எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Saturday, October 14, 2023

’ அதிர்வு’ விடுதலைப்புலிகளின் அதிகாரமையம்?

உலகிலேயே அதிகமுறை ஏமாந்ததில் சாதனைபடைத்த இனம் என்றால் அது தமிழினத்தைவிட வேறொன்று இருக்கமுடியாது.
அரைநூற்றாண்டுகாலமாக, சிங்களத்தின் காகிதஒப்பந்தங்களையும், ஆட்சியாளர்களின் வாய்வாக்குறுதிகளையும் நம்பி நம்பியே , இந்த நிலைமைக்கு வந்துவிட்டான் தமிழன்.
‘ மரம் பழுத்தால் வௌவால் வரும் ‘ என்று 1970 களில் , தமிழர்விடுதலைக்கூட்டணியின் தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் எவனோ ஒருவன் தான்தோன்றிதனமாக முழங்கினான்.
பதவிகளையே குறியாகக்கொண்டிருந்தமையால் கூட்டணியும் இதைக்கண்டுகொள்ளாமலேவிட்டது.

மரம் நட்டாற்றானே பழம் வர ? பழம் பழுத்தாற்றானே வௌவால் வர ?

மரம் நடப்பட்டிருக்கிறதா? நடுவதற்கான முயற்சிகளாவது மேற்கொள்ளப்படுகிறதா?
இதையெல்லாம், தமிழன் எண்ணிப்பார்க்கவேயில்லை.

’ வீட்டுக்கு நேரே புள்ளடிபோடு’ அல்லது ‘ சூரியனுக்கு நேரே புள்ளடிபோடு’ என்றளவில் தனது கடமை முடிந்தது என்று இருந்துவிட்டான்.

தேர்தல் பரப்புரையில் மக்களுக்குக்கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில்பறக்கவிடப்பட்டு, தமிழர் கூட்டணியானது சிங்களத்துக்குக் காவடி எடுக்கமுனைந்தபோது, ஆங்காங்கே மாணவர்கள் ,குழுக்கள்குழுக்களாக நின்று , தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

ஆனாலும், அத்தனையும் , ஆட்சியாளர்களால் , ஆயுதமுனையில் அடக்கப்பட்டது நாமனைவரும் அறிந்தவிடயம்.

ஜனநாயகவழியிலான போராட்டங்கள் அத்தனையும், ஆயுதமுனையில் ஒடுக்கப்பட்டநிலையிற்றான், விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இது வரலாறு.

அதையுமே, அடுத்தடுத்து பதவிக்குவந்த ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் நயவஞ்சகமானமுறையிலேயே , புலிகளைப் பயங்கரவாதிகள் எனப் பரப்புரை செய்து ஒடுக்கினர் என்பது இன்று உலகமே அறிந்தவிடயம்.

இதனாற்றான், விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில், உறுதியாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதன் முக்கிய அம்சம் : ‘ தற்காலிகமாக எமது ஆயுதங்கள் மௌனிக்கப்படுகின்றன’ என்பதே.

அத்துடன், மேற்குலகில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம், அந்தந்த நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும்வகையில் வீதிகளில் இறங்கிப்போராடுமாறும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இளைஞர்களிடம்தான் போராட்டம் கையளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இங்குநாம் கவனிக்கவேண்டியது, இளைஞர்களிடம்தான் கையளிக்கப்பட்டதே தவிர , இணைய தளங்களிடம் அல்ல.

அதாவது, ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட இந்த இடைவெளியில் , மக்களின் போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படாதிருக்கும்வகையிலேயே இது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனினும், இங்குள்ள பல ஊடகங்களை எதிரி தன்வசப்படுத்தும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டிருந்தான்.

காணொளி ஊடகங்கள் எதுவுமே பலியாகாத நிலையில், பாரிஸிலிருந்து ஒளிபரப்பான GTV எனும் தொலைக்காட்சிநிறுவனம் மட்டும், தலைவர் மரணித்துவிட்டதாகச்செய்திவெளியிட்டு, ஒருவாரம்வரை துக்கவாரமாகவும் பிரகடனப்படுத்தியிருந்தது.
( இதுவே இளைஞர்களின் கண்டனத்துக்குள்ளாகி, இரண்டு நாட்களிலேயே துக்கவாரம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது வேறுகதை)






Sunday, May 21, 2023

 

புலம்பெயர்தேசத்தில் பிறந்த தமிழச்சியின் தமிழுணர்வு.


 இந்தியா முன்வைத்த 13ம் திருத்தத்தைத் தோலுரிக்கும், புலம்பெயர்தேசத்தில் பிறந்த தமிழச்சி!

Wednesday, May 17, 2023




சொல்லத்தான் நினைக்கிறேன் இது தலைப்பு - இத்தலைப்பில் 
எனதுள்ளக் கிடக்கைதனை - எனதுயிரில் கலந்துவிட்ட 
 எனது முதற்காதலியின் இனிமைதரும் நினைவுகளை 
இரைமீட்டுப் பார்த்திடவே இஃதெனக்கு நல்வாய்ப்பு!
 தன்னந்தனியாக தங்கச்சிலையாக 
என் அத்தைமகள் அன்று, என்முன்னே நின்றனளே! 
 பொன்னந்தி புதுநிலவு மதுமலரின் நறுமணமாம் 
அத்தனையும் அவள்பின்னே! அடியேனும் அவள்பின்னே! 

 முத்தாரம் சிரித்ததுபோல் முத்துப்பல் இதழோரம் 
மெல்லமலர்ந்தது யான் மெய்ம்மறந்து நின்றேனே. 

 முத்தாரம் சிரித்ததுபோல் - அவளது முத்துப்பல் 
 அவள்செவ் - விதழோரம் 
மெல்லமலர்ந்தது யான் மெய்ம்மறந்து நின்றேனே. 

