எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Sunday, March 1, 2020

பன்னாடைகள்! பாலுண் குருகுகள்!!

பன்னாடைகள்! பாலுண் குருகுகள்!!
*************************************
 நீண்டகால இடைவெளிக்குப்பின், என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தாள். ஜேர்மனிக்கு வந்த புதிதில், என்னுடன் மட்டும்தான் நெருக்கமாக‌ப் பழகுவாள்.அடிக்கடி ஏதாவதொரு சாக்கில் வீட்டுக்கு வரவும் செய்வாள்.மிகவும் நல்லவளாகத்தான் தெரிந்தாள். ஆனால், காலப்போக்கில் அவளது நடவடிக்கைகளில் பாரிய மாறுதல் தெரியத்தொடங்கியது. வயதான ஜேர்மானியப்பெண்ணொருத்தியுடன்,பொது இடங்களில் மது அருந்தியதைக் கண்டதாகவும் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தேன்.
 முதலில் நான் அதை நம்பவில்லை.ஒருமுறை அவள் எனது வீட்டுக்கு வந்திருந்தபோது, பட்டும்படாமல் அதுபற்றி அவளிடம் உசாவினேன்.
அவளோ, மிகவும் வெளிப்படையாகவே அதை ஒப்புக்கொண்டது மட்டுமன்றி,‍_
 " அதென்ன...ஆம்பிளையளெல்லாம் விரும்பின வாழ்க்கையை வாழலாம்; பொம்பிளையளெண்டாமட்டும் ஓராயிரம் கட்டுப்பாடு..இஃதென்ன சிறிலங்காவே?  ஜேர்மனி. இங்கை யாரும் விருப்பம்போல வாழலாம்"  என்று பொங்கினாள்.
இதை யான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவரை என்னை எதிர்த்தே பேசாதவள், அன்று பெருங்குரலெடுத்துப் பெண்ணியம் பேசினாள்.
இவள் ஜேர்மனிக்குவந்து, முழுமையாக மூன்றுமாதங்கள்கூட முடியவில்லை; ஜேர்மனியைப்பற்றி எனக்கே பாடம்நடத்த வந்துவிட்டாளே... கோபத்தைவிடவும் சிரிப்புத்தான் அதிகமாகவந்தது.
ஜேர்மனியிலும் எத்தனையோ நல்ல பழக்கவழக்கங்கள் பண்பாடுகள் உண்டு. நல்ல மனிதர்கள் உண்டு. 
நெல்மணிகளில் பதர்போல, நல்லவைகளுள் ஒருசில‌ கழிசறைகளும் கலந்திருப்பது இயல்புதானே?
சாற்றினை ஓடவிட்டு, சக்கையைப் பிடித்து வைத்துக்கொள்ளும் பன்னாடைபோல, அந்தக் கழிசறையைமட்டும் வைத்துக்கொண்டு ஜேர்மனியையே அளக்கிறாளே...
பன்னாடை பன்னாடை...  மன‌துக்குள் திட்டிக்கொண்டேன்.
இனி, இவளுடன் பேசிப் பயனில்லை என்பது எனக்குப் புரிந்துவிட்டது. எனவே, பக்குவமாகவே அவளிடம் சொல்லிவிட்டேன்_ இனிமேல் வீட்டுக்கு வரவேண்டாம் என்று.
இந்தநிலையில்தான் மீண்டும் ஆறுமாதங்கள் கடந்தபின்பு தொலைபேசியில் அழைத்தாள்.
" அங்கிள், நான் மாலினி கதைக்கிறன்.."  அவள் குரலில் தயக்கம் தெரிந்தது.
அந்தப்பெயரைக் கேட்டதும், எனக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. உடனடியாகவே இணைப்பைத் துண்டித்துவிடலாமா என்றும் யோசித்தேன். எனது மௌனத்தில் அவளுக்கு அது புரிந்திருக்கவேண்டும்.
அவசர அவசரமாகச் சொன்னாள்: "அங்கிள்! போனைக் கட்பண்ணீடாதேங்கோ பிளீஸ்.."
" ம்ம்ம்.. சொல்லு. என்ன விஷயம்?"
ஒருசில நொடிகள் மௌனத்தின்பின் இலேசானதொரு விம்மலுடன் தொடங்கினாள்:
" இதை என்னெண்டு உங்களுக்குச் சொல்றதெண்டுதான் யோசிக்கிறன் அங்கிள்..!"
" இஞ்ச வா பிள்ளை! எனக்கு நிறைய வேலையிருக்கு..சொல்றதைச் சுருக்கமாச் சொல்லு.என்ன விஷ்யம்?" மீண்டும் அழுத்திக் கேட்டேன்.
" பெத்த தகப்பனைப்போல, நீங்க எனக்கு எத்தின புத்திமதியெல்லாம் சொன்னீங்க.. ஆனா நா எதையுமே கேக்காம , இப்பிடியொரு பிரச்சினையில சிக்குப்பட்டுப்போனன் அங்கிள்.."  விக்கல் விம்மல்களுக்கிடையில் துண்டுதுண்டாக, இவ்வளவையும் சொல்லிமுடித்தாள்.
