சுபவீ..... ஒரு மனநோய் வைத்தியநிபுணர்?
சுபவீ என்று அழைக்கப்படும் பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன் அவர்களுக்கு ஒரு பகிரங்கமடல்.
ஐயா! அண்மையில் மனநோய் என்பதற்கு நீங்கள் கொடுத்திருந்த வரைவிலக்கணம் மிகவும் அருமையாகவிருந்தது.
அதாவது, ‘மீனவர்கள் சிங்களரால் கொல்லப்படுவதற்கு, திராவிடமே காரணம் ‘ என்று யாராவது சொன்னால், அதுவே ’ஒருவகை மனநோய்க்கான அறிகுறி’ என்ற உங்கள் கண்டுபிடிப்பு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியதொன்றுதான்.( நோபல்?| கின்னஸ்?)
எனினும், ’பேராசிரியர் எனும் நிலையிலிருந்து நீங்கள் , மனநோய்வைத்திய நிபுணர் எனும் அவதாரம் எடுத்தது எப்போது?’ என்பதுதான் எமக்குப்புரியவில்லை.
நீங்களே உதிர்த்த தத்துவத்தின் அடிப்படையில் , உங்கள் முதுகையே ஒருமுறை திரும்பிப்பாருங்கள் ஐயா!
மனநோயாளி யார் என்பது தானாகவே புரியும்.
நினைவிருக்கிறதா சுபவீ அவர்களே?
பார்வதியம்மாள் திருப்பியனுப்பப்பட்ட விவகாரத்தில்,
தோழர் தியாகுவுக்கு நீங்கள் என்ன பதில் கொடுத்திருந்தீர்கள்?
”இந்த நேரத்தில் முதல்வரை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும்?”
இது நீங்களே வெளியிட்ட தகவல்தான்.
இந்தப்பதில் சரியானதுதானா?
முதல்வர் என்றாலே, ’மக்களுக்காகத் தனது உடல், பொருள், ஆவி என்று அத்தனையையும் அர்ப்பணித்துக்கொண்டவர்’ என்பதுதான் பொருள்.
அதிலும் உங்கள் முதல்வரோ அனைத்துக்கும் ஒருபடிமேலே உள்ளவர் _ (உங்கள் கருத்துப்படி).
அதாவது, தமிழ்மொழி இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறதென்றால், அஃது அவராற்றான். உலகத்தமிழினத்துக்கே
ஒப்பற்ற ஒரு தலைவர் அவர் _ (உங்கள் கருத்துப்படி)
பார்வதியம்மாள் உலகத்தமிழினத்தின் ஓரங்கமில்லையா?
ஒரு நோயாளியாக வாசல்வரை வந்த தமிழ்த்தாயை, வரவேற்க ஓடோடிச்செல்லவேண்டியவரல்லவா அவர்?
பார்வதியம்மாளோ, வயதான ஒரு நோயாளி ; உங்கள் முதல்வரும் அப்படியா?
நாலாவது வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கத்துடிக்கும் ஒரு இளைஞனல்லவா உங்கள் முத்தானமுதல்வர்?
தமிழுக்காகவே உயிரைத்தக்கவைத்துக்கொண்டிருக்கும் அவரெல்லாம்,நேரம் காலம் பார்க்கலாமா?
இதை அவரே மறந்தாலும் , அவருக்கு மந்தி(ரி) போலியங்கும் உங்களைப்போன்றவர்கள் நினைவூட்டவேண்டாமா?
அடுத்து, நீங்கள் அதில் குறிப்பிட்டிருப்பது : இலண்டனிலிருந்து ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதில் உதவி செய்யுமாறு கேட்டதற்கு, நீங்கள் ஏதோ ‘கிடுக்குப்பிடி‘ கேள்வி கேட்டு மடக்கிவிட்டதுபோன்ற எக்காளத்தொனியுடன் கூடியது.
அவர் கேட்டது ஒரேயொரு கேள்வி ; அதற்கு நீங்கள் கொடுத்ததோ மூன்று வெவ்வேறான பதில்கள் _ அதிலும் ஒருசில கேள்வி வடிவிலேயே.
அதில் முக்கியமானதொன்று : ”இப்போதுதான் கருணாநிதியையும் என்போன்றவர்களையும் உங்களுக்கு ஞாபகம்வந்ததா?” என்பதுதான்.
இதில், அந்த ‘ என்போன்றவர்கள் ‘ என்ற சொற்றொடரின்மூலம் எதைக்கருதினீர்கள் வீரபாண்டியரே?
நிச்சயமாக, ‘ துரோகிகள் ‘ என்பதைத்தானே இதிற் சொல்லாமற் சொல்லியிருக்கிறீர்கள்?
சாதாரணர்களான எமக்கே புரிவது, பேராசிரியரான உங்களுக்குப் புரியாமற்போகுமா?
இது எப்படி இருக்கிறது தெரியுமா?
”வீடு பற்றி எரிகிறது ; தீயை அணைக்க உதவிசெய் “ என்று கேட்டால், “ நீ நேற்றே சொல்லியிருந்தால் அணைத்திருப்பேன் ‘ இன்று நேரமில்லை “ என்பது போலல்லவா இருக்கிறது?
இதையெல்லாம் பார்த்தால், மனநோய் உள்ளவன் சொல்வது போல் தெரியவில்லையா உங்களுக்கு?
இனி, பிரபாகரனின் பெற்றோரை, ’இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது’ என்று ஜெயலலிதா கடிதம் எழுதியதைக்கண்டிக்காதவர்கள்... என்று பழையபுராணம் பாடுகிறீர்களே!
அந்தநேரம் நீங்கள் எங்கு போயிருந்தீர்கள்?