 இந்த இனிமைதனை இயம்பிடவே இனியதமிழ் 
மொழியினிலேகூட வழியொன்றும் இல்லையன்றோ! 
 ஆனாலும், அதிற்பாதி அனுபவத்தையாகிலும்யான் 
அதையிந்த அவையினிலே சொல்லத்தான் நினைக்கிறேன்.

 சிப்பியவள் வாய்திறந்து முத்துமுத்தாய் மொழிந்தனளே..
 சத்தியமாய்ச் சொல்லுகிறேன் சக்தியெந்தன் பெயரென்றாள். 
 என்னத்தான் என்னத்தான் என்பெயரைக் கேட்டாயே 
உன்பெயரைச் சொல்லத்தான் என்னத்தான் என்றனளே. 

 என்பெயரை யான்சொல்ல ... இவள் என்னைத் தேடிவர... 
என்மனைவி பேயாக உருவெடுத்து இவளையும் என் 
உயிரையுமே ஒன்றாகக் குடித்துவிடுவாளன்றோ!
 - ஆதலினால் 

 பேதையவள் முகம்நோக்கிப் பின்வருமாறியம்புகிறேன் : 

 என்னாசைக் காதலியே! இளங்கிளியே
 - உனையன்றி 
வேறெவரை மணமுடிப்பேன்? விந்தையன்றோ உன்பேச்சு! 
 என்பெயரை நீயறிந்தால், சொல்வதற்கும் வாய்ப்புண்டு.

 நாயகனின் பெயர்தன்னை, நாயகியாள் உச்சரித்தல் 
ஆகாது என்பதுதான் மரபுமுறை! 
 - ஆதலின் அச் 
சிந்தனையை விட்டொழிக! இதுதான் என்முடிபு! 

 சாக்குப்போக்குடனே சல்லாபம் செய்தபடி 
நீக்கமற என்நெஞ்சில் நிறைந்திருந்த அவளழகைப் 
 பார்த்து இரசித்தேன்; பரவசமாய்ப் போயிருந்தேன் 
- நீர் 
கோர்த்த விழிகளுடன் நேரிழையாள் நின்றிருந்தாள். 

 என்னத்தான் உனையெந்தன் இதயத்தில் வைத்தேனே.. 
ஏதும் அறியாத எந்தனை ஏமாற்றாதே!
உந்தன்பெயர்தன்னை ஒழுங்காய்ப் பகர் என்றாள். 

 என்ன இழவிதடா! என்னும் சலிப்புடனே 
என்னைப் பிடித்த சனி ஏதோ தொலையட்டும் 
 என்று நினைத்தபடி எழுந்தேன் விரைவாக 
             - எழுந்தேன் விரைவாக 
 இதுதான் முடிவென்று சொல்லத்தான் நினைத்தேன்.. 
 ஆனால் அவள்முந்தி,தன்பேர் தமிழென்றாள். 

 ஆஹா! அன்றிலிருந் தின்றுவரை என்நெஞ்சில் 
அசையாமல் குடியிருக்கும் அவளா  நீ? - அடி! உன்னைத்
 தேடாத இடமெல்லாம் தேடியலைந்தேன் என்று
வாடாதமலர் அவளை வாரியணைத்தேன் உடனே!

 என்வீட்டில் யான் ஒன்று; என்மனைவி அவள் இரண்டு. 
இவள் வந்தால் அது மூன்று; இவளே வகை மூன்று

வல்லினமாய் மெல்லினமாய் வருடும் இடையினமாய்
 இயல் இசை நாடகமாய் எழிலின் உறைவிடமாய் 
இவள் வளர்ந்தசங்கம் அதுமூன்று!
- இவள்பெயரில் 
பறந்த கொடிகள் மூன்று, புலி மீன் வில் என்று 
இவள்பெருமை எளிதில் சொல்லும் தரமன்று. 

வாடும்பயிர் இதிலே வான்மழைக்குத் தடையேது? 
வாடாமலர் தமிழே! வந்துவிடு!  வந்துவிடு !!
வானம்வரை வளர்ந்து வையகத்து மொழிக்கெல்லாம்
தானம் கொடுத்தவளே வந்துவிடு என்னோடு!

என்றே அவளை உடன் கூட்டிவந்தேன் எனதில்லம்.
      என்றென்றுமே அவளின் வாழ்விடம் அஃதெனதுள்ளம்.
 - இதுகாறும் 
தடையின்றிவந்த தமிழாலே உங்களிடம் 
 விடைபெற்றுக் கொள்ளுகிறேன் வணக்கம் வணக்கம்.

( இது, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணம் கல்வியங்காடு சட்டநாதர் ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில்,-
எனதூரான நாயன்மார்கட்டைச் சேர்ந்த, பிரபல எழுத்தாளரும் கவிஞருமான ´சொக்கன் ஆசிரியர்`  அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் யான் வாசித்தளித்த கவிதை)

                                 


நான் வேலைசெய்த நிறுவனம், காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டு, வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்தேன் என்பதுடன்  முடிந்ததல்லவா  முதற்பாகம்?

இனி என்ன செய்யப்போகிறேன் என்று, அடுத்த தலைப்பில் சொல்கிறேன் என்றுதானே சொன்னேன்?

அடுத்த தலைப்பு  ´வெளிநாட்டுப் பயணம்`  என்பதைத்தவிர, வேறெதுவாக இருக்கமுடியும்?

ஆனாலும், இந்த வெளிநாடு செல்லும் எண்ணம், உடனடியாக எனக்கு ஏற்படவேயில்லை. 

அஃதொரு விபத்தாகவே என்வாழ்க்கையில் குறுக்கிட்டது.

மீண்டும், அந்த நிறுவனம் புதுப்பிக்கப்பட்டு, அங்கேயே தொடர்ந்து பணிசெய்யவே என்மனம்  விரும்பியது.

ஏறத்தாழ ஒரிருமாதங்கள்வரை, எவ்விதமான வருமானமும் இல்லாமலே எனது வாழ்க்கை தொடர்ந்தது..

