எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Wednesday, June 16, 2010

நீதியின்பால் இக்பால்




சபாஷ் இக்பால் ! சபாஷ் !
தமிழுக்குக் கைகொடுத்த தங்கள் செய்லுக்காக, தமிழுணர்வாளர்கள் தலைவணங்கிநிற்கிறோம்.
’நீதிக்குத்தலைவணங்கு’ என்ற, மக்கள்திலகத்தின் கூற்றுக்கிணங்க நீங்களும் ஈழவரலாற்றில் இடம்பெற்றேவிட்டீர்கள்!!

கடந்த 10.06.2010 அன்று, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் இல் நடைபெற்ற ‘ போருக்குப்பின்னான இலங்கையின் முரண்பாடுகள்(Srilanka in the Post – Conflict Situation) எனும் தலைப்புடன் நிகழ்ந்த, விசேட கலந்துரையாடலொன்றில், வழக்கமான
பொய் புளுகு மூட்டைகளுடன் , கேலியும் கிண்டலும் கலந்து அட்டகாசம் செய்துகொண்டிருந்த சிங்களக் கும்பலொன்றை, மண்கௌவச்செய்திருக்கிறார் இந்த M.C.M.இக்பால் எனும் மகத்தான மனிதர்.

தமிழர்கள் சார்பாக, BTF (British Tamil Forum) எனப்படும் ‘பிரித்தானிய தமிழர் பேரவைத்தலைவர் திரு, சுரேன் சுரேந்திரன் அழைக்கப்பட்டிருந்தும், என்ன காரணத்தினாலோ அவர் அங்கு சமுகமளித்திருக்கவில்லை.
இதனால்,கேட்பார்மேய்ப்பார் இல்லாமல்,சிங்களர் சார்பில் அழைக்கப்பட்டிருந்த, திரு.டலஸ் விக்கிரமரட்ன என்பவர் கதாநாயகவேடங்கட்டத்தொடங்கியிருக்கிறார் அங்கு.
போதாக்குறைக்கு, பெல்ஜியத்துக்கானதும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கானதுமான , இலங்கைத்தூதர் திரு.ரவிநாத் ஆரியசிங்கே என்பவரும் அவருடன் கூட்டுச்சேர்ந்துகொண்டு,தமிழர்கள்மீது சேற்றைவாரிஇறைத்திருக்கிறார்.
இவர்கள் இருவருமே வாயடைத்துநிற்கும்படியாக. தகுந்த ஆதாரங்களுடன் ,தமிழீழத்தின் உண்மைநிலையை அங்கு போட்டு உடைத்திருக்கிறார்
திரு M.C.M.இக்பால் அவர்கள்.
சிங்களரின் உளறல்களும், இக்பால் அவர்களின் பதிலும் :-
தமிழ், அரசகரும மொழியாகப்பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ; இதனால் அங்கு( ஸ்ரீலங்காவில்) மொழிப்பிரச்சினையே கிடையாது.
*மொழி உரிமை என்பது வெறும் காகிதத்திலேயே உள்ளது . இலங்கையில் உள்ள தமிழர் எவராவது ஒரு கடிதத்தை அரசாங்க திணைக்களத்திற்கு தமிழில் எழுதி அதற்கான பதிலைத் தமிழிலும் பெற முடியுமா?
இதை அரசபிரதிநிதியைப்பார்த்து ஒரு சவாலாகவே திரு.இக்பால் கேட்டிருந்தார்.அதற்குப்பதிலளித்த அரசபிரதிநிதி:
அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ; விரைவில் தமிழிலேயே பதிலைப் பெறக்கூடிய நிலை வரும்’ என்று பாதி பொய் | பாதி உண்மையாகப்பதிலளித்தார்.
அது என்ன? பாதி பொய் - பாதி உண்மை.....
‘அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது’ என்பது பொய்!
ஆனால், ’விரைவில் தமிழிலேயே பதிலைப்பெறக்கூடியநிலை வரும்’ என்பது உண்மைதானே! அதாவது. தமிழீழத்தில்!
(அந்தச் சிங்களனின் வாய்க்குள் சர்க்கரையல்ல... எதுபோட்டாலும் தகும்.)
மேலும் ,தொடர்ந்த அதிரடிப்பதில்கள் :
வடக்கு கிழக்கிற்கு வெளியே பெருமளவான தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். தலைநகர் கொழும்பில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கையே அதிகம்.