புலிகளின் பணத்தில் உல்லாசப்பயணம் மேற்கொள்பவர் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அளவுக்கு, தீவிர(?)_ புலி ஆதரவாளராக அறியப்பட்டவர்தானே நீங்கள்?
ஒருவார்த்தை கண்டித்துப்பேசியதுண்டா?
ஏன்? அதிகம் வேண்டாம் ; நீங்கள் இன்று தூக்கிப்பிடிக்கும் திமுக கூட எவ்விதமான எதிர்ப்பும் காட்டவில்லை என்பதுதான் உண்மை.
ஏற்கெனவே ‘ இம் என்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்’ என்றிருக்கும் இந்தியாவில், அன்று தடாபோடா என்று என்னென்னமோ கொடுஞ்சட்டங்களெல்லாம் இருந்தது நீங்கள் அறியாததா?
நீங்கள்கூட அதில் நேரடியாகப்பாதிக்கப்பட்டவர்தானே?
இதில் யாரால் வாய்திறக்கமுடியும்?
‘ ஜெயலலிதா நெஞ்சில் குத்தினார் ;கருணாநிதி முதுகில்அல்லவா குத்திவிட்டார் ‘
இந்தப்பொன்மொழி ஞாபகத்தில் இருக்கிறதா? இதை உதிர்த்தவர் வேறு யாருமில்லை ;சாட்சாத் சு.ப.வீரபாண்டியன் என்கிற நீங்கள்தான் ஐயா! நினைவாற்றல் மிகுந்தவரல்லவா நீங்கள்? எனவே, புலம்பெயெர் தொலைக்காட்சியொன்றில், அன்று திருவாய் மலர்ந்தருளியதை நிச்சயமாக மறந்திருக்கமாட்டீர்கள்.
அவ்வப்போது மனதிற்தோன்றுவதையெல்லாம் பேசுகிறீர்கள்....
உங்களைத்தவிர மற்றவர்களெல்லாம் , நினைவாற்றலே அற்றவர்கள் என்று நீங்களே முடிவெடுத்துவிடுகிறீர்கள்............
இதுமட்டும் மனநோயாகத்தெரியவில்லையா உங்களுக்கு ?
இனி, விடயத்துக்கு வருவோம்.
அன்றாட வயிற்றுப்பிழைப்புக்காக, காற்று, மழை, வெயில் என்றெல்லாம்பாராது, கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை , ஏதோ தெருநாய்களைச்சுட்டுத்தள்ளுவதுபோல, சிங்களக்கடற்படை சுடுவதும், அதற்கு உங்கள் முதல்வர் அழகுதமிழ்தேடி, அவரது சொக்கத்தங்கம் சோனியாவுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதுவும்கூட உங்களுக்குப் பெரிதாகப்படவில்லை.
உயிருக்காகப்போராடும் ஒருவனைக்காப்பாற்ற, அம்புலன்ஸ் எனப்படும் அவசரஉதவி வண்டிக்கு யாராவது கடிதம் எழுதி அனுப்பினால், அந்த நபரை என்னென்பது?
அதைத்தானே உங்கள் முதல்வர் செய்துகொண்டிருக்கிறார்?
இந்த மனநோயைக் கண்டுகொள்ளாமல்விடுவதற்காக, அங்கிருந்து எவ்வளவு கிடைத்தது உங்களுக்கு?
யாரோ சென்னையில் ஒரு பதாதை வைத்துவிட்டார்கள் என்று , அதற்கு மனநோய்ப்பட்டம் சூட்டுகிறீர்கள்.
‘ திராவிடத்தின் பெயரால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால், இப்படிப் படுகொலைகள் தொடர்கின்றன’
இந்தக்கூற்றில் என்ன தவறு உள்ளது என்று இப்படிப்புலம்புகிறீர்கள்?
ஒருவேளை இதையே,
’திராவிடத்தின் பெயரால் சென்னையில் மழைபெய்யவில்லை’
என்று பதாதை வைத்திருந்தால், நீங்கள் சொன்னதில் நியாயம் இருந்திருக்கும்.
ஆனால், திராவிடத்தின்பெயரால் தமிழன் ஏமாற்றப்படுகிறான் என்பது தமிழகஅரசியலை அறிந்தஅனைவரும் அறிந்ததொன்றுதானே!
மாறிமாறி ஆட்சிக்குவரும் திராவிடக்கட்சிகள், தமிழர்நலன்களைப் புறக்கணிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள, பூதக்கண்ணாடியாவேண்டும்?
மாறாக, மலேசியாவின் பினாங்குமாநில துணைமுதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி போன்ற, தமிழுணர்வாளர் ஒருவர் தமிழகத்தின் முதல்வரானால், காவிரிப்பிரச்சினை தொடங்கி , மீனவர் பிரச்சினைவரை எப்போதோ முடிவு கிடைத்திருக்கும்.
இப்போது சொல்லுங்கள் _ யார் மனநோயாளி?
தயவுசெய்து உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் _ ஒரு மனநோய்வைத்திய நிபுணராக.
இஃதே உங்களுக்கும் நல்லது ; தமிழினத்துக்கும் நல்லது.
இப்படிக்கு
சிவம் அமுதசிவம்
தெளிவான பதில்கள்.
ReplyDeleteஇந்தத் திராவிட முன்னேற்றம் போய் இன்னொரு முன்னேற்றம் வந்தால் இவர்களின் தமிழ் வியாபாரம்
பின்னேற்றம் அல்லது பின்னடைந்து விடுமே என்ற கவலையில் பிதற்றுகிறார்கள். அவ்வளவுதான்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
சுபவீக்கு ஒரு சொல்லடி. கட்டுரை அருமை.
ReplyDelete