ஏதோ ´கடனை உடனை..` என்பதுபோலக் காலம் நகர்ந்தது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

யாழ்.நகரின் நிலைமை சீராகிவிட்டது என்று அறிந்ததும், முதல்வேலையாக,  யாழ்.ஐக்கியவியாபாரச் சங்கக் கட்டடம் இருந்த இடத்தைநோக்கி ஆவலுடன் போனேன். அங்கே ஏமாற்றம்தான் எனக்கு மிஞ்சியது.

முற்றுமுழுதாக எரிந்தநிலையில், வெளிச்சுவர்கள் மட்டுமே, அதுகூட அரைகுறையாக நின்றதைக் கண்டு, மனம் சங்கடப்பட்டது.

அதன்கதைதான் முடிந்துவிட்டது; மெயின்ஸ்ரோர்ஸ்  ஆவது  இயங்குகிறதா என்று பார்ப்பதற்காக, கஸ்தூரியார்வீதிச் சந்தி நோக்கிப் போனேன்.

அந்தச் சிறிய கடையில் தொடங்கிய நிறுவனம்தான், மணிக்கூட்டுவீதிச் சந்தியில் கிளைவிட்டுப் பரந்துவிரிந்திருந்தது.

அதனால், அதை மெயின்ஸ்ரோர்ஸ்(Main stores) என்றும், இதை டிப்பார்ட்மென்டல் ஸ்ரோர்ஸ் (Departmental stores) என்றும் சொல்வோம்.

சுருக்கமாக M.S., D.S.என்பதுதான் நமது புழக்கத்திலிருந்தது.

 M.S.  இன் வாசலை அடைந்ததும் பெரிய ஆச்சரியமே காத்திருந்தது.

வழமைபோல, அங்கே  வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

" அட.. வாவா  வாவா வா.. எங்கையடாப்பா இவ்வளவுகாலமும் போனனி?"  

அதன் முகாமையாளர் வாய்நிறைய வரவேற்றார்.

" எனக்குத் தெரியாதையா இது நடக்குதெண்டு" 

" இடையில வந்து பாத்திருக்கலாமே.. எனக்கும் பில் கௌண்டருக்கு ஒரு ஆள் குறையுது. நாளைக்குக் காலம வாவன்.."

 எனக்கோ என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.  

பட்ட கடனை அடைக்கலாம் என்பதுமட்டும்தான் கண்முன்னே பளிச்சிட்டது.

பழம் நழுவிப் பாலில் விழுந்ததோ அன்றி பால் நழுவிப் பழத்தில் விழுந்ததோ என்பதுபோல, குழப்பமான மனநிலையிலிருந்தேன்.

´குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கொண்டு குடுக்கும் ` என்று, நாட்டுப்புறத்துப் பேச்சுவழக்கில் சொல்வார்களல்லவா? .

அதற்காக இப்படியா?  ஒரேநொடியில், எனது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

நன்றியுடன் எனது இசைவைத் தெரிவித்துவிட்டு வீடுவந்துசேர்ந்துவிட்டேன்.
மறுநாள் சொன்னபடி, காலை 8 மணிக்கெல்லாம் வேலையைத் தொடங்கிவிட்டிருந்தேன்.
அவரும் சொன்னபடி, மாதமுடிவில்  எனது சம்பளத்தைத் தந்துவிட்டார்.
ஆனால், போகப்போக ஒவ்வொரு வாரம் பிந்தியே கிடைத்தது. அப்படியே, நாலாவது மாதம் கிடைக்கவேயில்லை. 
" கொஞ்சம் இறுக்கமா இருக்கடாப்பா! உனக்கு மட்டுமில்லை; ஒருத்தருக்கும்... ஏன்?   எனக்கே இந்த மாதம் சிக்கல்லதான் நிக்குது. - சங்கடத்துடன் நெளிந்தார் முகாமையாளர்.
அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.
அவரோ, தலையைக் கவிழ்ந்தபடி " ஒரு இடத்திலேருந்து கொஞ்சக் காசு வரவேணும்; அது வந்த உடன தாறன். குறை நினைக்காதை. ஆ"   -  அழாத குறையாகக் கெஞ்சினார்.
அடடா! மீண்டும் வேதாளம் முருக்கமரம் ஏறுகிறதா?
அதாவது, மீண்டும் கடன்படவேண்டும்.
இப்போதுதான் புரியத் தொடங்கியது - அவருக்கு ஏன் ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று.
அவரிலும் தவறில்லை.
சிகரட், மலிபன் பிஸ்கட் , பாட்டா செருப்பு மற்றும் சவரின்பார் சவர்க்காரம் என்று, இன்னும் பல மதிப்புமிக்க பொருட்களின்  வினியோக உரிமையில் கிடைத்த வருமானம்,-
வெறும் உப்பு புளி மிளகாய் விற்றுக் கிடைக்குமா?

