எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Wednesday, May 17, 2023

                                 


நான் வேலைசெய்த நிறுவனம், காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டு, வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்தேன் என்பதுடன்  முடிந்ததல்லவா  முதற்பாகம்?

இனி என்ன செய்யப்போகிறேன் என்று, அடுத்த தலைப்பில் சொல்கிறேன் என்றுதானே சொன்னேன்?

அடுத்த தலைப்பு  ´வெளிநாட்டுப் பயணம்`  என்பதைத்தவிர, வேறெதுவாக இருக்கமுடியும்?

ஆனாலும், இந்த வெளிநாடு செல்லும் எண்ணம், உடனடியாக எனக்கு ஏற்படவேயில்லை. 

அஃதொரு விபத்தாகவே என்வாழ்க்கையில் குறுக்கிட்டது.

மீண்டும், அந்த நிறுவனம் புதுப்பிக்கப்பட்டு, அங்கேயே தொடர்ந்து பணிசெய்யவே என்மனம்  விரும்பியது.

ஏறத்தாழ ஒரிருமாதங்கள்வரை, எவ்விதமான வருமானமும் இல்லாமலே எனது வாழ்க்கை தொடர்ந்தது..

ஏதோ ´கடனை உடனை..` என்பதுபோலக் காலம் நகர்ந்தது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

யாழ்.நகரின் நிலைமை சீராகிவிட்டது என்று அறிந்ததும், முதல்வேலையாக,  யாழ்.ஐக்கியவியாபாரச் சங்கக் கட்டடம் இருந்த இடத்தைநோக்கி ஆவலுடன் போனேன். அங்கே ஏமாற்றம்தான் எனக்கு மிஞ்சியது.

முற்றுமுழுதாக எரிந்தநிலையில், வெளிச்சுவர்கள் மட்டுமே, அதுகூட அரைகுறையாக நின்றதைக் கண்டு, மனம் சங்கடப்பட்டது.

அதன்கதைதான் முடிந்துவிட்டது; மெயின்ஸ்ரோர்ஸ்  ஆவது  இயங்குகிறதா என்று பார்ப்பதற்காக, கஸ்தூரியார்வீதிச் சந்தி நோக்கிப் போனேன்.

அந்தச் சிறிய கடையில் தொடங்கிய நிறுவனம்தான், மணிக்கூட்டுவீதிச் சந்தியில் கிளைவிட்டுப் பரந்துவிரிந்திருந்தது.

அதனால், அதை மெயின்ஸ்ரோர்ஸ்(Main stores) என்றும், இதை டிப்பார்ட்மென்டல் ஸ்ரோர்ஸ் (Departmental stores) என்றும் சொல்வோம்.

சுருக்கமாக M.S., D.S.என்பதுதான் நமது புழக்கத்திலிருந்தது.

 M.S.  இன் வாசலை அடைந்ததும் பெரிய ஆச்சரியமே காத்திருந்தது.

வழமைபோல, அங்கே  வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

" அட.. வாவா  வாவா வா.. எங்கையடாப்பா இவ்வளவுகாலமும் போனனி?"  

அதன் முகாமையாளர் வாய்நிறைய வரவேற்றார்.

" எனக்குத் தெரியாதையா இது நடக்குதெண்டு" 

" இடையில வந்து பாத்திருக்கலாமே.. எனக்கும் பில் கௌண்டருக்கு ஒரு ஆள் குறையுது. நாளைக்குக் காலம வாவன்.."

 எனக்கோ என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.  

பட்ட கடனை அடைக்கலாம் என்பதுமட்டும்தான் கண்முன்னே பளிச்சிட்டது.

பழம் நழுவிப் பாலில் விழுந்ததோ அன்றி பால் நழுவிப் பழத்தில் விழுந்ததோ என்பதுபோல, குழப்பமான மனநிலையிலிருந்தேன்.

´குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கொண்டு குடுக்கும் ` என்று, நாட்டுப்புறத்துப் பேச்சுவழக்கில் சொல்வார்களல்லவா? .

