கடந்த ஆண்டு சிங்கள / இந்திய அரசுகளால், திட்டமிட்டவகையில் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் குருதிநெடி இன்னமும் ஆங்காங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறது.
முள்வேலிக்குள் அடைபட்ட அப்பாவித்தமிழரின் நிலைமையில், பெரிதாக மாற்றமேதும் இல்லை.
உலகநாடுகளை ஏமாற்றும்வகையில், மீள்குடியேற்றம் என்றும் கண்ணிவெடி அகற்றல் என்றும் போக்குக்காட்டிக்கொண்டே, சிங்களமானது தனது நில ஆக்கிரமிப்பைத் தீவிரமாகமுன்னெடுக்கிறது.
ஆங்காங்கே தமிழ்ப்பகுதிகளை உயர்பாதுகாப்புவலயம் என பிரகடனப்படுத்திவிட்டு, சிங்களக்குடியேற்றங்களை அமைத்துவருகிறது.
இளம்போராளிகளைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதாக, ஊடகங்களின் ஒளிப்படக்கருவிகளின்முன் நாடகம் நடத்திவிட்டு, மீண்டும் இரகசியமாக அவர்களைக்கைதுசெய்து சிறையிலடைக்கிறது சிங்களம்.
ஏனைய போராளிகளை, புனர்வாழ்வு எனும்போர்வையில், திறந்தவெளிச்சிறைகளில் அடைத்து , அடிமைகளாகவைத்து வேலைவாங்குகிறது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னமும் கொலை,கற்பழிப்புகள் நிகழ்ந்தவண்ணமேயுள்ளது.
இவையெல்லாம் ஏதோ, மனிதரின் அன்றாட அத்தியாவசிய நிகழ்வுகள் எனும் தோரணையில் , உலகமே ,களியாட்டங்களிலும் விளையாட்டுக்களிலும் மூழ்கிப்போயிருக்கிறது.
அன்றாடம் துன்பத்தில் உழலும் மக்களின் உண்மைநிலையை, உலகத்துக்குப் புரியவைக்கவேண்டிய ஊடகங்கள், தமது கடமையை மறந்து, ‘ காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் ‘ எனும் பழமொழிக்கமைய , பணம் சம்பாதிப்பதில் போட்டிபோடுகின்றன.
உலக ஊடகங்கள்தான் இப்படியென்றால், தாய்த்தமிழகத்திலும் இதேநிலைதான்.
பெரும்பாலான தமிழக ஊடகங்கள்,தமிழ்மக்களைக்குழப்பும்விதமான செய்திகளுக்கு முன்னிரிமை தந்து, அதன்மூலம் , ஈழ ஆதரவு / எதிர்ப்பு ஆகிய இருமுனைகளிருந்தும் பணம்பண்ணும்வழியையே பின்பற்றுகின்றன.
கொலைகாரக்கூட்டணியான இந்தியாவும் ஸ்ரீலங்காவும், தாம்செய்தபடுகொலைகளை மறக்கடிக்கச்செய்யும்விதமாக, பெரும் எடுப்பில் ஐஃபா களியாட்டங்களை நடாத்துகிறது.
இருந்தும், தமிழின உணர்வாளர்கள், நிம்மதிப்பெருமூச்சு விடக்கூடிய ஒரு விடயமும் வெற்றிகரமாகத் தமிழகத்தில் நடந்தேறியேவிட்டது.
கொழும்புசெல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பங்குபற்றும் திரைப்படங்களுக்கு தமிழகம் மட்டுமல்லாது, தென்னிந்தியாவிலேயே தடைவிதிக்கப்படும் என்ற , ’தென்னிந்தியத்திரைப்படச்சம்மேளனத்தின்’ அறிவிப்பு , ஐஃபா விழா எதிர்ப்பாளர்களுக்குப் பெரும் பக்கபலமாக அமைந்துவிட்டது.
இதற்கு அடிப்படையாக அமைந்தது, ரஜனிகாந்த் அவர்களின் அதிரடி முடிவுதான் என்றால் மிகையாகாது.
எவருமே முடிவை அறிவித்திராதநிலையிலும், முதன்முதலாக துணிச்சலுடன் உறுதியாகத்தமது முடிவை அறிவித்திருந்தார் சூப்பர்ஸ்ரார் ரஜனிகாந்த்.
அவர் அதற்கான காரணத்தையும் மிகத்தெளிவாகவே வெளியிட்டிருந்தார்
அத்துடன்நில்லாது , கமலஹாசன் போன்றவர்களுக்கும் உண்மைநிலையைப் புரியவைத்து, அதிலிருந்து விலகச்செய்தார்.
தமிழகத்தின் பெரும்புள்ளிகளான இவ்விருவருடன், முன்னணி இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் முடிவுமே , பலருக்கு , தமது நிலைப்பாட்டை உறுதியாக்கிக்கொள்ள உதவியது என்பதுதான் உண்மை.