ஒரேயொரு சிங்களக் காடையன், பாட்டா செருப்பொன்றில்வைத்த நெருப்பு,எத்தனை குடும்பங்களை வாட்டிவதைக்கிறது...
இனியும் இதை நம்பியிருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்துகொண்டேன்.
எங்காவது, தனியார் கடைகளிலாவது வேலை தேடியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அடுத்தநாள் வேலைக்குப்போன எனக்கு, ஒரு பேரிடியே காத்திருந்தது.
இராணுவச் சீருடையில் ஒரு கும்பலே, எனது மேசையின் முன் வந்துநின்றது.
ஒரு காடையன், சிங்களத்தில் ஏதேதோ சொல்லிக்கொண்டேயிருந்தான்.
எனக்கோ எதுவுமே புரியவிலை.  நான் விழிப்பதைக் கவனித்த மற்றவன் குறுக்கிட்டு,.
" நாம இப்போ சாமா கொண்டுபோறது; மாச கடசி காசுதாறது!"    என்று கொச்சையான தமிழில் சொன்னான்.
ஆஹா!  ´நல்ல கதை; ஆனால் நீளமில்லை` என்பதுபோலத்தான் இருந்தது அவனது பேச்சு.
உள்ளூரிலேயே யாருக்கும் அவ்வளவு இலகுவாகக் கடன் கிடைக்காது.
இவன்  எங்கே பிறந்தான். எங்கே வளர்ந்தான் என்று எதுவுமே தெரியாது. எடுத்த எடுப்பிலேயே கடன் கேட்கிறானே... இது சாத்தியமானதுதானா?
அதன் பொருள், அது கடனேயல்ல... கப்பம்தான் என்பது எனக்குப் புரிந்துவிட்டது.
விடுமுறையில் ஊருக்குப் போகும்போது, ஓசியில் மளிகைச்சாமான் கொண்டுபோக வழி கண்டுபிடித்த கும்பல் அது.
இதைக் கவனித்துக்கொண்டிருந்த முகாமையாளர்,  விரைவாக அவ்விடத்துக்குவந்து, "  என்னடப்பா? என்ன பிரச்சினை?" என்று கேட்டுக்கொண்டே, எனது பதிலுக்குக் காத்திராமல், அந்தக் கும்பலைநோக்கி, தன்னுடன் வரும்படி சைகை செய்தார்.
தமது மேசைக்கு அழைத்துச் சென்றவர்,  இருக்கையில்  அமர்ந்தபடி, அவர்களது மொழியிலேயே அவர்களுடன் பேச்சுக்கொடுத்தார்.
ஓரிரு நிமிடங்கள்தான் பேசியிருப்பார்..  பேசிக்கொண்டே தொலைபேசியை அவர் கையில் எடுக்கவும், அந்தக்கும்பலிலிருந்த ஒருவன், நஹி நஹி என்று அலறினான்.
தமக்குள் ஏதோ குசுகுசுத்துவிட்டு, அப்படியே நடையைக் கட்டிவிட்டார்கள்.

 

Saturday, April 22, 2023



அன்று மதியம் ஒருமணியிருக்கும்.
 எமது வியாபாரநிலையத்துடன் சேர்ந்தாற்போல் அமைந்திருந்த  எரிபொருள் நிரப்புநிலையத்தின் அருகில், உதிரிப்பாகங்கள் விற்கும் கடையின் மேல்மாடியில், ஊழியர்கள் சிலர், உணவருந்திக்கொண்டிருந்தோம். 
அந்த எரிபொருள் நிரப்பு நிலையமும், உதிரிப்பாகங்கள் விற்கும் கடையும், நான் வேலைசெய்த வணிக நிறுவனத்துக்குச் சொந்தமானதுதான். 
அதைநாம் Motor Department என்று சொல்வோம். 
ஆம்! நான் வேலைசெய்தது: பழம்பெரும் நிறுவனமான ´யாழ்ப்பாணம் ஐக்கியவியாபாரச்சங்கம்`தான்! 

´பழம்பெரும் நிறுவனம்` என்றா சொன்னேன்?  ஆம்! அஃதுண்மைதான்! மாணவர்களின் பாடத்திட்டத்திற்கூட, இந்த நிறுவனத்தின் பெயர் வரும். அதாவது, 1925 ம் ஆண்டளவில்,´தனியார் யாருமே ´ஐக்கிய` எனும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது` என்று இலங்கையில் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள்.
அதை எதிர்த்து, இந்நிறுவனம் வழக்குத்தொடர்ந்தது. அது முன்வைத்த வாதம்: எமது நிறுவனம் தொடங்கியது 1917ம் ஆண்டு. எனவே நமக்கு இச்சட்டம் செல்லாது என்பதுதான்.
இது நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்நிறுவனத்துக்குமட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது என்பது  வரலாறு.

