எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Wednesday, May 17, 2023




சொல்லத்தான் நினைக்கிறேன் இது தலைப்பு - இத்தலைப்பில் 
எனதுள்ளக் கிடக்கைதனை - எனதுயிரில் கலந்துவிட்ட 
 எனது முதற்காதலியின் இனிமைதரும் நினைவுகளை 
இரைமீட்டுப் பார்த்திடவே இஃதெனக்கு நல்வாய்ப்பு!
 தன்னந்தனியாக தங்கச்சிலையாக 
என் அத்தைமகள் அன்று, என்முன்னே நின்றனளே! 
 பொன்னந்தி புதுநிலவு மதுமலரின் நறுமணமாம் 
அத்தனையும் அவள்பின்னே! அடியேனும் அவள்பின்னே! 

 முத்தாரம் சிரித்ததுபோல் முத்துப்பல் இதழோரம் 
மெல்லமலர்ந்தது யான் மெய்ம்மறந்து நின்றேனே. 

 முத்தாரம் சிரித்ததுபோல் - அவளது முத்துப்பல் 
 அவள்செவ் - விதழோரம் 
மெல்லமலர்ந்தது யான் மெய்ம்மறந்து நின்றேனே. 

 இந்த இனிமைதனை இயம்பிடவே இனியதமிழ் 
மொழியினிலேகூட வழியொன்றும் இல்லையன்றோ! 
 ஆனாலும், அதிற்பாதி அனுபவத்தையாகிலும்யான் 
அதையிந்த அவையினிலே சொல்லத்தான் நினைக்கிறேன்.

 சிப்பியவள் வாய்திறந்து முத்துமுத்தாய் மொழிந்தனளே..
 சத்தியமாய்ச் சொல்லுகிறேன் சக்தியெந்தன் பெயரென்றாள். 
 என்னத்தான் என்னத்தான் என்பெயரைக் கேட்டாயே 
உன்பெயரைச் சொல்லத்தான் என்னத்தான் என்றனளே. 

 என்பெயரை யான்சொல்ல ... இவள் என்னைத் தேடிவர... 
என்மனைவி பேயாக உருவெடுத்து இவளையும் என் 
உயிரையுமே ஒன்றாகக் குடித்துவிடுவாளன்றோ!
 - ஆதலினால் 

 பேதையவள் முகம்நோக்கிப் பின்வருமாறியம்புகிறேன் : 

 என்னாசைக் காதலியே! இளங்கிளியே
 - உனையன்றி 
வேறெவரை மணமுடிப்பேன்? விந்தையன்றோ உன்பேச்சு! 
 என்பெயரை நீயறிந்தால், சொல்வதற்கும் வாய்ப்புண்டு.

 நாயகனின் பெயர்தன்னை, நாயகியாள் உச்சரித்தல் 
ஆகாது என்பதுதான் மரபுமுறை! 
 - ஆதலின் அச் 
சிந்தனையை விட்டொழிக! இதுதான் என்முடிபு! 

 சாக்குப்போக்குடனே சல்லாபம் செய்தபடி 
நீக்கமற என்நெஞ்சில் நிறைந்திருந்த அவளழகைப் 
 பார்த்து இரசித்தேன்; பரவசமாய்ப் போயிருந்தேன் 
- நீர் 
கோர்த்த விழிகளுடன் நேரிழையாள் நின்றிருந்தாள். 

 என்னத்தான் உனையெந்தன் இதயத்தில் வைத்தேனே.. 
ஏதும் அறியாத எந்தனை ஏமாற்றாதே!
உந்தன்பெயர்தன்னை ஒழுங்காய்ப் பகர் என்றாள். 

 என்ன இழவிதடா! என்னும் சலிப்புடனே 
என்னைப் பிடித்த சனி ஏதோ தொலையட்டும் 
 என்று நினைத்தபடி எழுந்தேன் விரைவாக 
             - எழுந்தேன் விரைவாக 
 இதுதான் முடிவென்று சொல்லத்தான் நினைத்தேன்.. 
 ஆனால் அவள்முந்தி,தன்பேர் தமிழென்றாள். 

 ஆஹா! அன்றிலிருந் தின்றுவரை என்நெஞ்சில் 
அசையாமல் குடியிருக்கும் அவளா  நீ? - அடி! உன்னைத்
 தேடாத இடமெல்லாம் தேடியலைந்தேன் என்று
வாடாதமலர் அவளை வாரியணைத்தேன் உடனே!

 என்வீட்டில் யான் ஒன்று; என்மனைவி அவள் இரண்டு. 
இவள் வந்தால் அது மூன்று; இவளே வகை மூன்று

வல்லினமாய் மெல்லினமாய் வருடும் இடையினமாய்
 இயல் இசை நாடகமாய் எழிலின் உறைவிடமாய் 
இவள் வளர்ந்தசங்கம் அதுமூன்று!
- இவள்பெயரில் 
பறந்த கொடிகள் மூன்று, புலி மீன் வில் என்று 
இவள்பெருமை எளிதில் சொல்லும் தரமன்று. 

வாடும்பயிர் இதிலே வான்மழைக்குத் தடையேது? 
வாடாமலர் தமிழே! வந்துவிடு!  வந்துவிடு !!
வானம்வரை வளர்ந்து வையகத்து மொழிக்கெல்லாம்
தானம் கொடுத்தவளே வந்துவிடு என்னோடு!

என்றே அவளை உடன் கூட்டிவந்தேன் எனதில்லம்.
      என்றென்றுமே அவளின் வாழ்விடம் அஃதெனதுள்ளம்.
 - இதுகாறும் 
தடையின்றிவந்த தமிழாலே உங்களிடம் 
 விடைபெற்றுக் கொள்ளுகிறேன் வணக்கம் வணக்கம்.

( இது, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணம் கல்வியங்காடு சட்டநாதர் ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில்,-
எனதூரான நாயன்மார்கட்டைச் சேர்ந்த, பிரபல எழுத்தாளரும் கவிஞருமான ´சொக்கன் ஆசிரியர்`  அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் யான் வாசித்தளித்த கவிதை)

No comments:

Post a Comment