டுமிராண்டிகளின் கோட்டையினுள்ளே நின்றுகொண்டு இதைச்சொல்வதற்கே ஒரு மனோதிடம் வேண்டும்.
அதிகம் வேண்டாம்... இங்கு புலம்பெயர்மண்ணிலேயே எத்தனைபேர் உறுதியுடன் தமது கருத்துக்களை வெளியிடுகிறார்கள்?
அப்படிப் பேசுவதானாலும் ’கொஞ்சம் உரத்துப்பேசினாலே , அலரிமாளிகையிலிருக்கும் மகிந்தாவின் காதுகளில் விழுந்துவிடுமோ...’என்பதுபோல குசுகுசுப்பார்கள்.

அவ்வுரையில் எதுதான் சொல்லப்படவில்லை?
ஒவ்வொரு தமிழனதும் உள்ளக்குமுறல்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் அங்கு கொட்டப்பட்டிருக்கிறது.

அன்னிய நாடுகள், எவை எவை எந்தெந்த மூலவளங்களைச் சுரண்டவருகின்றன என்பது , அக்குவேறு ஆணிவேறாக அலசப்பட்டிருக்கிறது. இதில், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா,யப்பான் என்று எதுவுமே அங்கு விடுபடவில்லை.

முள்ளிவாய்க்கால் படுகொலை... காணாமற்போனோர்...காயப்பட்டவர்கள்... கைகால் இழந்தவர்கள்....முட்கம்பிவேலி... சிறைவைக்கப்பட்டுள்ள போராளிகள்...
சிங்கள இராணுவத்தால் தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டமை ... என்று அத்தனையும் வரிசைப்படுத்திப்பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

முள்ளிவாய்க்கால்படுகொலையை , இராணுவவெற்றிவிழாவாகக் கொண்டாடவிருப்பது கோடிட்டுக்காட்டப்பட்டிருக்கிறது.

அடக்கியவர்களும் அடக்கப்பட்டவர்களும் ஐக்கியமாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை என்ற எச்சரிக்கை வேறு.

இதைவிட, வேறென்ன வேண்டும்?

இவையெல்லாவற்றையும்விட, ஒரு முக்கியமானவிடயமும் அதில் தொட்டுக்காட்டப்பட்டிருக்கிறது.

” எங்களை அழிக்க சிங்களத்துக்கு தோள்கொடுத்தவர்கள் - இன்று சிங்களத்தை அடிமைப்படுத்த எங்களைப்பாவிக்கிறார்கள்.” என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில்தான் இங்குள்ள சில ஊடகங்கள் பிடித்துக்கொண்டு தொங்குகின்றன.

இந்த ஐரோப்பாவோ அமெரிக்காவோ, உண்மையிலேயே எமதுபக்க நியாயத்தை உணர்ந்துகொண்டவர்களானால், எதற்காக ‘சிங்களத்திற்கு உதவிய 20 நாடுகளுள் இடம்பிடித்தார்கள்?

இப்பொழுதுமட்டும் ஏன் சிங்களத்துக்கெதிராகத்திரும்பியிருக்கிறார்கள்?

சரி, திரும்பியதுதான் திரும்பினார்கள்; செய்துமுடிக்கவேண்டியதுதானே!

வைத்து இழுத்துக்கொண்டேயிருக்கிறார்களே! ஏன் தெரியுமா? சிங்களவன் மனம்மாறித் தமது காலில்வந்து விழுவதற்கு அவகாசம் கொடுக்கிறார்கள்.
அவ்வளவுதான்!

நீதி, நியாயம் எதுவுமே இவர்களுக்கு முக்கியமில்லை. தாம் அங்கு காலூன்றவேண்டும். அதன்மூலம் தாமே ‘ அனைத்துலக நாட்டாமை’ என்ற பதவியைத்தக்கவைத்துக்கொள்ளவேண்டும். இதுதான் இவர்களுக்குத்தேவை.
இது சரிவரும் என்பதுபோலத்தெரிந்தாலே, எங்களையெல்லாம் கூண்டோடு பிடித்து அவர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.