மதிய இடைவேளையில், அங்கே உணவருந்திக்கொண்டிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா?
ஏறத்தாழ, அனைவரும் உணவருந்தி முடிந்தநிலையில்,எங்கிருந்தோ பெரியதொரு வெடிச்சத்தம் கேட்டது. அனைவரும் அதிர்ந்துபோனோம். 
நான் சக ஊழியர்களிடம் சொன்னேன் " இது சாதாரணமானதில்ல.. பெரிய பிரச்சினை வெடிக்கப்போகுது" என்று. 
போராளிகளுடன் எனக்கிருந்த தொடர்பு, அனைவருக்கும் நன்கு தெரியும் என்பதால்,உடனேயே அக்கட்டத்தைவிட்டு அனைவரும் வெளியேறினர்.
நான்மட்டும், எமது நிறுவனம் அமைந்திருந்த, மணிக்கூட்டுவீதி ஆஸ்பத்திரிவீதிச் சந்திவரை போய், இருபுறமும் சற்றே எட்டிப்பார்த்தேன்.
பருத்தித்துறைவீதிச் சந்தியிலிருந்து, ஒரு இராணுவத்தான் கண்டமேனிக்குச் சுட்டபடி ஓடிவந்துகொண்டிருந்தான்.
எனக்குப் புரிந்துவிட்டது; சிங்கள மகாவித்தியாலயப் பக்கம்தான் குண்டு வெடித்திருக்கிறது.
உடனடியாகவே நான் Motor Department  இற்கே திரும்பி, ஊழியர்களை எச்சரித்துக்கொண்டே, அடுத்து இருந்த நமது சேமிப்புக் களஞ்சியப் பக்கமாக ஓடினேன்.
அதை நாம்   Stores என்றுதான் சொல்வோம்.
நிலைமையைப் புரிந்துகொண்ட அதன் முகாமையாளர், கதவைத்திறந்து, அனைவரையும் உள்ளே போக அனுமதித்தார்.
 அனைவர் முகத்திலும் ஒருவிதமான அச்சம்கலந்த பரபரப்பு.
அனைவரையுமே மேல்மாடிக்குச் செல்லுமாறு முகாமையாளர் பணித்தார். அங்கேதான் பொதுமுகாமையாளர் உணவருந்தி ஓய்வெடுப்பது வழக்கம். ஆனால் அங்கு பொதுமுகாமையாளரைக் காணவில்லை.
சுற்றுமுற்றும் பார்த்ததில், அங்கேயிருந்த மேசையொன்றின் கீழே அவர் பதுங்கிக்கொண்டிருந்தார்.
சின்னஞ்சிறிய மேசையின் கீழே, பென்னம்பெரிய‌ உருவம் கொண்ட அவர், தன்னைத்தானே சுருட்டிக்கொண்டு இருந்தகோலம், சிரிப்புக்கிடமாக இருந்தாலும், எவர் முகத்திலும் சிரிப்பு இல்லை.
அனைவருமே மிரட்சிநிறைந்த விழிகளுடன், செய்வதறியாது திகைத்துநின்றனர்.
நான்மட்டும்,வெளியில் என்னதான் நடக்கிறது என்று அறியும் ஆவலில், ஆஸ்பத்திரிவீதிப் பக்கமிருந்த  சாளாரத்தினூடாக எட்டிப்பார்த்தேன்.
தூரத்தில், புயல்வேகத்தில் இராணுவ வண்டியொன்று வந்துகொண்டிருந்தது. மேலும் உற்றுப்பார்த்தேன்.
உள்ளே ஏராளம் இராணுவத்தினர். சாலையின் இருமருங்கிலும், மாறி மாறிச் சுட்டுக்கொண்டே வந்தனர். 
அதில் ஒருசிலர், அருகிலிருந்த கட்டடங்களுக்கு,  மேல்நோக்கியும் சுட்டனர்.
அதைத்தொடர்ந்து, ஒரு தொகுதி இராணுவத்தினர், ஆஸ்பத்திரி மதிலோரமாக‌,  ஆஸ்பத்திரியின் உள்நோக்கிச்  சுட்டபடி ஓடிவந்துகொண்டிருந்தனர்.
ஒருவேளை, போராளிகள் அங்கு  நிலைகொண்டிருக்கக்கூடும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
அவர்கள் மேல்நோக்கியும் சுடுவதைக் கண்ட யான், சடாரென்று, சாளரத்தின் கண்ணாடிக் கதவுகளைச் சாத்திக்கொண்டேன்.
ஏனெனில், மேல்மாடியிலிருக்கும் நம்மையும் இது பாதிக்கக்கூடும்.. இல்லையா?
கதவு சாத்தும் ஒலியைக் கேட்டுத் திரும்பிய பொதுமுகாமையாளர், கோபத்தின் உச்சிக்கே போய் " விடுப்புப் பாக்க விரும்பினா, றோட்டில போய்நிண்டு பாக்கலாம்."  என்று கத்தினார்.
நான் அவருக்கு நிலைமையைப் புரியவைத்தேன்.
நான் சொல்லிமுடித்த மறுகணமே, அந்தச் சாளரத்தின் கண்ணாடிகள் சில நொருங்கிவிழுந்தன. 
கவச வாகனமொன்று நமது கட்டடத்தைக் கடந்துபோகும் சத்தம் தெளிவாகவே கேட்டது.
இனியும் அந்தமேசை தனக்குப் பாதுகாப்பளிக்காது என்பதைப் புரிந்துகொண்ட பொதுமுகாமையாளர், மிகுந்த சிரமத்துடன், அதனுள்ளிருந்து தன்னைத்தானே இழுத்தெடுத்தார்.
முழந்தாளிட்டுத் தரையில் அமர்ந்தபடி, கண்களை மூடி, தியானம் செய்வதுபோல, யோசனையில் ஆழ்ந்தார்.
ஓரிரு நிமிடங்களில் தியானம் கலைந்த அவர்,அந்த மேசையிலேயே ஊன்றி எழுந்தபடி, " கீழை ஸ்ரோர்சுக்குப் போய், பின்பக்கமா தப்ப வழியிருக்கோ எண்டு பாப்பம்"  என்றார்.
மீண்டும் சேமிப்புக் களஞ்சியத்துக்கே வந்துசேர்ந்தோம். 
இப்போது, கதவைத்திறந்து நிலைமை சரிதானா என்று பார்க்கவேண்டும். ஆனால், அனைவருமே தயங்கினர்.
திற‌ந்தவுடனேயே சூடுவிழுந்தால்...?  தற்கொலைப்படையாக மாற, யாருமே முன்வரவில்லை.
அங்கிருந்த வயதான ஊழியரொருவர், மிகவும் கவனமாக, இலேசாகக் கதவைத்திறந்து பார்த்தார்.
அப்படியே நிதானமாக, மீண்டும் சாத்திக்கொண்டார்.
" வெளியில ஆரையோ போட்டு அடிக்கிறாங்கள்"  
ஆர்?
வேற ஆர்..?  ஆமிக்காறங்கள்தான்!
தமது தோழர்கள் கண்முன்னே சிதறியதைக் கண்டதால் ஏற்பட்ட கோபத்தை, ஏதுமறியாத அப்பாவி வழிப்போக்கனில் காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.
இப்போது உள்ளே எங்கும் மயான அமைதி.. 
யார் முகத்தையும் பார்க்கும் நிலையில் யாரும் அங்கு இல்லை.
ஆனால்,  நான்மட்டும்  அங்கிருந்த மேசைமீது ஏறியிருந்தபடி சிந்தனையில் ஆழ்ந்தேன்.
திடீரென்று மின்னல்போல, ஒன்று நினைவுக்கு வந்தது.
நான் வேலைசெய்த மேசையின் இழுப்பறையில், ( drawer ) எனது பணப்பையை ( wallet) எடுக்கமறந்துவிட்டேன். 
அதை எடுப்பதற்காக, உள்வழியினூடாகச் சென்றேன். 
