மெரீனா கடற்கரையில் கருணாநிதி நடாத்திய ‘ ஒரு மணிநேர உண்ணாவிரதம்’ எனும் நாடகத்தில் கருணாநிதிதான் , நடிப்பு உட்பட கதைவசனம் எழுதும் பொறுப்பையும் ஏற்றிருந்தார் ;அதில் உபவேடங்களில் நடித்திருந்த மேனன் , நாராயணன் , பிரணாப் என்று அனைவருக்குமே அவரவர் மொழியில் எழுதியும் கொடுத்திருந்தார்.
ஆனால் இந்தப் பாழாய்ப்போன சிங்களம் கொஞ்சம் கஷ்டமாகிப்போய்விட்டது. அதனாற்றான், கோத்தபாயாவுக்கென்று எழுதியதைக் கொடுக்கமுடியாமலே போனது.
இதனால் கோத்தபாயாவுக்குக்கவலை ;
இவருக்கோ உற்றநண்பனைக்கவலைப்படுத்திவிட்டோமே என்று கவலை.
” கவலைப்படாதே (ராசபச்சே) சகோதரா! உனக்கென்றும் ஒருநேரம் வரும். அப்போது நீ மட்டும்தான் எனது வசனத்தைப்பேசுவாய்” என்று வரம் கொடுத்தார். அந்தநேரம் இப்போதுவந்திருக்கிறது.
இதில் நாடகம்,கதைவசனம் என்பதெல்லாம் கொஞ்சம் கற்பனைதான் ;
ஆனாலும் , அதில் உண்மை இல்லாமலும் இல்லை என்றவிடயம் கருணாநிதியை அறிந்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.
எடுத்த எடுப்பிலேயே, ‘ இந்தியாவைத்தந்திரமாக ஏமாற்றினோம் .... இந்தியாவின் போரைத்தான் நாம்நடத்தினோம்....என்றெல்லாம் இந்திய வல்லரசேகூனிக்குறுகி நாணும்வகையில் வாய்த்துடுக்காக வார்த்தைகளை அள்ளிவீசிய கோத்தபாயா, கருணாநிதியைத் தாம் ஏமாற்றியதைமட்டும் -
இவ்வளவு காலங்கடந்து, முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஓராண்டு நினைவாஞ்சலிகள் நிகழவிருக்கும் இந்தநேரத்தில் ஏன்வெளியிடவேண்டும்?
இங்குதான் நாம் யோசிக்கவேண்டியிருக்கிறது.
கருணாநிதிக்கு இப்போதுள்ள அவசரதேவை: ‘தமிழினத்தின் ஒப்பற்ற ஒரேதலைவர்’ என்ற பெயரை மீட்டெடுப்பதே! அது தொலைந்து வெகுகாலமாகிவிட்டது என்பதையே நம்பமறுக்கிறது அவரது நப்பாசை!
அவனவன், ஒருவாழ்க்கை வாழ்வதற்கிடையிலேயே அல்லாடிப்போகிறான் ; போதும் போதும் என்றாகிவிடுகிறது. -
ஆனால், மனிதர் ஒரேநேரத்தில் மூன்றுவாழ்க்கையை வாழ்ந்தும், ஆசை அறுபடாநிலையில் தவிக்கிறார். ‘ மானாட மயிலாட... ‘ என்று அனைத்தையுமே ஆடவிட்டு இரசிக்கிறார்.
தனது கபடக் காய்நகர்த்தல்களின் வேடங்கலைந்து, தமிழர்கள் அனைவரும் தியாகி முத்துக்குமாரன் வழியில் ஒன்றுதிரண்டபோதே, கருணாநிதி ஒன்றைத் தெளிவாகப்புரிந்துகொண்டார்.
இனியும் தனது வாய்ஜாலங்கள் தமிழர்களிடம் எடுபடாதென்பதே அது.
எனவே, ‘ அன்றாட வாழ்வுக்கே அல்லாடிக்கொண்டிருந்த’ அப்பாவித்தமிழர்களை, அவர்களிடமே தாம் கொள்ளையடித்துச்சேர்த்துவைத்திருக்கும் பணத்தால் அடித்தும்,
பணத்துக்கு மசியாதவர்களை தனது கைத்தடிகளை அனுப்பிமிரட்டியும், உணர்வுள்ள தமிழ்த்தலைவர்களைச் சிறையிலடைத்தும், தமது அடுத்தகட்ட நடவடிக்கையை நகர்த்திப்பார்த்தார் ;
பணம்- பதவிகள்தான் மென்மேலும் சேர்கிறதேதவிர, பெயரை மீட்கமுடியாமலேயுள்ளது.
மனிதருக்கு இப்போது மரணபயம் இலேசாகப் பற்றிக்கொண்டதுபோலும்!
( இப்போதாவது வந்ததே! அந்தவகையில் இது தமிழனுக்கு விடிவுகாலம் என்பதன் அறிகுறி!)
எனவே, அந்தப்பெயரைமட்டும் மீட்டெடுத்துவிட்டால், நாலாவதுவாழ்க்கை வாழ்ந்தது போலிருக்குமே என்று நினைக்கிறார்....
‘கேட்காமலே இத்தனை வசைகளை இந்தியாவின்மீதே அள்ளிக்கொட்டிய நண்பன் , நாம் கேட்டு , இல்லையென்றா சொல்லப்போகிறான்?’ என்று கோத்தபாயாவையே அணுகியிருக்கிறார்.
அவர்தான் பிரித்தானியா, நோர்வே, அமெரிக்கா என்று எதையுமே விட்டுவைக்காமல், ‘வெள்ளைப்புலிகள்’ என்று வசைபாடிய வள்ளலாச்சே!
அவருக்குச் செக்கென்ன? சிவலிங்கமென்ன? எல்லாம் ஒன்றுதானே!
காலங்கடந்தும் மார்தட்டியிருக்கிறார் - நான்தான் செய்தேன் என்று!
கருணாநிதி விழித்துக்கொண்டுவிட்டார் என்பது சரி....
நாம் எப்போது விழித்துக்கொள்ளப்போகிறோம்?
இதுவே, ஒவ்வோரு தமிழனும் சகதமிழனிடமும் கேட்கும்
‘ மில்லியன் டாலர்’ கேள்வி!!!!
No comments:
Post a Comment