*அவ்வாறானால் ஏன் கொழும்பிலுள்ள இரண்டு பிரதான உதவி அரச அதிபர் காரியாலயங்களுமே தமிழில் பணியாற்றுவதில்லை? தமிழ் பேசும் மக்கள் அங்கு தமது கருமங்களை ஆற்றுவதில் இடர்ப்படுகின்றனர். ஏனெனில் அந்த மக்களுக்குச் சிங்களம் தெரியாது. அதேவேளை அந்த உதவிஅரசஅதிபர்அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குத் தமிழ் தெரியாது.
தமிழர்களுக்குஎதிராகநடந்தகலவரத்தைஆராயநியமிக்கப்பட்ட சன்சோனிக்கமிசன், நடைபெற்ற கலவரத்துக்கு அரசாங்கத்தையோசிங்களவர்களையோ குற்றம் சாட்டவில்லை.
* சன்சோனிக்கமிசனின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்வதை அன்றைய அரசாங்கம் விரும்பவில்லை என்பதால் சன்சோனிக்கமிசன் அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆக, நடைபெற்ற கலவரத்திலிருந்து சிங்களவர்களையோ, அரசாங்கத்தையோ சன்சோனிக்கமிசன் விடுவித்துவிட்டது என்று எப்படிக்கூறமுடியும்?
கதிர்காமர் போன்ற முக்கியபிரமுகர்களை விடுதலைப்புலிகள் கொன்றனரே!
* கதிர்காமர் கொலைவழக்கு விசாரணை இன்னமும் முடிவடையவில்லை. எனவே யார் கொன்றார்கள் எனத் தெரியவராத நிலையில் இவ்வாறு அறிக்கையிடுவது பொருத்தமற்றது. உதலகம ஆணைக்குழுவிற்கு முன்னால் இருந்த மிகமுக்கியமான மனிதஉரிமைமீறல் விசாரணைகளில் இதுவும்ஒன்று. ஆனால், கதிர்காமர்கொலை உட்பட பலமுக்கியமான விடயங்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அவ்வாணைக்குழு, எந்த விடயம் தொடர்பாகவும் தனது விசாரணைகள் எவற்றையும் பூர்த்தியாக்க முன்னரேயே அரசாங்கத்தால் கலைக்கப்பட்டது
சிறிலங்காவினுடைய அரசர்களுடைய பண்புகள் உயர்ந்தது ; குறிப்பாக துட்டகைமுனு எனும் சிங்கள மன்னன் போரில் கொல்லப்பட்ட தனது எதிரியான எல்லாளனுக்கு நினைவுத் தூபி கட்டினான். சிங்கள மக்களது மற்றும் ஆட்சியாளர்களது பண்பும் அதனடியானது.
* பல தமிழ்மன்னர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஆண்டார்கள் .
இலங்கையை இறுதியாக ஆண்ட பல தமிழ்மன்னர்கள் கண்டியிலிருந்தே ஆட்சிபுரிந்தார்கள் . அவர்கள் புத்தருடைய புனித தந்தத்திற்குப்
பாதுகாவலர்களாக இருந்தார்கள்

இலங்கைக்கு என்றொரு வரலாற்று ரீதியான நீண்ட ஜனநாயகப்பாரம்பரியம் உண்டு.
* இலங்கை தனது சுதந்திரத்திற்குப் பிற்பட்ட வரலாற்றுக் காலத்தில் பெரும் காலத்தை அவசரகாலச்சட்ட நிலைகளுக்குக் கீழேயே கழித்திருக்கிறது.அவசரகாலச்சட்டம் சாதாரண சட்டங்களை வலுவற்றதாக்கி விட்டது. இக்காலகட்டங்களில் மக்களுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டு விடுகிறது . நாட்டின் ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டை பரிபாலிப்பதாக சத்தியப்பிரமாணம் செய்தே பதவி ஏற்கிறார். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 13 மற்றும் 17வது திருத்தங்களை அவர் மீறி விட்டுள்ளார். சாதாரணமாக இலங்கையில் ஜனநாயகம் என்பதே நடைமுறையில் இல்லை எனலாம் .