எடுத்துக்கொண்டு திரும்பியபோதுதான் கவனித்தேன்: பாட்டா செருப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்த கண்ணாடியை, இராணுவத்தான் ஒருவன், துப்பாக்கியினாலேயே உடைத்துக் கொண்டிருந்தான்.
 அப்படியே பக்கவாட்டில் பதுங்கியபடி,  அவனைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன்.
உள்ளே இருட்டாக இருந்ததால், அவன் கண்களுக்கு நான் புலப்படவில்லை.
காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாட்டா செருப்புகளை எடுத்து, மிகுந்த சிரத்தையுடன், ஒவ்வொன்றாகக் கொளுத்தி உள்ளே வீசினான்.
முதலில், அந்தப்பிரிவின் முகாமையாளர் இருக்கையில் கிடந்த கோப்புகளில் (Files) தீ, பற்றிக்கொண்டது.
இன்னும் சிறிதுநேரம், அங்கு நான் தாமதித்திருந்தால்,  அவன் பற்றவைத்த நெருப்பின் ஒளியிலேயே என்னைக் கண்டிருப்பான். 
பிறகென்ன?  உள்ளேயிருந்த அத்தனைபேருமே, அந்த ஜெகஜோதியில் கலந்து நேரடியாகவே சொர்க்கத்துக்குப் போயிருப்போம்.
 வேறென்ன?   ஜீவசமாதிதான்!
இவ்வளவையும் பார்த்த நான், அங்கிருந்து மீண்டும் சேமிப்புக் களஞ்சியத்துக்கு வந்து, நடந்ததை அங்கிருந்தவர்களுக்குத் தெரிவித்தேன்.
இதைக் கேட்டதும், அங்கிருந்த அரைவேக்காடு ஒன்று, தீயணைக்கும் கருவியைத் ( fire extinguisher) தோளில் தூக்கியபடி கிளம்பியது.
" எங்கயப்பா போறை?"  முகாமையாளர் அதட்டும் குரலில் கேட்டார்.
 " நீ இப்ப அணைக்கப்போக, உள்ள ஆக்கள் நிக்கினம் எண்டு அவங்களுத் தெரிஞ்சல்ல போயிரும். விசர்வேலை பாக்காம வை உதில  கீழ"  
கிசுகிசுகும் குரலில், ஆனால் கடுமையான தொனியில் சொன்னார்.
ஒருபக்கம் எரியத்தொடங்கிவிட்டது என்பது தெரிந்தபின், அனைவர் முகத்திலும் மரணபயம் தொற்றிக்கொண்டது. உள்ளே இருந்தாலும் எரிந்து சாகத்தான் போகிறோம்.
வருவது வரட்டும் எனும் மனநிலையுடன், கதவைத் திறந்து வெளியேற அணியமானோம்.
மீண்டும் கதவைத்திறக்கும் துணிவு, அதே முதியவருக்குத்தான் வந்தது.
" ஒண்டையும் காணேல்ல.. ஏதோ கடவுள்ள பழியைப் போட்டு ஓடித்தப்புவம்.. வேற வழியில்ல..."   என்றவர், இன்னும் இரண்டடி வெளியில் போய். நன்றாகப் பார்த்துவிட்டு, சரி என்பதுபோலத் தலையை ஆட்டிக்கொண்டே மணிக்கூட்டுவீதிப்பக்கம் போகமுயன்றார்.
" அண்ணை! உதால போறது டேஞ்சர். உவங்கள் உங்கினேக்கதான் சுத்தித் திரிவாங்கள். எதுக்கும், பின்னால சைக்கிள் பார்க் பண்ணுகிற இடத்தால மதிலேறிக் குதிச்சுப் போவம்."  
சக ஊழியரொருவரின் யோசனையை ஏற்றுக்கொண்டு, அனைவரும் பின்பக்கமாக ஓடினோம்.
அந்த மதிலோ, இரண்டு மீற்றருக்கும் சற்றே அதிகமான உயரம்.
இளைஞர்கள் அனைவரும், தாவிக்குதித்து மதில்மேலேறிக்கொண்டோம். ஒருசிலரை, நானும் இன்னும் சில இளைஞர்களும் சேர்ந்து தூக்கி ஏற்றிவிட்டோம்.
அடுத்த பக்கத்தில் ஒரு தனியார் கல்விநிலையம் இருந்தது. அங்கே,மாணவர்களுக்காகப் போடப்பட்டிருந்த இருக்கைகளில்  அமர்ந்து, சற்றே மூச்சுவாங்கினோம்.
" எட தம்பிமார்! ஒரு கைகுடுங்கோடா..."
மறுபக்கத்திலிருந்துவந்த குரலைக்கேட்டுத் திடுக்கிட்டுப்போய்,  நானும் இன்னுமொருவருமாக மதிலில் ஏறிப்பார்த்தோம்.
அந்த முதியவர்தான் நின்றுகொண்டிருந்தார்.
" எங்கயண்ணை இவ்வளவும் நிண்டனியள்?" 
" கால்ல கல்லடிச்சுப் போட்டுதடாம்பி; அதுதான் இரத்தம் ஓடாமக் கையாலை பிடிச்சுக்கொண்டு நிண்டனான்"
அவரது கால் பெருவிரல் நகம் கிழிந்திருந்தது. அதிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டேயிருந்தது.
" சரி  சரி.. வாங்கோ முதல்ல..."
அவரது கையைப்பிடித்து, மதிலில் ஏற்றிவிட்டோம். ஏறிய மறுகணமே, அதே இடத்தில் மீண்டும் விழுந்துபோனார்.
 காலில் கல்லடிபட்ட வலியின் காரணமாக இருக்கலாம்.
இதைச் சற்றும் எதிர்பாராத நாம், ஏனையவர்களையும் உதவிக்கு அழைத்து, அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கி, மறுபக்கத்தில் இறக்கிவிட்டோம்.
காயம்பட்ட அவரது கால், நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வீங்கத்தொடங்கிவிட்டது.
விழுந்ததில், ஒருவேளை எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ என்னவோ...
´பட்டகாலிலே படும்`  என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்!
 தெருவைக்கடந்தால் நேரெதிரே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை. 
        (Jaffna teaching hospital)   அதாவது, பெரியாஸ்பத்திரி. 
ஆனால், தெருவைக் கடப்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா? 
அவரோ, வலிதாங்க முடியாமல் முனகிக்கொண்டேயிருந்தார்.
இப்படியே, ஒருமணிநேரம் கடந்துவிட்டது.
இப்போது வெளியில், தமிழ்ப்பேச்சுக் குரல்கள் கேட்டன. 
இராணுவத்தின் நடமாட்டம் இல்லையென்பதை அஃது உணர்த்தியது.
 அவசர அவசரமாக அந்த முதியவரைத் தூக்கிக்கொண்டுபோய்,சக ஊழியர்களின் உதவியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். 
அப்படியே,ஆஸ்பத்திரி வாசலில்நின்று, அண்ணாந்து பார்த்தேன்.

