எம் தமிழ் உறவுகளே அடுத்த தலைமுறையை ஆற்றலுள்ள தமிழர்களாக மேலெழ வழி சமைப்போம்.

Friday, November 18, 2011

முதலாவது மாவீரர்நாள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட ,
1976 ம் ஆண்டிலிருந்து, தாயக விடுதலைக்காய் தமதின்னுயிரை ஈகம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளின் அளப்பரிய தியாகங்களையெல்லாம் , அவ்வப்போது உரியமுறையில் கௌரவித்து வந்த விடுதலைப்புலிகள், காலப்போக்கில் அதற்கென்றே ஒரு நாளைப் பிரகடனப் படுத்தினர். 
அதாவது, 1989 ம் ஆண்டு கார்த்திகைத்திங்கள் 27 ம் நாள் முதன்முதலாகத் தமிழீழத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் மாவீரர்களுக்கான 
அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த ’கார்த்திகை 27’ என்பது, அவ்வமைப்பின் முதற்களபலியான 
மாவீரன் செ.சத்தியநாதன் எனும் இயற்பெயரைக்கொண்ட 
லெப்.கேணல் சங்கர் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட தினம் எனும் குறியீட்டுடனேயே தேர்ந்தெடுக்கப்பட்டது. 
எனினும் மேலதிக ஒரு காரணமாக : தலைவர் பிரபாகரன் பிறந்தநாளான 
கார்த்திகை 26 ம் இணைக்கப்பட்டது.
1982 இல் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு , படுகாயங்களுடன் குருதி சொட்டச்சொட்டத் தப்பியோடிவந்து, சிகிச்சைக்காகத் தமிழகம் கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி,
தலைவரின் மடியிலேயே உயிர்துறந்த 
அந்த உன்னதப்போராளியை மறக்கமுடியாமற்றான் 
13 ஆண்டுகள் கழித்து , அவ்வமைப்பு இக்கௌரவத்தை அவருக்கு வழங்கியது.
உலகறிய ’மாவீரர்நாள்’ பிரகடனப்படுத்தப்பட்டது 1989 இல் என்றாலும்,
அவ்வெண்ணக்கருவானது, அவர் பலியான 
ஓராண்டு நிறைவு தினமாகிய
1983 கார்த்திகை 27 
இலேயே விடுதலைப்புலிகளிடம் தோன்றியிருந்தது. 
மிகக்குறைவான உறுப்பினர்களையே கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் , யாழ்ப்பாண நகரத் தெருக்களின் சுவர்களையெல்லாம் அலங்கரித்த, அஞ்சலிக்கவிதைகளிற் சிலவற்றை 
இதிற்காணலாம்.


1. மீளாத் துயிலில் ஆழ்ந்தநம் தோழா!
           மீண்டு மிவண்வா! சத்தியநாதா!
     நாளா னாலும் நாமுனை மறவோம்.
            நாட்கள் சென்றால் நாமுனைத் தொடர்வோம்!
    தூளாய்ப் போகும் துட்டரின் சட்டம்!
            தூக்கி யெறிந்திடுவோம் எம திஷ்டம்!
    காளான் போலும் கட்சிக ளில்லை
           காண்போம் முடிவில் தனித் தமிழீழம்!

2.   விடைகொண்ட வீரா! வீறுடை வேங்கை
                 விண்ணிலே வாழும் சத்தியநாதா!
      குடைகின்ற தையா குமுறிடும் நெஞ்சம்!
                 கூடிடும் நாளோ ஓராண்டு காலம்!
      மடையினை வென்ற வெள்ளமா யோடும்
                மனதில்நாம் கொண்ட இலட்சியம் யாவும்
     தடையினை வென்று தாயகம் காப்போம்!
               தரணியிற் காண்போம் தனித் தமிழீழம்!

3.   விடிகின்ற வேளை வெளிவரும் அந்த
              வெள்ளியைப் போலும் விடுதலைப் போரின்
      அடித்தள மானாய் அன்பின்நம் தோழா!
              ஆவியை ஈந்தாய் சத்தியநாதா!
     கொடியவர்எதிரி இராணுவம் வசம்நீ
              கொடுத்திட வில்லை ஆயுதம் தன்னை
    கடிதினில் வந்தாய் - நம்வசம் தந்தாய்
            காலனோ டேனோ காதலிற் சென்றாய்?
                                                                 கவிதை ஆக்கம்: சிவம் அமுதசிவம்

அப்படிப் பார்த்தால், முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட ’ மாவீரர்நாள் ‘
1983 கார்த்த்கை 27 எனவும் கொள்ளலாம்.


No comments:

Post a Comment