இப்பொழுதே ஆங்காங்கே நடந்துகொண்டுதானே இருக்கிறது? ஜேர்மனி,நெதர்லாந்தில் கைதுகள் - அவுஸ்திரேலியா,மலேசியாவில் அகதிகள்மீது மிருகத்தனமான நடவடிக்கைகள் என்று!

இவர்களைமட்டுமே நம்பியிருக்காமல், ‘ சாட்சிக்காரனை நம்புவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ எனும் பழமொழிக்கமைய - அங்கும் ஒரு முன்னெடுப்பை நகர்த்துவதே புத்திசாலித்தனம்.

இல்லையேல், சொல்லொணாத்துன்பங்களில் உழலும் எமதுறவுகள் - சிறையில் சித்திரவதைக்குள்ளாகும் போராளி இளைஞர்களையெல்லாம் மீட்டெடுப்பது என்பது பகற்கனவாகியே போய்விடும்.

எனவே, இங்குள்ள ஊடகங்கள், தமது சொந்த விருப்புவெறுப்புகளைத் தூரவைத்துவிட்டு , சரியானதைச் சரியென்று, சரியான நேரத்தில் வெளிப்படுத்தினால்தான்,

தவறானதொன்றச்சுட்டிக்காட்டும்போது மக்களும் நம்புவார்கள் ; அரசியல்வாதிகளும் நெறிப்படுத்தப்படுவார்கள்.
- சிவம் அமுதசிவம்

Thursday, April 29, 2010

கருணாநிதி கதைவசனத்தில் கோத்தபாயா

இந்தவகையில் கோத்தபாயா கொடுத்துவைத்தவர்தான். கருணாநிதி கதைவசனங்களைப் பேசிநடித்தே புகழ்பெற்ற எம்ஜிஆர், சிவாஜி போன்ற தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் வரிசையில், ஒரு சிங்களனாயிருந்தும் வாய்ப்புக்கிடைத்திருக்கிறதென்றால் அது சாதாரணமான விடயமல்ல!
மெரீனா கடற்கரையில் கருணாநிதி நடாத்திய ‘ ஒரு மணிநேர உண்ணாவிரதம்’ எனும் நாடகத்தில் கருணாநிதிதான் , நடிப்பு உட்பட கதைவசனம் எழுதும் பொறுப்பையும் ஏற்றிருந்தார் ;அதில் உபவேடங்களில் நடித்திருந்த மேனன் , நாராயணன் , பிரணாப் என்று அனைவருக்குமே அவரவர் மொழியில் எழுதியும் கொடுத்திருந்தார்.
ஆனால் இந்தப் பாழாய்ப்போன சிங்களம் கொஞ்சம் கஷ்டமாகிப்போய்விட்டது. அதனாற்றான், கோத்தபாயாவுக்கென்று எழுதியதைக் கொடுக்கமுடியாமலே போனது.
இதனால் கோத்தபாயாவுக்குக்கவலை ;
இவருக்கோ உற்றநண்பனைக்கவலைப்படுத்திவிட்டோமே என்று கவலை.

” கவலைப்படாதே (ராசபச்சே) சகோதரா! உனக்கென்றும் ஒருநேரம் வரும். அப்போது நீ மட்டும்தான் எனது வசனத்தைப்பேசுவாய்” என்று வரம் கொடுத்தார். அந்தநேரம் இப்போதுவந்திருக்கிறது.

இதில் நாடகம்,கதைவசனம் என்பதெல்லாம் கொஞ்சம் கற்பனைதான் ;
ஆனாலும் , அதில் உண்மை இல்லாமலும் இல்லை என்றவிடயம் கருணாநிதியை அறிந்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.

எடுத்த எடுப்பிலேயே, ‘ இந்தியாவைத்தந்திரமாக ஏமாற்றினோம் .... இந்தியாவின் போரைத்தான் நாம்நடத்தினோம்....என்றெல்லாம் இந்திய வல்லரசேகூனிக்குறுகி நாணும்வகையில் வாய்த்துடுக்காக வார்த்தைகளை அள்ளிவீசிய கோத்தபாயா, கருணாநிதியைத் தாம் ஏமாற்றியதைமட்டும் -

இவ்வளவு காலங்கடந்து, முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஓராண்டு நினைவாஞ்சலிகள் நிகழவிருக்கும் இந்தநேரத்தில் ஏன்வெளியிடவேண்டும்?