அந்தக் கட்டடத்தின் ஒருமூலை மட்டும்தான் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. 
பஞ்சபூதங்களில் இரண்டு பூதங்கள், கூட்டுச்சேர்ந்து,  இராணுவத்தின் அட்டூழியத்துக்குத் துணைபோய்க் கொண்டிருந்தன.
அக்கினிபகவானுடன் வாயுபகவான் கைகோர்த்துக்கொண்டார்.
கண்ணும் கருத்துமாக, அந்த மூலைநோக்கியே அக்கினியை இழுத்துச்சென்றார்.
வாயுபகவானுக்கு அந்த மூலையுடன் ஏதோ பழையபகை போலும்.
ஏனைய பூதங்களில், ஆகாயம் பூமி என இரண்டுமே, மேலும் கீழும் நின்று வேடிக்கை பார்த்தன.
கடைசியாக உள்ள, ஆபத்பாந்தவரான, அந்தப் பூதத்தைமட்டும் கடைசிவரை காணவேயில்லை
அவர்தான் அந்த வருணபகவான். அவரைப்பற்றித்தான் நமது வள்ளுவப்பெருந்தகை அன்றே சொல்லிவிட்டாரே!

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. (அதிகாரம்:வான் சிறப்பு. குறள் எண்:15)

அவர் பெய்தும் கெடுப்பார்; பெய்யாமலும் கெடுப்பார்.
இப்போது, பெய்யாமல் கெடுக்கிறார். அவ்வளவுதான்!
அந்தாள், அன்று கண்ணுக்கெட்டியதூரம்வரை தென்படவேயில்லை.
அவர்களுக்குள் ஏதோ ஒப்பந்தம் போலும்.
ஒருவேளை, இராணுவத்திடம் கையூட்டு வாங்கிருப்பாரோ? 
அவருக்கும் குடும்பத்தில் என்னென்ன பிரச்சினையோ?
அதெல்லாம் சரிதான்...
பஞ்சபூதங்கள் அத்தனையிலுமே, இறைவன் இருக்கிறாராமே...

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் 
போக்கிலன் வரவிலன் என நினைப்புலவோர்......

பக்திரசம் சொட்டச்சொட்ட, அழகுதமிழில், ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு, மணிவாசகப்பெருமான் அருளிய வரிகளல்லவா இவை!
அவர் குறிப்பிட்ட ,அதே பூதங்கள்தானா இவை? இருக்காது..
அன்பேயுருவான இறைவன், அட்டூழியத்துக்குத் துணைபோவாரா? 
 ஆயிரம் கேள்விகள் என்மனதில் அலைமோதின.
ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டதல்லவா ?
ஒருவேளை அது காலாவதியாகிவிட்டிருக்கக்கூடும்.
விரக்தியின் விளிம்புக்கேபோய், இறைவனையே எள்ளிநகையாடியது என்மனம்.

அங்கே அனைத்துப் பூதங்களும் ஒன்றிணைந்து, நமது நிறுவனத்தை ஒருவழி பண்ணிக்கொண்டேயிருந்தன.