அதற்காக இப்படியா?  ஒரேநொடியில், எனது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

நன்றியுடன் எனது இசைவைத் தெரிவித்துவிட்டு வீடுவந்துசேர்ந்துவிட்டேன்.
மறுநாள் சொன்னபடி, காலை 8 மணிக்கெல்லாம் வேலையைத் தொடங்கிவிட்டிருந்தேன்.
அவரும் சொன்னபடி, மாதமுடிவில்  எனது சம்பளத்தைத் தந்துவிட்டார்.
ஆனால், போகப்போக ஒவ்வொரு வாரம் பிந்தியே கிடைத்தது. அப்படியே, நாலாவது மாதம் கிடைக்கவேயில்லை. 
" கொஞ்சம் இறுக்கமா இருக்கடாப்பா! உனக்கு மட்டுமில்லை; ஒருத்தருக்கும்... ஏன்?   எனக்கே இந்த மாதம் சிக்கல்லதான் நிக்குது. - சங்கடத்துடன் நெளிந்தார் முகாமையாளர்.
அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.
அவரோ, தலையைக் கவிழ்ந்தபடி " ஒரு இடத்திலேருந்து கொஞ்சக் காசு வரவேணும்; அது வந்த உடன தாறன். குறை நினைக்காதை. ஆ"   -  அழாத குறையாகக் கெஞ்சினார்.
அடடா! மீண்டும் வேதாளம் முருக்கமரம் ஏறுகிறதா?
அதாவது, மீண்டும் கடன்படவேண்டும்.
இப்போதுதான் புரியத் தொடங்கியது - அவருக்கு ஏன் ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று.
அவரிலும் தவறில்லை.
சிகரட், மலிபன் பிஸ்கட் , பாட்டா செருப்பு மற்றும் சவரின்பார் சவர்க்காரம் என்று, இன்னும் பல மதிப்புமிக்க பொருட்களின்  வினியோக உரிமையில் கிடைத்த வருமானம்,-
வெறும் உப்பு புளி மிளகாய் விற்றுக் கிடைக்குமா?

ஒரேயொரு சிங்களக் காடையன், பாட்டா செருப்பொன்றில்வைத்த நெருப்பு,எத்தனை குடும்பங்களை வாட்டிவதைக்கிறது...
இனியும் இதை நம்பியிருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்துகொண்டேன்.
எங்காவது, தனியார் கடைகளிலாவது வேலை தேடியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அடுத்தநாள் வேலைக்குப்போன எனக்கு, ஒரு பேரிடியே காத்திருந்தது.
இராணுவச் சீருடையில் ஒரு கும்பலே, எனது மேசையின் முன் வந்துநின்றது.
ஒரு காடையன், சிங்களத்தில் ஏதேதோ சொல்லிக்கொண்டேயிருந்தான்.
எனக்கோ எதுவுமே புரியவிலை.  நான் விழிப்பதைக் கவனித்த மற்றவன் குறுக்கிட்டு,.
" நாம இப்போ சாமா கொண்டுபோறது; மாச கடசி காசுதாறது!"    என்று கொச்சையான தமிழில் சொன்னான்.
ஆஹா!  ´நல்ல கதை; ஆனால் நீளமில்லை` என்பதுபோலத்தான் இருந்தது அவனது பேச்சு.
உள்ளூரிலேயே யாருக்கும் அவ்வளவு இலகுவாகக் கடன் கிடைக்காது.
இவன்  எங்கே பிறந்தான். எங்கே வளர்ந்தான் என்று எதுவுமே தெரியாது. எடுத்த எடுப்பிலேயே கடன் கேட்கிறானே... இது சாத்தியமானதுதானா?
அதன் பொருள், அது கடனேயல்ல... கப்பம்தான் என்பது எனக்குப் புரிந்துவிட்டது.
விடுமுறையில் ஊருக்குப் போகும்போது, ஓசியில் மளிகைச்சாமான் கொண்டுபோக வழி கண்டுபிடித்த கும்பல் அது.
இதைக் கவனித்துக்கொண்டிருந்த முகாமையாளர்,  விரைவாக அவ்விடத்துக்குவந்து, "  என்னடப்பா? என்ன பிரச்சினை?" என்று கேட்டுக்கொண்டே, எனது பதிலுக்குக் காத்திராமல், அந்தக் கும்பலைநோக்கி, தன்னுடன் வரும்படி சைகை செய்தார்.
தமது மேசைக்கு அழைத்துச் சென்றவர்,  இருக்கையில்  அமர்ந்தபடி, அவர்களது மொழியிலேயே அவர்களுடன் பேச்சுக்கொடுத்தார்.
ஓரிரு நிமிடங்கள்தான் பேசியிருப்பார்..  பேசிக்கொண்டே தொலைபேசியை அவர் கையில் எடுக்கவும், அந்தக்கும்பலிலிருந்த ஒருவன், நஹி நஹி என்று அலறினான்.
தமக்குள் ஏதோ குசுகுசுத்துவிட்டு, அப்படியே நடையைக் கட்டிவிட்டார்கள்.

 

No comments:

Post a Comment