அதன்பிறகு அவள் சொன்னவைகள் எதுவுமே எனக்குப் புரியவில்லை.
கேவிக்கேவி அழுதுகொண்டேயிருந்தாள்.முடிவில் பெருங்குரலெடுத்தே அழத்தொட‌ங்கிவிட்டாள்.
´ஒருவேளை தண்ணி கிண்ணி போட்டிருப்பாளோ?` இப்படியான குறுக்குச்சிந்தனை என்மனதில் எழுந்தது. சினத்துடன் தொடர்பைத் துண்டித்துவிட்டேன்.
ஊரில்,இவளது குடும்பத்தையே நான் அறிவேன்.இவளுக்கு இன்னும் நான்கு சகோதரிகள் உண்டு. பெரிய குடும்பம்..
வறுமை காரணமாக, 15 வயதுச் சிறுமியான இவளை,  18 வயதான போலிக்கடவுச்சீட்டில் ஜேர்மனிக்கு அனுப்பிவைத்துவிட்டார்கள் இவளது பெற்றோர்.
இங்கு அனைவருக்குமே அவள் 18 வயதுப் பருவக்குமரிதான். ஆனால்,நான் அவளது குடும்பத்தையே அறிந்தவன் அல்லவா?
எனினும், எனக்கு இது தெரிந்ததாக, அவள் உட்பட யாரிடமும் நான் காட்டிக்கொண்டதில்லை. ஏதாவதொரு காரணத்திற்காக, அவள் நாடுகடத்தப்பட்டால்,என்மீது பழி விழுந்துவிடும் என்பதால், அதில் மிகவும் கவனமாகவே இருந்தேன்.
மீண்டும் தொலைபேசி அலறியது. அவளாகத்தான் இருக்கும் எனும் நினைப்பில்,அதை அப்படியே அலறவிட்டேன்.
´இவள் என்னை ஒரு வழிபண்ணாமல் விடமாட்டாள் போல இருக்கே..எனக்குத் துளியும் தேவையில்லாத பிரச்சினை இது. என்னைக் கேட்டா ஒவ்வொன்றும் இவள் செய்தாள்?` 
வெறுப்புடன் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.
திடீரென்று மின்னலாக ஒன்று என் புத்தியில் உறைத்தது:
´ஒருவேளை, நாடுகடத்தும் செய்தி கிடைத்திருக்குமோ?அதனால்தான் இப்படி அழுகிறாளாக்கும்.
அப்படி, இவள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அந்தக் குடும்பமே தற்கொலை செய்வது மட்டும் நிச்சயம்.
சரி.. எதற்கும் நம்மால் முடிந்ததைச் செய்வோமே` என்ற முடிவுடன், தொலைபேசியை எடுத்தேன்.
மறுமுனையிலிருந்து ஒரு ஜெர்மானிய‌ப்பெண்ணின் குரல் கேட்டது.
`அடச்சீ! இவளா! அந்தப் பன்னாடைக்காக, கூட இருக்கிற‌ பன்னாடை வருகுதுபோல‌ வக்காலத்துக்கு.` அருவருப்புடன் நெளிந்தேன்.
ஆனால், வந்தது அந்தப் பன்னாடை அல்ல!
மாறாக, இந்த நகரத்திலேயே புகழ்பெற்ற சட்டத்தரணியான இங்க்ரிட்  மாயா என்ற இளம்பெண்.
இங்க்ரிட் மாயாவைப்பற்றிச் சுருக்கமாகச் சொன்னால்,_
முப்பதே வயதான, வனப்புமிக்க ஜெர்மானிய இளமங்கை.
தமிழர்தம் வாழ்வியலின் இரசிகை.இயற்கையின் நிரந்தரக் காதலி.
இந்த இயற்கையின்மீது கொண்ட காதலினாலேயே,கணவனிடமிருந்து மணவிலக்குப் பெற்றவள்.
அதாவது, அவள் கணவனுடன் குடியிருந்த வீட்டின்முன், மரமொன்றை நடுவதற்காக, நகர நிர்வாகம் முயன்றபோது, அதை,கணவன் தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட பிணக்கு, மணமுறிவுவரை போய்விட்டது.
தொலைபேசியில் என்னை அழைத்த இங்க்ரிட்,முக்கியமான விஷயம் பேசவேண்டுமென்றும், தனது வீட்டுக்கு வரமுடியுமா என்றும் கேட்டாள்.
´என்னவாயிருக்கும்?` என்ற குழப்பத்துடன், அடுத்த பத்தே நிமிடங்களில் அங்கு நின்றேன்.
என்னை வரவேற்று அமரவைத்தவள் முகத்தில் சற்றே இறுக்கம் தெரிந்தது.
எடுத்த எடுப்பிலேயே "மாலினியைப்பற்றி ஏதாவது தெரியுமா?" என்று கேட்டாள்: .