இங்குதான் நாம் யோசிக்கவேண்டியிருக்கிறது.

கருணாநிதிக்கு இப்போதுள்ள அவசரதேவை: ‘தமிழினத்தின் ஒப்பற்ற ஒரேதலைவர்’ என்ற பெயரை மீட்டெடுப்பதே! அது தொலைந்து வெகுகாலமாகிவிட்டது என்பதையே நம்பமறுக்கிறது அவரது நப்பாசை!

அவனவன், ஒருவாழ்க்கை வாழ்வதற்கிடையிலேயே அல்லாடிப்போகிறான் ; போதும் போதும் என்றாகிவிடுகிறது. -

ஆனால், மனிதர் ஒரேநேரத்தில் மூன்றுவாழ்க்கையை வாழ்ந்தும், ஆசை அறுபடாநிலையில் தவிக்கிறார். ‘ மானாட மயிலாட... ‘ என்று அனைத்தையுமே ஆடவிட்டு இரசிக்கிறார்.

தனது கபடக் காய்நகர்த்தல்களின் வேடங்கலைந்து, தமிழர்கள் அனைவரும் தியாகி முத்துக்குமாரன் வழியில் ஒன்றுதிரண்டபோதே, கருணாநிதி ஒன்றைத் தெளிவாகப்புரிந்துகொண்டார்.

இனியும் தனது வாய்ஜாலங்கள் தமிழர்களிடம் எடுபடாதென்பதே அது.

எனவே, ‘ அன்றாட வாழ்வுக்கே அல்லாடிக்கொண்டிருந்த’ அப்பாவித்தமிழர்களை, அவர்களிடமே தாம் கொள்ளையடித்துச்சேர்த்துவைத்திருக்கும் பணத்தால் அடித்தும்,
பணத்துக்கு மசியாதவர்களை தனது கைத்தடிகளை அனுப்பிமிரட்டியும், உணர்வுள்ள தமிழ்த்தலைவர்களைச் சிறையிலடைத்தும், தமது அடுத்தகட்ட நடவடிக்கையை நகர்த்திப்பார்த்தார் ;

பணம்- பதவிகள்தான் மென்மேலும் சேர்கிறதேதவிர, பெயரை மீட்கமுடியாமலேயுள்ளது.

மனிதருக்கு இப்போது மரணபயம் இலேசாகப் பற்றிக்கொண்டதுபோலும்!
( இப்போதாவது வந்ததே! அந்தவகையில் இது தமிழனுக்கு விடிவுகாலம் என்பதன் அறிகுறி!)
எனவே, அந்தப்பெயரைமட்டும் மீட்டெடுத்துவிட்டால், நாலாவதுவாழ்க்கை வாழ்ந்தது போலிருக்குமே என்று நினைக்கிறார்....

‘கேட்காமலே இத்தனை வசைகளை இந்தியாவின்மீதே அள்ளிக்கொட்டிய நண்பன் , நாம் கேட்டு , இல்லையென்றா சொல்லப்போகிறான்?’ என்று கோத்தபாயாவையே அணுகியிருக்கிறார்.

அவர்தான் பிரித்தானியா, நோர்வே, அமெரிக்கா என்று எதையுமே விட்டுவைக்காமல், ‘வெள்ளைப்புலிகள்’ என்று வசைபாடிய வள்ளலாச்சே!

அவருக்குச் செக்கென்ன? சிவலிங்கமென்ன? எல்லாம் ஒன்றுதானே!

காலங்கடந்தும் மார்தட்டியிருக்கிறார் - நான்தான் செய்தேன் என்று!

கருணாநிதி விழித்துக்கொண்டுவிட்டார் என்பது சரி....

நாம் எப்போது விழித்துக்கொள்ளப்போகிறோம்?

இதுவே, ஒவ்வோரு தமிழனும் சகதமிழனிடமும் கேட்கும்
‘ மில்லியன் டாலர்’ கேள்வி!!!!