இடம் பெயர்ந்த மக்களில் பெருமளவானோர் மீள்குடியமர்த்தப்பட்டு விட்டனர். அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* இந்தத் தகவல் தவறானது. பெருமளவான இடம் பெயர்ந்த மக்கள் கடும் துன்பமுறுகின்றனர். அவர்களுடைய கிராமங்களில் அவர்களுக்கு வாழ்க்கை இல்லை என்றாகி இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட பணம் இன்னமும் வழங்கப்படவில்லை. பெருமளவான வீடுகளும் கட்டிடங்களும் சிதைவடைநது போய் இருக்கின்றன. கூடவே தெருக்களும் பாலங்களும் பாடசாலைகளும் வைத்தியசாலைகளும் நீர்விநியோகமும் சிதைவடைந்து போய்உள்ளன. ஆக, அவர்கள் ஒரு இக்கட்டான அவலத்துக்குரிய நிலைமைக்குள்ளேயே வாழ்கிறார்கள்.
அவ்வளவுமே ‘நச்’ என்ற பதில்களாக இல்லையா? ஆதாரங்களுடன் கொடுக்கக்கூடிய பதில்கள் அத்தனையையுமே, மிகத்தெளிவாகக் கொடுத்திருக்கிறார் திரு.இக்பால்.
திரு.சுரேன் சுரேந்திரன் போயிருந்தாலே, இவ்வளவு கச்சிதமாக அமைந்திருக்காது.வாதம் வேறுதிசையில் திரும்பினாலும் திரும்பியிருக்கும்.
இதனாற்றான், திரு சுரேன் சுரேந்திரன் தவிர்த்துக்கொண்டாரோ என்னமோ?

ஏற்கெனவே, அல்ஜசீராவுக்கு மகிந்தா வழங்கியசெவ்வியில் குறிப்பிட்டிருந்த_ ‘புலம்பெயர்தமிழர் நாடுதிரும்பமாட்டார்கள் ‘ என்று பாடிய பாட்டைத்தான் இங்கும் பாடியிருக்கிறார்கள் அந்தப்பராரிகள்.
ஆனால், திரு.இக்பாலைப்பொறுத்தவரை, இவர்கள் எதுவுமே வாய்திறக்கமுடியாது; ஏனெனில்,

இவர் இலங்கையின் சிவில் நிர்வாக அதிகாரியாக 40 வருடங்கள் பணியாற்றியவர். முன்னாள் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் வெளிவிவகார சேவையில் பணியாற்றியவர். மேல்மாகாண சபையின் ஆளுநர் சர்வானந்தாவின் செயலாளராக_ முன்னாள் ஜனாதிபதி அமைத்த காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழுவின் செயலாளராக _ பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நியமித்த நிபுணத்துவ ஆணைக்குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றியவர். இப்போது எழுத்தாளராகவும், ஆய்வாளராகவும் இலங்கையின் உள்நாட்டுமுரண்பாடுகள் குறித்து எழுதியும் வருகிறார்.

இவ்வளவு அனுபவம் கொண்டவரிடம் எப்படி வாலாட்டமுடியும்?

எல்லாவற்றிற்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ் இந்துக் கல்லூரியில் கற்று, பல்கலைக்கழகம் சென்றஒரு யாழ் முஸ்லீம் என தன்னைக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்பவர் இந்த இக்பால்.

இலங்கையின் சார்பில் அழைக்கப்பட்ட ஏனையஊடகவியலாளர்களான சுனந்த தேசப்பிரிய, நடராஜா குருபரன், ராதிகா தேவகுமார் ஆகியோரும் தமது கருத்துக்களைத்தெளிவாகவே வலியுறுத்தியிருந்தனர்.

ஆயினும், ஒரு முஸ்லிமாக இருந்தும் நீதியின்பால் நின்ற இக்பால் வாழ்க!!

No comments:

Post a Comment