அப்படியே மேல்மாடிக்கும்  பரவிய தீயில் , அங்கிருந்த தேங்காயெண்ணெய்ப் பீப்பாய், கோலாகலமாக‌ச் சீறிக்கொண்டே எரிந்தது. 
வேறுசில பொருட்கள், வாணவேடிக்கைபோல, வண்ணமயமாக எரிந்தன. ஒருசில பொருட்கள் வெடித்துச் சிதறின.
பத்தாண்டுகளாக என்னை வாழவைத்த நிறுவனம், எனது கண்முன்னேயே சாம்பலாகிக் கொண்டிருப்பதைக் கையறுநிலையில் பார்த்து வெதும்பினேன்.
 தொடர்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருக்க என்னால் முடியவில்லை. என்னையும் அறியாமல் எனது இதயம் அழுதது. நெஞ்சு கனத்தது.   
தாங்கமுடியாமல், இருகைகளாலும் முகத்தைப் பொத்தியபடி, குமுறி அழுதேவிட்டேன்.
ஓரிரு நிமிடங்கள்வரை அழுதுகொண்டேயிருந்தேன். 
பின்னாலிருந்து  எனது தலையை யாரோ தடவுவதுபோல இருந்தது. 
திரும்பிப் பார்த்தேன்.
" சரி தம்பி! கவலைப்படாத கவலைப்படாத... இனி என்ன செய்யிறது? 
இப்ப வையெர் பிரிகேட்டுக்கு (fire brigade) அடிச்சாலும் வரமாட்டாங்களடா பயந்து.."   யாரோ ஒரு பெரியவர் எனக்கு ஆறுதல் சொன்னார்.
என்னைச் சுற்றிலும் ஒரு சிறிய கூட்டமே நின்றிருந்தது.
" தம்பி நீர் உங்க வேலைசெய்யிறீரோ?"  
" ஓமோம்! இவரை நான் செக்கிங் கௌண்டரில பாத்திருக்கிறன்."  
கேள்வியும் பதிலும் அங்கிருந்தே வந்தன.
இப்போது எனது மிதிவண்டியை எடுத்தாகவேண்டும். 
இல்லையேல், எப்படி யான் ஊர்போய்ச் சேர்வது? 
மிதிவண்டிகள் நிறுத்தும் இடத்தைநோக்கி விரைந்தேன். 
நல்லவேளையாக, இன்னமும் அந்தப் பகுதிக்குத் தீ பரவவில்லை. 
புத்தம்புதிய எனது மிதிவண்டி, தன்னந்தனியாகத் தனது எசமான் வரவைக் காண‌த் தவமிருந்தது.
பூட்டைத்திறந்து அதை எடுத்துக்கொண்டு கிளம்பும்போதுதான் கவனித்தேன்: முன் சக்கரம் முழுமையாகக் காற்றுப் போய்விட்டிருந்தது.
என்னைக் காணவில்லையே என்று அது,  ஏக்கப்பெருமூச்சு விட்டிருக்கும்போலும்...
எனக்கோ மிகவும் சோர்வாக‌ இருந்தது. 
கடைகளெல்லாம் பூட்டப்பட்டிருந்ததால், தேநீர்கூட அருந்த வழியில்லை.
இந்தக் களைப்புடன், மிதிவண்டியை வேறு தள்ளிக்கொண்டுபோகவேண்டும்.
விதியை நொந்துகொண்டேன்.  
அதைத்தவிர, எதைத்தான் செய்யமுடியும்?
 மிதிவண்டியின் கைபிடியைக் கையால் ஏந்தி,  காற்றுப்போயிருந்த சக்கரத்துக்கு நோகாதபடி, இழுத்துக்கொண்டே ஆஸ்பத்திரிவீதி நோக்கி நடந்தேன்.
அங்கே ஒருசில இளைஞர்கள், தீ பரவாத இடங்களிலுள்ள பொருட்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். 
அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது, அவர்கள் போராளிகள் என்று.
 அவர்கள் குண்டு வைப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வ‌தில்லை; மாறாக, அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுபவர்கள் என்பது பரவலாக அனைவரும் அறிந்த விடயம்தானே! 
அதேவேளை, அங்கு கூட்டமாகவந்த நடைபாதை வியாபாரிகள்சிலர், இவர்கள் மீட்ட பொதிகளைத் தோளில் தூக்கிக்கொண்டு நடக்கத்தலைப்பட்டனர்.
" ஏய்! எங்கை கொண்டு போற?" 
"  நீ எங்க கொண்டுபோவியோ அங்கதான்"  
அந்த நடைபாதைவியாபாரி, நடந்துகொண்டே, எள்ளலாகப் பதிலளித்தான்.
வெகுண்டுபோன போராளி, புலியாகவே மாறி, அவன்மீது பாய்ந்தான்.
 அந்த இடமே, ஒரு மினி யுத்த களமாக மாறிப்போனது.
சிறிதுநேரக் கைகலப்புக்குப்பின், நடைபாதைவியாபாரிகள் நடக்க நேரமின்றி ஓட்டம்பிடித்தனர்.
இன்னுஞ்சிறிது தூரத்தில், மிதிவண்டிகளை, வலித்து வலித்து மிதித்துக்கொண்டு, இந்த நோக்கத்தில்வந்த இன்னுமொரு கும்பல், இவர்களின் நிலைமையைக் கண்டதும்,  about turn என்பதுபோல, மிதிவண்டிகளைத் தூக்கித் திருப்பிக்கொண்டு, அதே வேகத்தில் ஓடிமறைந்தது.
இந்தக் களேபரத்தினால், போராளிகளின் மீட்பு முயற்சியும்  பிசுபிசுத்துப்போனது. 
இனியும், அங்கு நின்றால், அந்த ந.பா.வியாபாரிகளே இராணுவத்தை அழைத்துக்  காட்டிக்கொடுக்கவும்கூடும் என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

இப்போது,யான் வீட்டுக்குப் போய்ச்சேரவேண்டுமானால், எனது மிதிவண்டிக்கு உயிர்கொடுத்தாகவேண்டுமே....
மிட்டாஸ்கடைச் சந்தியிலுள்ள,  எனது உறவினரொருவர் மிதிவண்டி திருத்தும் கடையைநோக்கி நடந்தேன்.
ஏறத்தாழ, இரண்டு கிலோமீற்றர் தூரம்வரை நடந்துபோய்ப் பார்த்தால், அதுவும் பூட்டியிருந்தது.
சரி.. இனி என்ன செய்யலாம்.. வீடுவரை நடக்கவேண்டியதுதான் என்று சலித்துக்கொண்டே நடந்தேன்.
இந்தநிலையில்,  போட்டிருந்த செருப்பும் வழியில் அறுந்துபோனது.
அடடா! இன்னலுக்கு மேல் இன்னல்!
` இன்னலும் யானும் பிறந்ததொரு தினத்திலறிவாய்`  
மட்டுநகர் தந்த தமிழ்க்கருவூலம், சுவாமி விபுலானந்த அடிகளார் எழுதிய , யூலியஸ் சீசர் தன்மனைவிக்குச் சொல்வதாக வரும்  கவிதை வரிதான் நினைவுக்கு வந்தது.
மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.
பாட்டா செருப்புக்கு, வடமாகாணத்துக்கே வினியோக உரிமைபெற்ற நிறுவனத்தின் பணியாளரான யான், அறுந்த பழைய செருப்பைக் கையில் தூக்கியபடி  அன்று, ஒருவழியாக வீடுவந்து சேர்ந்துவிட்டேன். 
ஆனால், எனது வாழ்வாதாரம்தான் சாம்பலாகிவிட்டதே!
இனி என்ன செய்யப்போகிறேன்?
அடுத்த தலைப்பில் சொல்கிறேனே...