தொடர்ந்து , ’ செந்தமிழன்’ சீமானின் நாம்தமிழர் இயக்கம் நடாத்திய அதிரடிப்போராட்டத்தில் மிரண்டுபோய் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன். ஐஸ்வர்யாராய் போன்ற இந்திப்படவுலகத்தின் முக்கியபுள்ளிகளும் பின்வாங்கிவிட , மலையாலப்படவுலகமும் தன் முடிவை அறிவித்தேவிட்டது.
கமலஹாசனின் உற்றநண்பரான ஷாருக்கான், காலந்தாழ்த்தினாலும் , தமது முடிவை உறுதியாக அறிவித்தமை பாராட்டுக்குரியதே!
இதில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியது யாதெனில், தமிழ்த்திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற அயல்மாநில நடிகையான நமீதாவும், இவ்விழாவைப் புறக்கணித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், காரணத்தையும் சரியாகக்குறிப்பிட்டமையே!
இந்தியத்திரைப்படத்துறையின் ஜாம்பவான்கள் அத்துணைபேரும் பின்வாங்கியநிலையிற்றான், களையிழந்துபோன இவ்விழாவைத்தூக்கிநிறுத்த , ‘ மான்வேட்டையில் சிக்கிச்சிறையிருந்த இந்திநடிகரான சல்மான்கான் முன்வந்தார்.
இந்நிலையில் , தமிழகத்திலிருந்தே, ஈழத்துக்கு மட்டுமல்லாது _
தமிழுக்கே _ தமிழ்மொழிக்கே ஒரு துரோகம் நடந்துகொண்டிருக்கிறது.
எதுவென்கிறீர்களா?
சிங்களத்தின் எதிர்க்கட்சிகளே , தமிழ்மக்கள் இன்னமும் , தகரக்கொட்டகைகளில் ஆடுமாடுகளைப்போல் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என ஒப்புக்கொண்டு , ஒப்புக்காவது நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்தநேரத்தில் _
மிக ஆடம்பரமாக பெரும் எடுப்பில் நடைபெற ஏற்பாடாகிக்கொண்டிருக்கிறது செம்மொழிமாநாடு என்ற பெயரில் ஒரு களியாட்டநிகழ்வு.
இது, தமிழ் செம்மொழியானதை முன்னிறுத்தியதல்ல - வெறும் களியாட்டத்தையும், அரசியல் இலாபங்களையும் நோக்கமாகக்கொண்டது என்பதற்குச்சரியான சான்று -
தமிழக அரசின்சார்பில் இதற்காகத்தயாரான பாடலை இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் , வழக்கம்போலவே இதிலும்கூடத் தமது மொழியைச்சிதைக்கும் நடவடிக்கையில் இறங்கியமையே!
அதாவது, ‘ யாதும் ஊரே ! யாவரும் கேளிர்’ என்ற கணியன்பூங்குன்றனின் வரிகளையே கொச்சைப்படுத்தி -
‘யாதும் ஊரே ! யாவரும் கேளீ.... ‘ என்று முடித்திருக்கிறார்.
இதில் அந்த ‘ ர்’ என்பது சேர்ந்தாலும், அவ்வரி தவறானது என்பது தமிழுணர்ந்த அனைவர்க்கும் புரியும்.
ஆனால், இவரோ அந்த ‘ர்’ கூட இல்லாமல் அதை முடித்திருக்கிறார்.
இவரைப்பொறுத்தவரை, ஏற்கெனவே , அரபிக்கடலோரம் நின்று ‘ ஹம்மா ஹம்மா ‘ என்று தமிழ்மொழியின் முதல்வார்த்தையையே கொலைசெய்து , அதன்மூலம் கவிஞர் வைரமுத்துவின் அதிருப்திக்குள்ளானவர் என்பது அனைவரும் அறிந்தவிடயம்.
இஃதிவ்வாறிருக்க, ’தமிழுக்குப்பெருந்தொண்டாற்றிய பெருமகன்’ என்று தமக்குத்தாமே புகழ்மாலை சூட்டிக்கொள்ளும் கருணாநிதி -
இந்த முக்கியமான வரிகளைக்கவனிக்காமல்விட்டதன்மூலம், இதிலும் அப்பட்டமான அரசியல்நகர்வையே மேற்கொள்ளுகிறார் என்பது நிரூபணமாகிறது.
‘ ர் ‘ ஐ விட்டவர் வாழ்க!!
என்று வாழ்த்துவதைத்தவிர, இதில் யாரால் என்னசெய்யமுடியும்?
அவர்கள் பக்கம் காற்று பலமாகவே வீசுகிறது.
காற்றுமட்டுமா_? மழையும்கூட அவர்கள் பக்கம்தான்!!!
இதில் எமது தேசியத்தலைவரின் படம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு வெளியிட்டதில் , கருணாநிதியின் படம்தான் உள்ளது. இங்குள்ள இணையதளமொன்றின் ஆர்வக்கோளாறுதான் இதற்குக்காரணம்.
ஊடகம் என்றுபார்த்தால், இஃதொரு மிகப்பாரதூரமான தவறு!!
No comments:
Post a Comment