அவள் கேட்ட தோரணையில், ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்பது
எனக்குப் புரிந்துவிட்டது.
நீண்டகாலத்தின்பின் மாலினி தொலைபேசியில் அழைத்ததையும், ஏதோ சிக்கல் என்று மட்டும் சொல்லிவிட்டு அழுதுகொண்டிருந்ததையும் சொன்னேன்.
"  அவள் கர்ப்பமாக இருக்கிறாள்; அதை உன்னிடம் எப்படிச் சொல்வது என்ற தடுமாற்றத்தில்தான் அழுதிருக்கிறாள்போலும்."
´என்னடா இது! இப்படியொரு குண்டைத் தூக்கிப்போடுறாள்...`  அதிர்ச்சியில் உறைந்தேன்.
அந்த ஏழைக்குடும்பத்தின் நிலைதான் என்கண்முன்னே நிழலாடியது.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுன்னரே, அடுத்த குண்டைத் தூக்கிப்போட்டாள் இங்க்ரிட்.
" அதற்குக் காரணம் யார் தெரியுமா? குணாதான்"
அதிர்ந்து போயிருந்த என்னை,இது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
குணா என்று இவள் குறிப்பிடுவது,மணவிலக்குப் பெற்றபின், இவளுடன் ´ஒன்றாக வாழ்தல்`  ( Living together)  எனும் முறையில், சேர்ந்துவாழும் ஒரு தமிழ் இளைஞன்.
குணாவின்மீது எனக்குக் கொலைவெறித் தாக்குதல் நடத்துமளவுக்குக் கோபம் கோபமாக வந்தது.
´அட‌ நாயே! உனக்குத்தான் வெள்ளைப்பணியாரம் கிடைச்சுட்டுதே.. அதுக்குப்பிறகும் ஏண்டா அந்த ஏழைக்குடும்பத்தைச் சீரழிச்சே..?` கொச்சையாகவே மனதுக்குள் திட்டினேன்.
இங்க்ரிட் தொடர்ந்தாள்: " மாலினிக்கு நான் உதவிசெய்யலாம் என்று நினைக்கிறேன். சட்டப்படி இதைக் கையாண்டு, குணாவுக்கே அவளைத் திருமணம் செய்துவைக்கவேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?"  என்றபடி என்முகத்தையே உற்றுப்பார்த்தாள்.
தலையைக்குனிந்தபடி நெற்றியைப் பிசைந்துகொண்டே நான் பலத்த யோசனையில் ஆழ்ந்தேன்.
சட்டப்படியான நடவடிக்கை என்றால்,இருவருக்குமே கொழும்பிலிருந்து ´திருமணமாகாதவர்கள்` எனும் சான்றிதழ் பெற‌வேண்டும். அப்போது, மாலினியின் வயது தெரியவருமே..
 இனியும் இதை மறைப்பது நல்லதல்ல... என்மனதினுள் எழுந்த போராட்டத்துக்கு, நானே தீர்வையும் கண்டுபிடித்தேன்.
" என்ன கடுமையான யோசனை? இதில் உனக்கொன்றும் பிரச்சினை வராது.மொழிப்பிரச்சினைக்காகத்தான் உன்னைக்கூப்பிட்டேன். நான் சொல்கிறதை, அவளுக்குப் புரியவைத்துவிட்டால் போதும். பாவம். அவள் சின்னப்பெண்தானே...
" சின்னப்பெண் அல்ல! அவள் சிறுமி. அதைத்தான் சொல்லலாமா விடலாமா என்று யோசிக்கிறேன்" என்னையுமறியாமல் கக்கிவிட்டேன்.
" உண்மையாகவா?"  ஆச்சரியத்தில் அவள் விழிகள் விரிந்தன. இப்போது, அவள் கடுமையான யோசனையில் ஆழ்ந்தாள்.
 ஓரிரு நிமிடங்கள் அங்கு நிலவிய அமைதியை, அவளே குலைத்துக்கொண்டு பேசத்தொடங்கினாள்.
" சரி.. இப்போதைக்கு, ஜேர்மனியைப் பொறுத்தவரை அவளது வயது 18 ஆகவே இருக்கட்டும். ஆனால், குணா இதற்குப் பொறுப்பேற்றேயாகவேண்டும்.  இன்னும் மூன்று ஆண்டுகளின்பின், முறையாக இருவருக்கும் திருமணம் செய்துவைப்போம். அதுவரை, மாலினி எனது அம்மா வீட்டில் இருக்கட்டும். அம்மா அவளை நன்கு கவனித்துக்கொள்வாள்.என்ன சொல்கிறாய்?"  என்றவாறு என்முகத்தைக் கூர்ந்து நோக்கினாள்.
அவளைப் பெருமையுடன் பார்த்தேன்.
இரண்டு பன்னாடைகளுக்கு மத்தியில், ஒரு பாலுண் குருகு இவள்!
எனது சம்மதத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் வீடுதிரும்பினேன்.

No comments:

Post a Comment